டில்லியில் உளவுத்துறை அதிகாரி மரணம் : ஆம் ஆத்மி கவுன்சிலர் மீது கொலை வழக்கு பதிவு

28-02-2020 01:27 PM

புதுடெல்லி

   குடியுரிமை சட்டத்திருத்தம் தொடர்பாக டில்லியில் நடந்த கலவரத்தில் உளவுத்துறை அதிகாரி அன்கிட் சர்மா படுகொலை செய்யப்பட்டார். அவரது கொலைக்கு காரணமாவர் என சந்தேகிக்கப்படும் ஆம் ஆத்மி கவுன்சிலர் தாஹிர் உசேன் மீது டில்லி போலீசார் கொலை வழக்கு பதிவு செய்துள்ளனர்.

டில்லியில் குடியுரிமை சட்டத்திருத்தத்தின் ஆதரவாளர்கள் மற்றும் எதிர்ப்பாளர்கள் இடையே கடந்த 23ம் தேதி ஏற்பட்ட மோதல் கலவரமாக மாறியது.

அதைத் தொடர்ந்து 4 நாட்களாக வடகிழக்கு டில்லியில் பல வன்முறை சம்பவங்கள் நடைபெற்றன. இதில் தலைமை காவலர் ரத்தன் லால் மற்றும் உளவுத்துறை அதிகாரி அன்கிட் சர்மா உட்பட 38 பேர் பலியாகினர். 200க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர்.

உளவுத்துறை அதிகாரியான அங்கித் சர்மாவின் உடல் வடகிழக்கு டெல்லி சந்த்பாக் பகுதியில் அவரது வீட்டின் அருகே உள்ள கால்வாயில் புதன்கிழமை கண்டெடுக்கப்பட்டது.

உளவுத்துறை அதிகாரி அங்கித் சர்மா மரணத்திற்கு அவரது குடும்பத்தினர் ஆம் ஆத்மி கட்சி கவுன்சிலர் தாஹிர் உசேன் தான் காரணம் என குற்றம் சாட்டி உள்ளனர். இதை தாஹிர் உசேன் மறுத்துள்ளார்.

இந்நிலையில் டில்லி போலீசார் நேற்று தாஹிர் உசேனுக்கு எதிராக கொலை மற்றும் கலவர வழக்கு பதிவு செய்து உள்ளனர்.

மேலும் ஆம் ஆத்மி கட்சியின் முதன்மை உறுப்பினர் பதவியில் இருந்து தாஹிர் உசேன் இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளார்.Trending Now: