ஹைதராபாத் மட்டன் பிரியாணி சமையல்

05-03-2020 10:00 AM

தேவைப்படும் பொருள்கள் :

மட்டன் - கால் கிலோ, பிரியாணி அரிசி - 1 கோப்பை, வெங்காயம் - 2, பச்சை மிளகாய் - 8, எண்ணெய் - கால் கோப்பை +2 மேஜைக்கரண்டி, நெய் - ஒன்றரை மேஜைக்கரண்டி, இஞ்சி, பூண்டு விழுது - 2 மேஜைக்கரண்டி, வெங்காய விழுது - 1 மேஜைக்கரண்டி, பப்பாளி விழுது - அரை தேக்கரண்டி, தயிர் - அரை கோப்பை, மிளகாய்த்தூள் - 1 தேக்கரண்டி, கரம் மசாலா தூள் - அரை தேக்கரண்டி, மஞ்சள் தூள் - அரை தேக்கரண்டி, பிரியாணி இலை - 2, புதினா இலை - சிறிதளவு, ஏலக்காய் - 6, இலவங்கம் - 6, பட்டை - 4. ஜாதிக்காய்த்தூள் - 1 சிட்டிகை, ஜாதிபத்திரி - 2, உப்பு - தேவையான அளவு.

செய்முறை:

வெங்காயத்தைத் தோலுரித்து அதையும் பச்சை மிளகாய், புதினா இலை ஆகியவற்றையும் பொடியாக நறுக்கிக் கொள்ளுங்கள். பிரியாணி தயாரிப்பதற்காக வாங்கி வரும் கறி, தொடைக்கறியாக இருக்கவேண்டும்.

ஒரு பெரிய பாத்திரத்தில் மட்டனைப் பெரிய துண்டுகளாக நறுக்கிப் போடுங்கள். கீறிய பச்சை மிளகாய், இஞ்சி, பூண்டு விழுது, வெங்காய விழுது, பப்பாளி விழுது, தயிர், மிளகாய்த் தூள், கரம் மசாலா தூள், மஞ்சள்தூள், பிரியாணி இலை, சிறிதளவு புதினா இலை ஆகியவற்றைச் சேர்த்து இரண்டு மேஜைக்கரண்டி எண்ணெயையும் ஊற்றி நன்றாகக் கலந்து தனியே வைத்துவிடுங்கள்.

பாதி ஏலக்காய், இலவங்கம், பட்டை, ஜாதிக்காய்த்தூள், ஜாதிபத்திரி ஆகியவற்றைச் சேர்த்து மிக்ஸியில் போட்டு அரைத்து அதையும் அந்தப் பாத்திரத்தில் போட்டு நன்கு கலந்து மூன்று அல்லது நான்கு மணி நேரம் வரை ஊற வைத்துவிட வேண்டும்.

ஒரு சிறிய மைக்ரோவேவ் பாத்திரத்தில் ஒரு மேஜைக்கரண்டி எண்ணெயை ஊற்றி அதில் நறுக்கிய வெங்காயத்தைப் போட்டு மைக்ரோ உயர்வில் மூன்று நிமிடம் வைத்து எடுங்கள்.

ஒரு பெரிய மைக்ரோவேவ் பாத்திரத்தில் மீதமுள்ள எண்ணெயையும், நெய்யையும் ஊற்றி மசாலாவில் ஊறும் மட்டனை அப்படியே கொட்டிப் பாத்திரத்தை மூடி மைக்ரோ உயர்வில் மூன்று நிமிடம் வையுங்கள்.

பின்னர் கால் கோப்பை தண்ணீரை ஊற்றிப் பாத்திரத்தை மூடி மைக்ரோ உயர்வில் பதினைந்து நிமிடம் வையுங்கள். இடையில் இருமுறை நன்கு கலந்துவிட வேண்டும்.   கறி நன்கு  வேகவேண்டியது அவசியம். தேவைப்பட்டால் மேலும் சிறிது தண்ணீரைச் சேர்த்துக்கொள்ளலாம்.

அதன்பின் அதை ஓவனிலிருந்து எடுத்து வைத்து விட்டு மற்றொரு பெரிய மைக்ரோவேவ் பாத்திரத்தில் அரிசியைக் கலந்து போடுங்கள். இரண்டு கோப்பை தண்ணீர், ஒரு மேஜைக்கரண்டி, எண்ணெய் ஆகியவற்றையும் மீதமுள்ள ஏலக்காய், இலவங்கம், பட்டை ஆகிவற்றையும் சேர்த்து ஓவனில் மைக்ரோ நடுத்தர உயர்வில் பத்து நிமிடம் வையுங்கள். பிறகு அதை எடுத்து நீரை அடித்து விட்டு ஒரு தேக்கரண்டி உப்பைக் கலந்து தனியே வைத்துவிடுங்கள்.

மூன்றாவதாக ஒரு பெரிய மைக்ரோவேவ் பாத்திரத்தை எடுத்து அதில் மட்டன் கலவையைக் கொட்டுங்கள். அரிசிசாதம், வதங்கிய வெங்காயம், மீதமுள்ள புதினா இலை ஆகிவற்றைப் பரவலாகப் போட்டு ஒரு மேஜைக்கரண்டி எலுமிச்சம்பழச் சாறையும் ஊற்றிக் கலந்து ஓவனில் மைக்ரோ நடுத்தர உயர்வில் பன்னிரண்டிலிருந்து பதினைந்து நிமிடம் வரை வைக்கவேண்டும்.

பிரியாணி நன்கு வேகவில்லை என்றால் மூன்று மேஜைக்கரண்டி சுடுநீரைத் தெளித்து மைக்ரோ நடுத்தர உயர்வில் மேலும் ஐந்து நிமிடம் வைக்கலாம்.

பிரியாணி வெந்ததும் எடுத்து சிறிது குங்குமப்பூவைச் சூடான பாலில் கரைத்து மேலே தெளித்து ஐந்து நிமிடத்திற்குப் பிறகு சுவையான ஹைதராபாத் பிரியாணியை வெள்ளரிக்காய் - வெங்காயம் - தயிர் பச்சடியுடன் சுடச்சுடப் பரிமாறுங்கள்.

சமைப்பதற்கு தேவைப்படும் நேரம் 46 நிமிடம்.
Trending Now: