05-02-2020 02:40 PM
நடிகர்கள் : சிவா, வசுந்தரா காஷ்யப், மனோபாலா, மீரா கிருஷ்ணன் மற்றும் பலர்.
இசை : யதீஷ் மஹாதேவ், ஒளிப்பதிவு : சரவணன், எடிட்டிங் : டி.எஸ். சுரேஷ், தயாரிப்பு : 360டிகிரி பிலிம் கார்ப், திரைக்கதை, இயக்கம் : கிருஷ்ணன் ஜெயராஜ்.
டப்பிங் ஆர்ட்டிஸ்டாக இருக்கும் சிவா (சிவா) காதல் மற்றும் கல்யாணத்தில் நம்பிக்கை இல்லாதவன். சிவாவின் லட்சியமே வோல்க்ஸ்வேகன் கார் வாங்க வேண்டும் என்பதுதான். தனது அம்மாவின் (மீரா கிருஷ்ணன்) கட்டாயத்தால் விருப்பமில்லாமலேயே திருமணத்திற்கு சம்மதிக்கிறான். ரிப்போர்ட்டராக இருக்கும் மணப்பெண் அஞ்சலியை (வசுந்தரா காஷ்யப்) தெய்வ நம்பிக்கையுள்ள குடும்பப்பாங்கான பெண்ணாக நினைக்கிறார்கள். சிவாவின் நண்பன் ஒருவனின் திருமணத்தில் இருவரும் சந்திக்கிறார்கள். திருமணத்தை நிறுத்தும்படி மிரட்டும் சிவாவிற்காக அந்த நண்பனே அஞ்சலியை திருமணத்திற்கு அழைக்கிறான். சிவாவின் நினைப்பிற்கு மாறாக உண்மையில் துணிச்சலான பெண்ணான அஞ்சலியும் அந்த திருமணத்தை தடுக்க நினைக்கிறாள். திருமணத்தில் விருப்பமில்லாத சிவாவும் அஞ்சலியும் பிரிகிறார்கள். அஞ்சலி தான் கர்ப்பமாக இருப்பதாகவும், சிவா கிரிக்கெட் விளையாட்டின் போது விபத்தில் தான் ஆண்மை இழந்ததாகவும் பெற்றோரிடம் பொய் கூறி நிச்சயித்த திருமணத்தை தடுத்து விடுகிறார்கள். இருவரும் நிச்சயம் முறிந்ததை பப்பில் கொண்டாடுகிறார்கள். அடுத்த நாள் காலையில் இருவரும் ஓட்டல் அறையில் ஒன்றாக இருப்பதை அறிந்து அதிர்ச்சியடைகிறார்கள். சிவாவின் நண்பனான கவுரியின் திட்டமாக இருக்கும் என்று சந்தேகிக்கிறார்கள். சிசிடிவி காட்சிகள் மூலம் அது ஓர் சேட்டின் ஏற்பாடு என்று தெரிகிறது. அந்த பிரச்னை தீர்ந்ததும் சிவா அஞ்சலியை அவளது வீட்டில் விட்டுச்செல்கிறான். அஞ்சலிக்கு உடன் பணிபுரிபவருடன் திருமண ஏற்பாடு நடக்கிறது.
சிவாவின் தாயை சந்திக்கும் புரோக்கர் ராஜேஷ் கண்ணா (மனோபாலா) ஒரு கேம் ஷோ நடக்க இருப்பதாகவும் வெற்றி பெறுபவர்களுக்கு வோல்க்ஸ்வேகன் கார் பரிசு என்றும் கூறுகிறார். தனது இலட்சிய காருக்காக சிவா அஞ்சலியுடன் ஜோடியாக அந்த போட்டியில் கலந்து கொள்கிறான். அனைத்து சுற்றுக்களிலும் இருவரும் வெல்கிறார்கள். இதனிடையே அஞ்சலி சிவாவை நேசிக்கத் தொடங்குகிறாள். பரிசாக கிடைக்கும் காருக்காகத்தான் சிவா போட்டியில் கலந்து கொண்டதை அறிந்து வருந்தும் அஞ்சலி அவனை பிரிகிறாள். நண்பர்களின் அறிவுரையால் உண்மையை உணரும் சிவா அஞ்சலியின் காதலை புரிந்து கொள்கிறான்.
அஞ்சலியுடன் சேருவதற்காக ஒரு நாடக நடிகையை தனக்கு மணப்பெண்ணாக ஏற்பாடு செய்ய திட்டம் போடுகிறான். இவனது திட்டத்தை தெரிந்து சிவாவை கடத்தும் ராஜேஷ் கண்ணா, பின்னர் அவனை விடுவித்து அஞ்சலிக்கு இன்னொருவருடன் திருமணம் என்று கூறுகிறார். ரிஜிஸ்டர் ஆபீசில் அஞ்சலியின் திருமணத்தைப் பார்க்கும் சிவா மனமுடைந்து பார்க்குக்கு வருகிறான். அங்கு சிவா முன்பு பிளாஷ்மாப் நடனம் நடக்கிறது. சிவாவை ஆச்சரியப்படுத்துவதற்காக அஞ்சலியோடு மற்றவர்களும் போட்ட திட்டம் வெளிப்படுகிறது. சிவாவும் அஞ்சலியும் திருமணம் செய்து மகிழ்ச்சியோடு வாழ்கிறார்கள்.