டில்லி கலவரத்தில், மசூதி, தர்கா சூறையாடல் : பொதுமக்கள் குற்றச்சாட்டு

27-02-2020 05:16 PM

புதுடில்லி,

  வடகிழக்கு டில்லியில் ஏற்பட்ட கலவரத்தின் போது அந்த பகுதியில் இருந்த ஒரு மசூதி மற்றும் தர்கா கலவரக்காரர்களால் சூறையாடப்பட்டு தீயிட்டு கொளுத்தப்பட்டதாக பொதுமக்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.

கடந்த 4 நாட்களாக டில்லியில் நடைபெற்று வரும் கலவரத்தில் இதுவரை 34 பேர் கொல்லப்பட்டுள்ளனர்.

கலவரக்காரர்கள் இஸ்லாமியர்களின் வீடுகள் குறிவைத்து தாக்குவதாகவும் பாதிக்கப்பட்ட இஸ்லாமியர்களை உள்ளூர் இந்துக்கள் தங்கள் வீடுகளில் புகலிடம் அளித்து உதவி வருவதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்நிலையில் செவ்வாய்க்கிழமை மதியம் அசோக் நகர் பகுதியில் உள்ள ஒரு மசூதியும் சாந்த் பாக் பகுதியில் அமைந்துள்ள சாந்த் பீர் பாபாவின் தர்காவும் சூறையாடப்பட்டு தீயிட்டு கொளுத்தப்பட்டதாக நேற்று உள்ளூர் மக்கள் புகார் அளித்துள்ளனர்.

இந்த சம்பவத்தை உள்ளூர்வாசிகள் யாரும் செய்திருக்கமாட்டார்கள் வெளி ஆட்கள் தான் செய்திருக்க வேண்டும். சாந்தி பீர் பாபாவின் தர்காவில் முஸ்லிம் மட்டுமல்லாமல் இந்துக்கள் பலரும் வழிபடுவது வழக்கம் என உள்ளூர்வாசிகள் தெரிவித்துள்ளனர். இந்த சம்பவத்தால் மிகவும் வேதனை அடைந்துள்ளதாகவும் அவர்கள் கூறியுள்ளனர்.

கலவரத்தில் ஈடுபட்டோர் முஸ்லிம்கள் மட்டுமல்லாமல் இந்துக்கள் அதிகம் வாழும் பகுதியிலும் வன்முறையில் ஈடுபட்டுள்ளனர். இந்த கலவரத்தால் மின்சாரம், குடிநீர், உணவு பற்றாக்குறையால் இரு  சமூகத்தினரும் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதாக உள்ளூர்வாசிகள் தெரிவித்துள்ளனர்.

 



Trending Now: