போலீசாரால் தாக்கப்பட்ட ஜாமியா மிலியா மாணவர் நஷ்ட ஈடு கேட்டு மனு : அரசு பதிலளிக்க உயர்நீதிமன்றம் உத்தரவு

27-02-2020 04:59 PM

புதுடில்லி,

  டில்லியில் போலீசார் நடத்திய தாக்குதலில் காயமடைந்த ஜாமியா மிலியா இஸ்லாமியா பல்கலைகழக மாணவர் முகமது முஸ்தபா நஷ்ட ஈடு கேட்டு டில்லி உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார். மனுவை விசாரித்த நீதிபதிகள் இது குறித்து பதிலளிக்கும்படி மத்திய, மாநில அரசுகள் மற்றும் டில்லி காவல்துறைக்கு உத்தரவிட்டுள்ளனர்.

கடந்த ஆண்டு டிசம்பர் 15ம் தேதி குடியுரிமை சட்டத்திருத்தத்திற்கு எதிராக டில்லியில் மாணவர்கள் போராட்டம் நடத்தினர். போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்கள் கல்வீச்சில் ஈடுபட்டதால் போலீசார் தடியடி நடத்தினர். இதனால் அங்கு கலவரம் வெடித்தது.

அதைத் தொடர்ந்து பல்கலைகழகத்தில் நுழைந்த போலீசார் அங்கிருந்த மாணவர்கள் மீது தடியடி நடத்தினர். இதில் பல மாணவர்கள் காயமடைந்தனர்.

போலீசாரின் இந்த செயலுக்கு எதிர்க்கட்சிகள், மனித உரிமை ஆர்வலர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.

இந்நிலையில் அன்று நடைபெற்ற தாக்குதலில் காயமடைந்த முகமது முஸ்தபா என்ற மாணவர் ஒரு கோடி ரூபாய் நஷ்ட ஈடு கேட்டு டில்லி உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார்.

தன் சிகிச்சைக்கான செலவையும் மருத்துவமனைக்கு பயணம் மேற்கொண்டதற்கு ஆன செலவையும் அதிகாரிகள் வழங்க வேண்டும். போலீசாரின் செயலுக்கு எதிராக முதல் தகவல் அறிக்கை பதிவு செய்ய வேண்டும் என்று அந்த மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது.

முகமது முஸ்தபாவின் மனுவை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி டி.என்.படேல் மற்றும் நீதிபதி சி. ஹரி சங்கர் அடங்கிய அமர்வு இன்று விசாரித்தது.

விசாரணை முடிவில் மாணவரின் கோரிக்கைகள் குறித்து மத்திய அரசு, டில்லி அரசு மற்றும் டில்லி காவல்துறை பதிலளிக்க வேண்டும் என்று நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

இறுதியில் விசாரணை மே 20ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.

முகமது முஸ்தபாவுக்கு முன்பாக ஷயான் முஜீப் மற்றும் முகமது மின்ஹஜுதின் என்ற இரு மாணவர்கள் நஷ்ட ஈடு கேட்டு மனு தாக்கல் செய்துள்ளனர். இதில் முகமது மின்ஹஜுதினின் ஒரு பக்க பார்வை போலீசார் தாக்குதலில் பறிபோனது குறிப்பிடத்தக்கது.Trending Now: