ஏப்ரல் 1ந்தேதி முதல் பாரத் தரநிலை VIக்கு ஏற்ப பெட்ரோல், டீசல் விற்பனை: இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் தயார்

28-02-2020 07:35 PM

மும்பை

   வரும் ஏப்ரல் முதல் தேதியிலிருந்து இந்தியன் ஆயில் கார்ப்பரேசன் பெட்ரோல் பங்குகள் எல்லாம் இந்திய தரநிலை 6-க்கு இணங்க உற்பத்தி செய்யப்பட்ட உயர் ரக பெட்ரோல், டீசலை மட்டுமே விற்பனை செய்யும் என்று இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் தலைவர் சஞ்சீவ் சிங் மும்பையில் செய்தியாளர்களிடம் இன்று கூறினார்.

பிப்ரவரி மாதம் இரண்டாவது வாரத்திலேயே இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் இந்திய தர நிலையை 6க்கு ஏற்ப பெட்ரோல், டீசலை உற்பத்தி செய்ய த் தொடங்கிவிட்டது.

புதிய தரம் உயர்த்தப்பட்ட பெட்ரோல் டீசலை இந்தியாவின் மூலை முடுக்குகளில் எல்லாம் உள்ள தங்கள் பெட்ரோல் பங்குகளுக்கு கொண்டு செல்ல டாங்கர் லாரிகளும் கண்டெய்னர்களும் தயராக உள்ளன.  அதன் பெட்ரோல் பங்குகளும் தயாராக உள்ளன. ஏப்ரல் முதல் தேதியிலிருந்து புதிய இந்திய தரநிலை 6 கொண்ட பெட்ரோல் டீசல் பெட்ரோல் மட்டுமே விற்பனை நிலையங்களில் கிடைக்கும் என சஞ்சீவ் சிங் கூறினார்.

புதிய தரம் உயர்த்தப்பட்ட பெட்ரோல் டீசல் 70 பைசா முதல் ரூ1.2 0 வரை கூடுதலான விலையில் பெட்ரோல் பங்குகளில் விற்கப்படும் என ஏற்கனவே செய்தி வெளியானதை செய்தியாளர்கள் சுட்டிக்காட்டினர்.

விலை உயர்வு நிச்சயம் இருக்கும். ஆனால் அந்த விலை உயர்வு நுகர்வோரால் தாங்கக் கூடியதாகவே இருக்கும் என சஞ்சீவ் சிங் கூறினார்.

 புதிய உயர்ந்த தரம் உள்ள பெட்ரோல் டீசல் உற்பத்தி செய்ய எண்ணெய் கம்பெனிகள் ஒவ்வொன்றும் ஆயிரக்கணக்கான கோடி ரூபாய்களை சுத்திகரிப்பு நிலையங்களில் முதலீடு செய்துள்ளன.

எண்ணெய் கம்பெனிகளின் ஒட்டுமொத்த கூடுதல் முதலீடு ரூ 35 ஆயிரம் கோடி ஆகும். இதில் 17 ஆயிரம் கோடி ரூபாய் இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் மட்டுமே முதலீடு செய்துள்ளது.

முதலீட்டுக்கு ஏற்ற லாபத்தை சம்பாதிக்க வேண்டும் என இந்திய எண்ணெய் கம்பெனிகள் நினைக்கவில்லை. பெட்ரோல் டீசல் தரத்தை உயர்த்துவது தங்களது தேசிய கடமை என நினைக்கின்றன என்று சஞ்சய் சிங் கூறினார்.

இந்திய தரநிலை நான்கில் 10 லட்சத்துக்கு ஐம்பது பகுதிகள் என்ற அளவில் கந்தகக் கலப்பு இருந்தது. இந்த கந்தகத்தின் அளவு இந்திய தரநிலை ஆறில் பத்து லட்சத்துக்கு பத்து பகுதிகளாக குறைக்கப்பட்டு விடும். இதன் மூலம் சுற்றுச்சூழல் மாசு குறைக்கப்படும் என சஞ்சீவ் சிங் கூறினார்.

 ஹிந்துஸ்தான் பெட்ரோலியம் கார்ப்பரேஷன் பிப்ரவரி 27ஆம் தேதியிலிருந்து நாங்கள் இந்திய தரநிலை 6 கொண்ட பெட்ரோல் டீசல் விற்க தயாராகி விட்டோம் என அறிவித்துள்ளது.ஹிந்துஸ்தான் பெட்ரோலியம் கார்ப்பரேஷனில் விற்பனை நிலையங்கள் எல்லாம் மார்ச் மாதம் முதல் தேதியிலிருந்து கூடுதல் தரம் உள்ள பெட்ரோல், டீசலை மட்டுமே விற்பனை செய்யும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

பாரத் பெட்ரோலியம் மட்டுமே இன்னும் தங்கள் தயார் நிலை குறித்த அறிவிப்பினை வெளியிடவில்லை.

இன்றுள்ள நிலையில் கூடுதல் தரம் உள்ள பெட்ரோல் டீசல் கூடுதலான விலையில் விற்பனைக்கு வருவது உறுதி செய்யப்பட்டுள்ளது. ஆனால் விலை உயர்வு எவ்வளவு என்பது மட்டும் இன்னும் உறுதி செய்யப்படவில்லை.Trending Now: