டில்லி வன்முறை வழக்கை விசாரித்த நீதிபதி முரளிதர் இடமாற்றம் : காங்கிரஸ் கண்டனம்

27-02-2020 02:18 PM

புதுடில்லி,

   டில்லி வன்முறை வழக்கை விசாரித்த டில்லி உயர் நீதிமன்ற நீதிபதி முரளிதர் நேற்று பஞ்சாப் - அரியானா உயர்நீதிமன்றத்திற்கு பணியிட மாற்றம் செய்யப்பட்டார். இதற்கு காங்கிரஸ் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.

டில்லியில் கடந்த 4 நாட்களாக குடியுரிமை சட்டத்திருத்தம் தொடர்பாக நடைபெற்ற கலவரத்தில் இன்று வரை 34 பேர் உயிரிழந்துள்ளனர்.
இதற்கிடையில் டில்லி கலவரத்தில் காயமடைந்தவர்களை மருத்துவமனைக்கு கொண்டு செல்வதில் சிரமம் இருப்பதாக வழக்கறிஞர் ஒருவர் செவ்வாய்க்கிழமை இரவு டில்லி உயர்நீதிமன்ற நீதிபதி முரளிதருக்கு தகவல் தெரிவித்தார்.
அதைத் தொடர்ந்து நீதிபதி முரளிதர் தன் இல்லத்திலேயே நள்ளிரவு 12.30 மணிக்கு அவசர விசாரணை நடத்தினார். காயமடைந்தவர்கள் மருத்துவமனைக்கு அழைத்து செல்ல போலீசார் உதவி செய்யும்படி உத்தரவிட்டார்.

மேலும் கலவரத்தில் காயமடைந்தவர்களின் விவரங்கள் அடங்கிய அறிக்கையை சமர்ப்பிக்கும்படி டில்லி போலீசாருக்கு ஆணையிட்டார்.

மறுநாள் நீதிபதி முரளிதர் தலைமையிலான அமர்வு டில்லியில் வன்முறை தூண்டும் வகையில் பேசிய 3 பாஜக தலைவர்களான பர்வேஷ் வர்மா, கபில் மிஸ்ரா மற்றும் அனுராக் தாகூர் ஆகியோரை கைது செய்ய கோரி தொடரப்பட்ட வழக்கை விசாரித்தது.

அப்போது வெறுப்புணர்வை தூண்டும் வகையில் பேசிய 3 பாஜக தலைவர்கள் மீது டில்லி போலீசார் வழக்கு பதிவு செய்யாததற்கு நீதிபதி முரளிதர் கடும் கண்டனம் தெரிவித்தார்.

இந்நிலையில் நேற்று மாலை நீதிபதி முரளிதரை இடமாற்றம் செய்யும் கடிதத்தை மத்திய சட்டத்துறை வெளியிட்டது. அதில் பஞ்சாப் – அரியானா உயர்நீதிமன்றத்திற்கு நீதிபதி முரளிதரை இடமாற்றம் செய்வதாக தெரிவிக்கப்பட்டிருந்தது. ஆனால் அவர் எப்போது பொறுப்பேற்க வேண்டும் என்ற தகவல் அதில் வெளியாகவில்லை.

தலைமை நீதிபதி எஸ்.ஏ.பாப்டேவை ஆலோசித்த பின் குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த் இந்த முடிவை எடுத்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

காங்கிரஸ் கண்டனம்

டில்லி உயர்நீதிமன்ற நீதிபதி முரளிதர் திடீரென்று இடமாற்றம் செய்யப்பட்டதற்கு காங்கிரஸ் கட்சி கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. இந்த நடவடிக்கை மூலம் பாஜக தன் பழிவாங்கும் அரசியலை வெளிப்படுத்திவிட்டது என காங்கிரஸ் செய்தி தொடர்பாளர் ரந்தீப் சிங் சுர்ஜேவாலா தெரிவித்துள்ளார்.

இது குறித்து டுவிட்டரில் பதிவிட்டுள்ள காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி இடமாற்றம் செய்யப்படாத துணிச்சலான நீதிபதி லோயாவை நினைவுக்கூர்வதாக கூறியுள்ளார்.

குஜராத்தில் நடைபெற்ற சோரபுதின் ஷேக்கின் போலி என்கவுண்டர் வழக்கை விசாரித்த நீதிபதி லோயா திடீரென்று மாரடைப்பால் காலமானார். அவர் அமித் ஷாவுக்கு எதிராக ஆணை பிறப்பித்ததால் கொலை செய்யப்பட்டதாக காங்கிரஸ் குற்றம்சாட்டி வருவது குறிப்பிடத்தக்கது.

நீதிபதி முரளிதரின் இடமாற்றம் குறித்து தனது டுவிட்டரில் பதிவிட்டுள்ள பிரியங்கா காந்தி, ‘‘நள்ளிரவில் நீதிபதி முரளிதரை இடமாற்றம் செய்திருப்பது அதிர்ச்சி அளிக்கவில்லை. ஆனால், நிச்சயமாக வருத்தமாகவும் வெட்கமாகவும் உள்ளது’’

‘‘லட்சக்கணக்கான இந்தியர்கள், நேர்மையான நீதித்துறை மீது நம்பிக்கை கொண்டுள்ளனர். நீதித்துறைய கட்டுப்படுத்தவும், அதன் மீதான நம்பிக்கையை தகர்க்கவும் மேற்கொள்ளப்படும் அரசின் முயற்சிகள் வருந்ததக்கவை’’ என்று பிரியங்கா காந்தி டுவிட்டரில் தெரிவித்துள்ளார்.

ரவிசங்கர் பிரசாத் விளக்கம்

நீதிபதி முரளிதரின் இடமாற்றம் உச்சநீதிமன்ற கொலீஜியத்தின் பரிந்துரையின் படி வழங்கப்பட்டது. இந்த பரிந்துரை பிப்ரவரி 12ம் தேதியே வழங்கப்பட்டுவிட்டது. ஒரு நீதிபதியை இடமாற்றம் செய்யும் முன்பு அவரது விருப்பத்தை கேட்பது தான் நடைமுறை என சட்டத்துறை அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் இன்று விளக்கமளித்துள்ளார்.

மேலும் நீதித்துறையில் வழக்கமாக நடைபெறும் ஒரு செயலை அரசியலாக்குவதன் மூலம் நம் நீதித்துறை மீது காங்கிரஸ் கட்சிக்கு உள்ள மதிப்பு நன்றாக தெரிகிறது. இந்திய மக்களால் போற்றப்படும் நீதித்துறை மீது தொடர்ந்து தாக்குதல் நடத்துவதில் காங்கிரஸ் அதிக ஆர்வம் காட்டி வருகிறது என குற்றம்சாட்டியுள்ளார்.

இதைத் தவிர நீதிபதி லோயா குறித்து ராகுல் காந்தி பதிவிட்டுள்ளதற்கு ரவிசங்கர் பிரசாத் பதிலளித்துள்ளார்.

நீதிபதி லோயா வழங்கிய தீர்ப்பு உச்சநீதிமன்றத்தால் தீர்த்து வைக்கப்பட்டுவிட்டது. இந்நிலையில் உச்சநீதிமன்ற தீர்ப்பு குறித்து கேள்வி எழுப்பும் ராகுல் காந்தி தன்னை உச்சநீதிமன்றத்தை விட உயர்ந்தவராக கருதுகிறார் போலும் என ரவிசங்கர் பிரசாத் விமர்சித்துள்ளார். Trending Now: