சசிகலா விரைவில் சிறையிலிருந்து வர வேண்டும் என்பதே எனது பிரார்த்தனை - அமைச்சர் ராஜேந்திர பாலாஜி

25-01-2020 02:59 PM

சென்னை,

சொத்துக் குவிப்பு வழக்கில் பெங்களூர் பரப்பன அக்ரஹார சிறையில்  சசிகலா அடைக்கப்பட்டார். சசிகலா விரைவில் சிறையிலிருந்து வர வேண்டும் என்பதே எனது பிரார்த்தனை என தமிழ்நாடு பால்வளத்துறை அமைச்சர் ராஜேந்திர பாலாஜி பேசியுள்ளார்.

மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா ஆட்சியில் இருந்தபோது வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக ஜெயலலிதா, சசிகலா, இளவரசி,  சுதாகரன் ஆகிய நான்கு பேர் மீது வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கில் 4 பேரும் தலா 4 வருட சிறை தண்டனை பெற்றனர். கடந்த 2017-ம் ஆண்டு பிப்ரவரி மாதம் பெங்களூர் சிறையில் அடைக்கப்பட்டனர்.

சசிகலா சிறை சென்று தற்போது இரண்டு வருடம் 10 மாதம் ஆகிவிட்டது. இன்னும் 1 வருடம் அவர் சிறையில் இருக்க வேண்டும். ஆனால் தண்டனையை முழுதாக அனுபவிக்கும் முன் அவர் சிறையில் இருந்து வெளியே வர வாய்ப்புள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

அமைச்சர் ராஜேந்திர பாலாஜி வரவேற்பு

சசிகலா சிறையில் இருப்பது குறித்தும், தேனி எம்.பி. ரவீந்திரநாத் குமார் கார் மீது தாக்குதல் நடத்தப்பட்டது குறித்தும் அமைச்சர் ராஜேந்திரா பாலாஜி, இன்று ஸ்ரீவில்லிபுத்தூரில் செய்தியாளர்களைச் சந்தித்தபோது கூறியதாவது:-

சசிகலா சிறையில் இருப்பது வருத்தம் அளிக்கிறது. அவர் சிறையில் இருந்து வெளியே வர வேண்டும்  என்பதே எனது பிரார்த்தனை. அவர் வெளியே வந்தால் மகிழ்ச்சியடைவேன். அவர் உடல் நிலை எப்படி இருக்கிறது என்று தெரிவியவில்லை. அவர் வெளியே வந்தால், கண்டிப்பாக அவரை சென்று வரவேற்பேன். சசிகலாவை சிறை தண்டனையிலிருந்து சட்ட ரீதியாக வெளியே கொண்டு வந்தால் அது மகிழ்ச்சிதான்.

வன்முறையால் அதிமுகவை அடக்க முடியாது. ரவீந்திரநாத் கார் மீது தாக்குதல் நடத்தியதை ஏற்றுக்கொள்ள முடியாது. ரவீந்திரநாத் நினைத்திருந்தால் திருப்பி அடித்திருக்க முடியும். எங்களுக்கு வீரம் இருக்கிறது. நாங்களும் சண்டை போடுவோம். நாங்கள் வீறு கொண்டால் சிங்கத்தைப் போல் சீறுவோம். அந்த அளவுக்கு அதிமுகவினர் கோழைகள் இல்லை. இதற்கு பின் திமுக இருக்கலாம் என்று சந்தேகம் எழுகிறது என்று குறிப்பிட்டார்.

அமைச்சர் பாண்டியராஜன்

சசிகலா சிறையில் இருந்து வெளியே வந்தால் எந்தக் கவலையும் இல்லை, அதிமுகவில் எந்த தலைவர் பதவியும் தற்போது காலியாக இல்லை.

சசிகலா வெளியே வந்தால் மகிழ்ச்சி என அமைச்சர் ராஜேந்திர பாலாஜி கூறியுள்ளது அவரது தனிப்பட்ட கருத்து என திருவேற்காட்டில் அமைச்சர் மாஃபா க. பாண்டியராஜன் பேட்டியில் தெரிவித்துள்ளார்.


சிறையில் இருந்து  வெளியே வரும் சசிகலாவோ, நானோ ஒருபோதும் துரோகிகளோடு இணைய வாய்ப்பில்லை என அம்மா மக்கள் முன்னேற்ற கழக பொது செயலாளர் டி.டி.வி. தினகரன் கடந்த சில நாட்களுக்கு முன்பு கூறியது இங்கு குறிப்பிடத்தக்கது.Trending Now: