மங்களம் தரும் செவ்வாய் -

19-02-2020 07:06 PM

மங்களம் தரும் செவ்வாய் -

தற்போது இளைஞர்களுக்கு பொதுவாக மூன்று பிரச்சினைகள்தான் அதிகம் எழுகின்றன.

நல்ல வேலை – கை நிறைய சம்பளம்.

திருமணம் – காதல் திருமணம், சொந்த இடத்தில் திருமணம்.

சொந்த வீடுகட்டுதல்.

இந்த மூன்று கேள்விகள் அடிக்கடி எழுகின்றது. (இவற்றுக்கெல்லாம் சத்தியபுரி ஜோதிட மாமணி குரு ஏற்கனவே பதில் அளித்துள்ளார்.)

மேற்குறிப்பிட்ட கேள்விகளுக்கு ஜோதிட ரீதியாக பதில் சொல்வதென்றால், ஒருவரின் ஜாதகத்தில் செவ்வாய் அமைந்துள்ள இடத்தை பார்க்க வேண்டும்.

தற்போது திருமணம் அமைவது குறித்து இக்கட்டுரையில் காண்போம்.

12 ராசிகள், 27 நட்சத்திரங்கள், 9 கிரகங்கள். இதில்

ஒருவரின் ஜனன கால ஜாதகத்தில் செவ்வாய் அமைந்துள்ள வீட்டை முதலில் பார்ப்பதன் முக்கியக் காரணம், செவ்வாய் தோஷம் உள்ளதா என்பதுதான். திருமணத்திற்கு ஆணுக்கும் பெண்ணுக்கும் குறைந்தது 7 பொருத்தங்கள் அவசியம். உங்கள் ஜாதகத்தில் செவ்வாய் தோஷம் இருந்தால் நீங்கள் விரும்பிய திருமணம் நடைபெறாது.

செவ்வாய் கிரகத்தின் சிறப்பு

செவ்வாய்க்கு பல பெயர்கள் உள்ளன. (அண்ட பேரண்டத்தில் உள்ள செவ்வாய் கிரகம் சிவப்பு நிறத்தில் இருப்பதால் தான் இந்த பெயர் பெற்றது என குறிப்பு உள்ளது)

குஜன் –  (கு = பூமி, ஜன் = பிறந்தவன், (பூமாதேவியின் மகன்)  

ரத்தக்காரன், கு = நிறம் (ரத்தம்) செவ்வாய் சிவந்த நிறம் கொண்டவர் என்பதால் சிகப்பு நிறத்திற்கு இவரே அதிபதி ஆகிறார்.

பூமி காரகன் என்பதால் மண்ணில் செய்யக் கூடிய விஷயங்கள் மண்ணால் செய்யக் கூடிய பொருள்கள் அடங்கும்.

சண்டைக்காரன் (ஆயுதம்) ஆயுதம் சம்பந்தப்பட்டவைகள், காவல்துறை, இராணுவம், துப்பாக்கி போன்ற தற்காப்பு ஆயுதங்களையும் பயன்படுத்துபவர்களுக்கும், மருத்துவ சிகிச்சைக்காக கத்தியையும் கையாள்பவர்களுக்கும் வெற்றி நிச்சயம்.

போர் தளபதி செவ்வாய். அதனால் ஒருவரது கோபம், வீரம் போன்ற தன்மைக்கு முக்கிய காரண கர்த்தா செவ்வாய்.

அண்டத்தில் உள்ளது பிண்டத்தில் உள்ளது என்பர். (செவ்வாய் கிரகத்தில் உள்ள மூலக்கூறுகளின் இறுதி வடிவம் மனிதனின் ரத்தத்தில் உள்ள மூலக்கூறுகளுடன் ஒத்துப்போகிறது என தற்போது அறிவியல் விஞ்ஞானிகள் ஆய்வில் தெரிவித்துள்ளனர்). ஜாதகத்தில் செவ்வாய் இருக்கும் இடத்தை வைத்து ஒருவரின் ரத்தம் எந்த குரூப்பை சார்ந்தது என்பதையும் கணித்துவிடலாம்.

நம் உடலில் ஓடும் ரத்தத்துக்கு செவ்வாய்தான் அதிபதி ஆகிறார்.

செவ்வாய் தோஷம் என்றால் என்ன?

ஜாதகத்தில் செவ்வாய் தோஷம் இருக்கிறது என்ற ஒரே காரணத்துக்காக பலருடைய வாழ்க்கையில் திருமணம் தடைப்பட்டு, காலதாமதமாக நடைபெற வாய்ப்பு உள்ளது.

ஒருவரது ஜனன ஜாதகத்தில் செவ்வாய் ஆதிக்கம் பெற்றவர்களையே செவ்வாய் தோஷம் உள்ளவர்களாக ஜோதிட சாஸ்திரத்தில் கூறப்படுகிறது.

ரத்தக்காரகன் செவ்வாய் ஆதிக்கம் உள்ளவர்களுக்கு மற்றவர்களை விட சற்றே கூடுதலான உணர்ச்சி இருக்கும்.  அது சிலருக்கு கோப உணர்ச்சியாகவோ, சிலருக்கு வேக உணர்ச்சியாகவோ, சிலருக்கு காம உணர்ச்சியாகவோ இருக்கும்.

செவ்வாய் ஆதிக்கம் பெற்றவர்களுக்கு தாம்பத்தியத்தில் அதிக விருப்பம் இருக்கும். (இதைத்தான் தோஷம் என்கிறார்கள்)

செவ்வாய் தோஷம் உள்ளவர்களுக்கு, தோஷம் இல்லாதவர்களை திருமணம் செய்து வைத்தால், அவர்களுக்கிடையில் தாம்பத்திய ரீதியான பிரச்சனைகள் ஏற்படும் என்பதால், செவ்வாய் தோஷம் உள்ள ஆண் அல்லது பெண் இருவருக்கும் தோஷம் உள்ளவர்களையே ஜோடி சேர்க்க வேண்டும் என்கின்றனர்.

ஒருவருக்கு தோஷம் இருந்து மற்றவர்க்கு தோஷம் இல்லை என்றால், அவர்களுக்கு திருமணம் செய்யக்கூடாது. தோஷம் இல்லாதவர்களுடன் திருமண நடைபெற்றால், அது திருமண வாழ்வில் பிரிவினையையோ அல்லது ஒருவரின் இறப்பையோ சந்திக்க நேரிடும்.

செவ்வாய் அமைந்த இடம்

செவ்வாய் தோஷத்தை லக்னத்திலிருந்தும், சந்திரனிலிருந்தும், பார்க்க வேண்டும் என பல ஜோதிட நூல்களில் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

ஆனால், லக்னத்திலிருந்து பார்க்கும் தோஷ அமைப்புதான் வலுவானது என்றும் கூறப்பட்டுள்ளது.

ஜாதகத்தில் லக்னத்திலிருந்து 2, 4, 7, 8, 12 ஆகிய இடங்களில் செவ்வாய் இருந்தால், இந்த அமைப்பிற்கு செவ்வாய் தோஷம் உள்ளது என்பது நிச்சயம்.

இந்த அமைப்பு கொண்ட ஆண், பெண் இருவரின் ஜாதகங்களை சேர்ப்பதன் மூலம் செவ்வாய் தோஷம் சமன் அடைகிறது.

ஆனால் 7ம் இடத்தில் உள்ள தனித்த செவ்வாய் மிகவும் ஆக்ரோஷம் கொண்டது. ஒற்றை கொம்பன் போல செயல்படும். அதை கட்டுப்படுத்துவது மிகவும் கடினம்

லக்கினத்திலிருந்து வீடு கணக்கீடு என்றால் என்ன?

ஜனன காலத்தில் ஒருவரது ஜாதகத்தில் லக்கினம் எந்த வீட்டில் இருக்கிறது அது தான் 1ம் வீடு. அந்த இடத்திலிருந்து வலது சுற்றாக பிற வீடுகளை எண்ணிக்கை செய்ய வேண்டும்.

படத்தில் காட்டியுள்ளபடி மீன ராசியில லக்னம், சந்திரன் உள்ளது. இது 1ம் வீடு, 

(மேஷம், ரிஷபம் என்ற வீட்டின் அடிப்படையில் கணக்கு கொள்ளக்கூடாது,) லக்னத்திலிருந்து 2ம் வீடு செவ்வாய் தோஷம் உள்ளது. (ஒருவர் பிறக்கும் நேரமே லக்னம். அது எந்த ராசியில் வேண்டுமானாலும் அமையலாம்)

2-ஆம் வீட்டில்  செவ்வாய் தோஷம்

வெவ்வேறு வீடுகளில் செவ்வாய் தோஷம் அமையப்பெறுவதால், உண்டாகும் விளைவுகள் 2-ஆம் வீட்டில் ஏற்படும் செவ்வாய் தோஷம்

இரண்டாம் வீடு என்பது தனது குடும்பத்தைப் பற்றிப் பேசுவதால், ஜாதகத்தார் தம் குடும்பத்தை விட்டு வெளியேற / தனிக்குடித்தனம் செல்ல அவர் விழைவார்.

கடுமையான மற்றும் ஆக்கிரமிப்பு செய்யும் குணம் கொண்ட செவ்வாய் கிரகமானது, ஒருவரின் ஜனன காலத்தில் 2ம் வீட்டில் இருப்பின், கடுமையான வார்த்தைகளைப் பயன்படுத்துபவராகவும், மற்றவர்களை ஆக்கிரமிப்பு செய்பவராகம் அந்த ஜாதகர் இருப்பார்.

4-ஆம் வீட்டில்  செவ்வாய் தோஷம்

இந்த நான்காம் இடமானது, உறவினர்கள் மற்றும் வீட்டு வசதிகள் பற்றிக் கூறும். வீட்டு மகிழ்ச்சியை / சுகத்தை இந்த வீட்டில் ஏற்படும் செவ்வாய் தோஷம் கெடுத்துவிடும். வீட்டில் மகிழ்ச்சி அற்றவராய் இருக்க நேரிடும்.

7-ஆம் வீட்டில் செவ்வாய் தோஷம்

பாலியல் பங்குதாரரைப் (ஆண் அல்லது பெண்) பற்றியும், ஒரு ஜாதகரின் பாலியல் மகிழ்வு பற்றியும் குறிக்கும். ஒரு ஜாதகருக்கு, இங்குள்ள செவ்வாய், மிகவும் கடுமையாக, படுக்கை அறையில், பாலியல் விஷயத்தில் விருப்பம்போல நடந்து கொள்வார் எனலாம்.

8-ஆம் வீட்டில் செவ்வாய் தோஷம்

8ஆம் வீட்டு செவ்வாய் திருமண வாழ்வின் நீட்சியைப் பற்றிக் குறிக்கும். கெடுதல் பயக்கும் செவ்வாய் இங்கு இருப்பின், தம்பதியர் இருவருள் ஒருவருக்கு ஏதேனும் ஒரு நோய்யால் திருமணப் பந்தத்தை முறித்து விடும் அல்லது இறப்பைத் தந்துவிடும்.

12-ஆம் வீட்டில்  செவ்வாய் தோஷம்

12ம் வீட்டு செவ்வாய், படுக்கை அறை சுகத்தைப் பற்றிக் குறிக்கும் வீடு இது. செவ்வாய் தோஷம் இந்த வீட்டில் இருப்பின் படுக்கை சந்தோஷத்தை ஏதேனும் ஒரு காரணத்தால் குறைத்துவிடும்.

செவ்வாய் தோஷம் இல்லை - விளக்கம்

ஒருவரின் ஜாதகத்தில் மேஷம், கடகம், விருச்சிகம், மகரம் ஆகிய ராசிகளில் செவ்வாய் இருந்து, அந்த இடம் தோஷத்தைக் குறிப்பிடும் 8ஆம் இடமாகவோ அல்லது 12ஆம் இடமாகவோ இருந்தாலும் தோஷம் இல்லை.

ஒருவரின் ஜாதகத்தில் சிம்மம் அல்லது கும்பத்தில் செவ்வாய் இருந்தாலும் செவ்வாய் தோஷம் இல்லை.

செவ்வாய் குருவுடன் சேர்ந்திருந்தாலும் தோஷம் இல்லை.

சனி, ராகு, கேது ஆகியோருடன் செவ்வாய் சேர்ந்திருந்தாலும் சனி, ராகு, கேது ஆகியோரால் பார்க்கப்பட்டிருந்தாலும் தோஷம் இல்லை.

களத்திர ஸ்தானத்தில்  (7ஆம் இடம்) செவ்வாய் இருந்து, அந்த ஸ்தானம் கடகமாகவோ அல்லது மகரமாகவோ இருந்தால் தோஷம் இல்லை. காரணம், கடகத்தில் செவ்வாய் நீசமடைகிறார், மகரத்தில் செவ்வாய் உச்சமடைகிறார்.

செவ்வாய் இருக்கும் 8வது இடம் தனுசு அல்லது மீனமாக இருந்தாலும், 12வது இடம் ரிஷபம், துலாமாக இருந்தாலும் செவ்வாய் தோஷம் இல்லை.

சந்திரனுடன் சிம்மம், கும்பம் ராசியில் செவ்வாய் இருந்தாலும் தோஷம் இல்லை

லக்னம், சந்திரன், சுக்கிரன் இவற்றுடன் 2, 4, 7, 8, 12 ஆகிய இடங்களில் செவ்வாய் இருந்து, சூரியன், குரு, சனி ஆகியோர் சேர்ந்து இருந்தாலும், பார்வை பட்டாலும் தோஷம் இல்லை.

செவ்வாய் வக்கிரம் அடைந்திருப்பின் தோஷம் இல்லை.

செவ்வாய் தோஷம் பற்றிய பயம் வேண்டாம்

ஜாதகத்தில் சுக்கிரன், செவ்வாய் பங்கு மிக முக்கியமானது எனலாம்.

செவ்வாய் கிரகத்திற்கு உரிய தெய்வம் முருகன்.

பெண் ஜாதகத்தில் செவ்வாய் கெட்டுப்போனால் ஆண்களால் பல பிரச்சினைகளைச் சந்திக்க நேருகிறது. கணவனுக்கு பாதிப்பை தரும்.

பலமுள்ள செவ்வாய் கணவரை அடக்கி ஆளவும், கணவருக்கு யோகத்தையும் தந்து விடுகிறது.

எனவே செவ்வாய் தோஷம் என்றாலே யாரும் உடனே பயந்துவிட வேண்டாம்.

செவ்வாய் தோஷ நிவர்த்தி 

செவ்வாய் தோஷம் ஒருவருக்கு இருந்து, ஒருவருக்கு இல்லை என்றால் திருமணம் செய்யக்கூடாது என்பது சாஸ்திரம்.

அதேசமயம், தோஷ நிவர்த்தி ஆகிவிட்டது என்பதற்காக செவ்வாய் தோஷமே இல்லாத ஜாதகங்களை சேர்க்கக் கூடாது.

லக்னத்தைப் பொறுத்தவரை கடக லக்னம், சிம்ம லக்னம் ஆகிய லக்னத்தில் பிறந்தவர்களுக்கு செவ்வாய் எங்கே இருந்தாலும் இந்த தோஷம் இல்லை. ஆண், பெண் இருவருக்கும் இந்த தோஷம் இருந்தாலும் திருமணம் செய்து வைக்கலாம் என்றும் சொல்வார்கள். ஆனால், பொதுவாக தோஷம் ஒருவருக்கு இருந்தாலும் சரி அல்லது இருவருக்குமே இருந்தாலும் சரி செவ்வாயை பார்த்து திருமணம் செய்ய வேண்டும்.

செவ்வாய் தோஷத்தால், இரண்டாம் திருமணத்திற்கும், விதவை ஆண் / பெண், மற்றும் விவாகரத்து ஆனவர்களுக்கும் பிரச்னை ஏதும் தராது.

பெண்ணிற்கு 28 வயதிற்குப் பிறகும், (செவ்வாய்க்கு முதிர்ச்சி வயது - 28), பெண்ணின் திருமணத்திற்கு முன்னரே செவ்வாய் தசை முடிந்திருந்தாலும் அல்லது 45 வயதுக்கு பிறகு செவ்வாய் திசை வந்தாலும், செவ்வாய் தோஷம் உள்ளதா என பார்க்க வேண்டிய அவசியம் இல்லை.

ஒருவரின் ஜாதகத்தில் சூரியனுடன் செவ்வாய் சேர்ந்திருந்தால் அந்த செவ்வாய் தனது முழு ஆதிக்கத்தையும் செலுத்த முடியாது. ஏனெனில் சூரியனின் தாக்கத்தால் செவ்வாயின் வீரியம் குறைந்துவிடும்.

செவ்வாய் யோகம்

செவ்வாய் குருவுடன் சேர்ந்திருப்பது குருமங்கள யோகம் ஆகும். மிகவும் விசேஷமான பலன்களைத் தரக்கூடியது.

செவ்வாய் சந்திரனுடன் சேர்ந்திருப்பது சந்திர மங்கள யோகம் ஆகும்.

செவ்வாய் திசை பலனையும் பிற கிரகங்களின் திசை பலன்களையும் அடுத்து வரும் கட்டுரைகளில் வாசகர்கள் காணலாம்.

ஜாதகத்தில் தங்களுக்கு எப்போது செவ்வாய் திசை என்பதை அறிந்து முருகப்பெருமானை வழிபட்டால் சிறிதளவு தோஷ நிவர்த்தியாகும்.


அடுத்த கட்டுரைகளில், வேலை, சுய தொழில், அல்லது பிறரிடம் வேலை பார்ப்பது பற்றியும், சொந்த வீடு அமைவது பற்றியும் காணலாம்.

வாசகர்களுடன்…

இது பெரிய கட்டுரைதான். அடுத்த பிற கட்டுரைகளில் குரு, சனியின் சாதகம் பாதகம் பற்றியும், ராகு-கேது கால சர்ப்ப தோஷம், சுக்கிரன், சூரியன், புதன், சந்திரன் (ராசி வீடு) பற்றியும் பார்க்கலாம்.

இந்த கட்டுரையை வாசித்தபோது உங்களுக்கு பயன் இருந்ததா? இல்லையா? என உங்கள் மனதில் தோன்றியதை உள்ளபடியே கமண்ட் செய்யுங்கள். அல்லது லைக் செய்யுங்கள் அதுதான் எனக்கு மேலும் உத்வேகத்துடன் எழுத உதவும்.

உங்களது ஜாதகத்தைப் பற்றி சந்தேகம் இருந்தால் ஒரே ஒரு வரியில் மட்டும் உங்கள் கேள்வியை 

http://www.dinamalarnellai.com/webextras/astrology  இந்த இடத்தில் கிளிக் செய்து

எங்களுக்கு எழுதி அனுப்புங்கள். உங்கள் சந்தேகங்களுக்கு எனது குரு சத்தியபுரி ஜோதிட மாமணி உடனடியாக பதில் தருவார்.
Trending Now:
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :