கொரனோ வைரஸ் பாதித்த ஜப்பான் கப்பலில் இருந்த 119 இந்தியர்கள் நாடு திரும்பினர்

27-02-2020 03:59 PM

புதுடில்லி,

  ஜப்பானில் கொரனோ வைரஸால் பாதிக்கப்பட்ட சொகுசு கப்பலில் தங்கியிருந்த 119 இந்தியர்கள் மற்றும் 5 வெளிநாட்டினர் இன்று ஏர் இந்தியா விமானம் மூலம் இந்தியா திரும்பினர்.

ஜப்பானின் யோகோஹமா துறைமுகத்தில் நிறுத்தப்பட்டிருந்த டையமண்ட் பிரின்ஸ்சஸ் என்ற சொகுசு கப்பலில் கொரனோ வைரஸ் பரவியதால் துறைமுகத்திலேயே கப்பல் தனிமைப்படுத்தப்பட்டது. அதில் பயணம் செய்த அனைவருக்கும் மருத்துவ பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.

மொத்தம் 3,711 பேர் பயணித்த அந்த கப்பலில் 138 இந்தியர்களும் அடக்கம். அவர்களில் 16 பேருக்கு கொரனோ வைரஸ் பாதிப்பு இருந்தது தெரியவந்தது. அவர்கள் அனைவருக்கும் தேவையான மருத்துவ சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

கப்பில் உள்ள இந்திய பயணிகளை அழைத்து செல்வதற்கான அனுமதி கிடைத்ததைத் தொடர்ந்து கப்பலில் பயணித்த 119 இந்தியர்கள் மற்றும் 5 வெளிநாட்டினர் ஏர் இந்தியா விமானம் மூலம் இன்று இந்தியா வந்தடைந்தனர்.

அவர்கள் அனைவரும் மனேசாரில் உள்ள இந்திய ராணுவத்தின் மருத்துவ நிலையத்தில் கண்காணிப்பில் மற்றவர் தொடர்பின்றி  14 நாட்கள் இருப்பார்கள். அவர்களுக்கு தொடர்ந்து பரிசோதனை நடைபெறும். நோய் தொற்று இல்லை என உறுதி செய்யப்பட்ட பின்பே அவர்கள் விடுவிக்கப்படுவார்கள்.

ஏர் இந்தியா விமானம் மூலம் வந்த 5 வெளிநாட்டினரில் இரண்டு பேர் இலங்கையை சேர்ந்தவர்கள். மற்ற மூவரும் நேபாளம், தென் ஆப்பரிக்கா மற்றும் பெரு நாட்டை சேர்ந்தவர்கள்.

சொகுசு கப்பலில் பணியாற்றும் 3 இந்தியர்கள் ஏர் இந்தியா விமானம் மூலம் நாடு திரும்பவில்லை. அவர்கள் அனைவரும் ஜப்பான் அரசு விதித்துள்ள கால கெடு வரை மருத்துவர்கள் கண்காணிப்பில் இருக்க முடிவு செய்துள்ளனர் என மத்திய அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சீனாவில் இருந்து 76 இந்தியர்கள் நாடு திரும்பினர்

கொரனோ வைரஸ் பாதிப்பு முதலில் கண்டறியப்பட்ட சீனாவின் வுஹான் நகரில் இருந்து 76 இந்தியர்கள் மற்றும் 36 வெளிநாட்டினரை இந்திய விமானப்படை விமானம் இன்று இந்தியாவுக்கு அழைத்து வந்தது.

புதன்கிழமை அன்று 15 டன் மருத்துவ உபகரணங்களுடன் சீனாவுக்கு பயணமான சி-17 குளோப் மாஸ்டர் -3 விமானம் இன்று இந்தியா திரும்பும் போது 76 இந்தியர்கள் உட்பட 112 பேரை அழைத்து வந்தது.

அவர்களில் 23 பேர் வங்காளதேசத்தை சேர்ந்தவர்கள். மேலும் சீனாவை சேர்ந்த 6 பேர், மியான்மர் மற்றும் மாலத்தீவை சேர்ந்த 2 பேர், தென் ஆப்பரிக்கா, அமெரிக்கா மற்றும் மடகாஸ்கரை சேர்ந்த தலா ஒருவர் என 3 பேர் இந்திய விமானப்படை விமானம் மூலம் பத்திரமாக அழைத்துவரப்பட்டனர்.

இந்தியர்களை அழைத்து வந்த இந்திய விமானப்படை விமானம் கடந்த வாரமே தயார் நிலையில் இருந்த போதும் சீனாவிடம் இருந்து அனுமதி கிடைக்கவில்லை. சீன அரசு இந்திய விமானத்திற்கு அனுமதி அளிப்பதில் வேண்டுமென்றே காலதாமதம் செய்வதாக மத்திய அரசு குற்றம்சாட்டியது. இதற்கு சீன அதிகாரிகள் மறுப்பு தெரிவித்தது குறிப்பிடத்தக்கது.

இதற்கு முன்பாக இரண்டு ஏர் இந்தியா விமானங்கள் மூலம் வுஹான் நகரில் இருந்து 650 இந்தியர்கள் தாயகம் அழைத்து வரப்பட்டனர்.

 Trending Now: