கலவரத்தால் பாதிக்கப்பட்ட வடகிழக்கு டில்லியில் பால், காய்கறிகள் விலை அதிரடியாக உயர்வு : மக்கள் அவதி

26-02-2020 08:55 PM

புதுடில்லி,

குடியுரிமை சட்டத்திருத்தம் தொடர்பாக கலவரம் ஏற்பட்ட டில்லியின் வடகிழக்கு பகுதிகளில் உணவு பொருட்களுக்கு கடும் தட்டுப்பாடு நிலவுவதால் பால், காய்கறிகளின் விலை அதிரடியாக உயர்ந்துள்ளது. இதனால் மக்கள் கடும் அவதிக்கு ஆளாகியுள்ளனர்.

வடகிழக்கு டில்லியில் தொடர்ந்து 4 நாட்களாக நடைபெற்று வரும் வன்முறை சம்பவங்கள் காரணமாக பெரும்பாலான கடைகள் மூடப்பட்டுள்ளன.

திறந்திருக்கும் சில கடைகளிலும் பொருட்கள் விரைவாக விற்று தீர்ந்துவிடுகின்றன. காய்கறி, பழங்கள், பால் போன்ற பொருட்களின் விநியோகம் கடந்த 2 நாட்களாக நிறுத்தப்பட்டுள்ளதால் கடும் தட்டுப்பாடு நிலவுகிறது.

குறிப்பாக கலவரம் நடைபெற்ற ஜஃப்ராபாத், மவுஜ்பூர், பாபுர்பூர், நூரிலாஹி, யமுனா விஹார் ஆகிய இடங்களில் அத்தியாவசிய பொருட்களை வாங்க மக்கள் அதிக விலை கொடுக்க வேண்டிய நிர்பந்தம் ஏற்பட்டுள்ளது.

உதாரணமாக லிட்டருக்கு ரூ.42 விற்பனையாகும் பால் ரூ.50க்கு விற்கப்படுகிறது.

வன்முறை காரணமாக வடகிழக்கு டில்லியில் 144 தடை உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது. மேலும் கலவரக்காரர்களை கண்காணிக்க 4 பேருக்கு மேல் யாரும் ஒன்று கூடக்கூடாது என கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது. இந்த கட்டுப்பாடுகளால் பொதுமக்கள் அத்தியாவசிய பொருட்களை வாங்குவதில் சிரமத்தை சந்தித்து வருகிறார்கள்.

மேலும் காய்கறி விற்பவர்கள் பால் விநியோகம் செய்பவர்கள் கலவரம் நடந்த பகுதிகளுக்கு வர தயங்குவதால் உணவு பொருட்களை வாங்க மக்கள் நீண்ட தூரம் செல்ல வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.

தற்போது வன்முறை சம்பவங்கள் குறைந்து நிலைமை கட்டுப்பாட்டுக்குள் வர துவங்கியுள்ளதால் விரைவில் இயல்பு நிலை திரும்பும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.Trending Now: