அமித் ஷா பதவி விலக உத்தரவிடும்படி குடியரசு தலைவரிடம் காங்கிரஸ் மனு

27-02-2020 04:34 PM

புதுடில்லி,

   காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி தலைமையில் காங்கிரஸ் தலைவர்கள் குழுவொன்று இன்று குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்தை சந்தித்தது. அப்போது டில்லி கலவரத்தை தடுக்க தவறிய மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தன் பதவியை ராஜினாமா செய்ய உத்தரவிடும்படி குடியரசு தலைவரிடம் வலியுறுத்தினர்.

டில்லி கலவரம் தொடர்பாக நேற்று காங்கிரஸ் காரிய கமிட்டி கூட்டத்தில் நிறைவேற்றிய தங்கள் தீர்மான்ங்களை ராம்நாத் கோவிந்திடம் சமர்ப்பித்தனர்.

மேலும் மத்திய அரசுக்கு ராஜ தர்மத்தை நினைவுப்படுத்தும்படி குடியரசு தலைவரிடம் சோனியா காந்தி வலியுறுத்தினார்.

சோனியா காந்தியுடன் முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங், காங்கிரஸ் மூத்த தலைவர்கள் குலாம் நபி ஆசாத், அகமது படேல், ப.சிதம்பரம், கே.சி.வேணுகோபால், ரந்தீப் சிங் சுர்ஜேவாலா, ஆனந்த் சர்மா, பிரியங்கா காந்தி ஆகியோர் உடன் சென்றனர். 

பின்னர் ராஷ்டிரபதி பவனுக்கு வெளியே செய்தியாளர்களை சந்தித்த சோனியா காந்தி மத்திய அரசும் டில்லி அரசும் கலவரத்தை கட்டுப்படுத்தாமல் அமைதி காத்ததாக குற்றம்சாட்டினார்.

டில்லி கலவரத்தில் இதுவரை 34 பேர் கொல்லப்பட்டுள்ளனர். வணிகம் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. இந்த கலவரத்தை தடுக்க நடவடிக்கை எடுக்காமல் தன் கடமையை நிறைவேற்ற மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தவறிவிட்டார். எனவே அவர் தன் பதவியை ராஜினாமா செய்ய ஜனாதிபதி உத்தரவிட வேண்டும் என சோனியா காந்தி கூறினார்.

சோனியாவை தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய மன்மோகன் சிங்,  ‘‘கடந்த 4 நாட்களாக டில்லியில் ஏற்பட்ட கலவரம் குறித்து குடியரசு தலைவருக்கு விவரித்தோம். இந்த சம்பவம் மிகவும் கவலைக்குரியது, அவமானத்திற்குரியது. டில்லியில் நிலைமையை கட்டுப்படுத்துவதில் மத்திய அரசு முழு தோல்வியை சந்தித்துள்ளது’’ என மன்மோகன் சிங் குற்றம்சாட்டினார்.Trending Now: