28-01-2020 04:58 PM
நடிகர்கள் : ஜீவா, வினய், சந்தானம், திரிஷா கிருஷ்ணன், ஆண்ட்ரியா, நாசர், டி.எம்.கார்த்திக் மற்றும் பலர்.
இசை : ஹாரிஸ் ஜெயராஜ், ஒளிப்பதிவு : ஆர். மதி, எடிட்டிங் : பிரவீன் கே.எல், ஸ்ரீகாந்த், தயாரிப்பு : ஜி.கே.எம். தமிழ் குமரன், திரைக்கதை, இயக்கம்: ஐ.அஹமத்.
மனைவி தன்னை விட்டுப்பிரிந்து சென்றதால் கோபத்தில் இருக்கும் ஸ்ரீதர் (நாசர்) சிறுவனான மகன் கவுதமிடம் (ஜீவா) பெண்கள் அனைவரும் கெட்டவர்கள், சுயநலவாதிகள் என்று கூறி வளர்க்கிறார். தந்தையுடன் சென்னையில் குடியேறும் கவுதம், பேபி (சந்தானம்) மற்றும் ஸ்ரீயை (வினய்) சந்திக்கிறான். பதினைந்து வருடங்கள் கழித்தும் மூவரின் நட்பும் இணை பிரியாமல் தொடர்கிறது. விளம்பர ஏஜென்ஸி நடத்தும் நண்பர்கள் மூவரும் பார்ட்டிகளில் பொழுதை கழிக்கிறார்கள். புகழ்மிக்க ஓவியரான தந்தை ஸ்ரீதருடன் கவுதம் பேசுவதில்லை. பேச்சுலர் பார்ட்டி ஒன்றில் போதையில் இருக்கும் நண்பர்கள் திருமணம் செய்துகொள்வதில்லை என்று உறுதி எடுத்துக்கொள்கிறார்கள்.
நன்பர்களுக்கு வாய்ப்பு தரும் சன்னி (டி.எம். கார்த்திக்), விளம்பர படத்தில் உதவுவதற்காக ப்ரியாவை (த்ரிஷா) அனுப்பி வைக்கிறான். இண்டர்நேஷனல் மாடலான சோனியா (ஆண்ட்ரியா) இவர்களது விளம்பரத்திற்கு ஒப்பந்தமாகிறாள். கவுதமை விரும்பத் தொடங்கும் சோனியா படப்பிடிப்பின் இறுதியில் அவனது காதை கடித்துவிடுகிறாள். எரிச்சலாகும் கவுதம் அவளை அறைய, அவனுடன் இனி வேலை செய்யமாட்டேன் என்று எச்சரிக்கிறாள் சோனியா. கவுதமிற்கு ஆதரவாக பேசும் ப்ரியா சோனியாவின் தவறை சுட்டிக்காட்டுகிறாள். படப்பிடிப்பிற்கு பின்னர் போனில் பிரியாவிற்கு நன்றி கூறும் கவுதம், விபத்தில் சிக்கும் பிரியாவிற்கு உதவுகிறான்.
சிறிது நாட்களுக்குப் பிறகு பேபியும், ஸ்ரீயும் திருமணம் செய்து கொள்ள முடிவெடுக்கிறார்கள். உண்மை தெரிந்து கோபமடையும் கவுதம் இருவருடனும் நட்பை துண்டித்துக் கொள்கிறான். நன்பர்களின் திருமண நாளன்று பிரியாவிடம் பேசும் ஸ்ரீதர், கவுதமின் நலனை நினைத்து தான் இரண்டாவது திருமணம் செய்து கொண்டது பிடிக்காமல் மகன் தன்னிடம் பேசாமல் இருப்பதை தெரிவித்து அவனை அக்கறையுடன் பார்த்துக் கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறார்.
சன்னி, சோனியாவுடன் கவுதம், ப்ரியாவிற்கு அடுத்த வாய்ப்பு கிடைக்கிறது. சுவிட்சர்லாந்தில் படப்பிடிப்பு தொடங்கும் நேரத்தில் சோனியா முன்னர் நடந்ததை நினைவுபடுத்தி கவுதமை மன்னிப்பு கேட்கச்சொல்கிறாள். தன் மேல் தவறில்லை என்று கூறி கவுதம் மறுக்க, சோனியா நடிக்க மறுக்கிறாள். சோனியாவை வெளியேற்றும் கவுதம் பிரியாவை வைத்து படப்பிடிப்பை முடிக்கிறான். படப்பிடிப்பு நேரத்தில் இருவரும் நேசிக்கத் தொடங்குகிறார்கள். சுவிட்சர்லாந்திலிருந்து திரும்பும் இருவரும் ஏர்போர்ட்டில் பேபியையும், ஸ்ரீயையும் சந்திக்கிறார்கள். விமானத்தில் சந்தித்ததாக நன்பர்களிடம் பிரியாவை கவுதம் அறிமுகப்படுத்த கோபமாகும் ப்ரியா வெளியேறுகிறாள்.
வீடு திரும்பும் கவுதம் தந்தையை தேடி அவரது அறைக்குச் செல்கிறான். அவனது மகிழ்வான தருணங்களையும் அவரது ஆசையையும் தந்தையின் ஓவியங்களாக பார்த்து நெகிழும் கவுதம் அவரது உடல்நிலை தெரிந்து மருத்துவமனைக்கு விரைகிறான். மருத்துவர்கள் ஸ்ரீதரின் புற்றுநோயை குணப்படுத்த முடியாது என்று கூற மனமுடையும் கவுதமை நன்பர்கள் தேற்றுகிறார்கள். இந்த உண்மை முன்பே தெரிந்து அவரது மகிழ்ச்சிக்காகவும், அவரது ஆசைப்படி தங்களைப்போல் கவுதமும் மனம்மாறி திருமணம் செய்து கொள்ளவேண்டும் என்பதற்காக தாங்கள் இருவரும் மணமுடித்ததை சொல்கிறார்கள். நன்பர்கள் மூவரும் ஒன்றுசேர்ந்த நேரத்தில் ஸ்ரீதரை பார்ப்பதற்காக பிரியா மருத்துவமனைக்கு வருகிறாள். பிரியாவிடம் மன்னிப்பு கேட்கும் கவுதம் பிரியாவை காதலிப்பதை அனைவரது முன்பும் ஒப்புக்கொள்கிறான். ஸ்ரீதரின் ஆசைப்படி அவரது முன்னிலையில் பிரியா கவுதமின் நிச்சயம் நன்பர்களின் மகிழ்ச்சி ஆரவாரத்தோடு நடக்கிறது.