டிஎன்பிஎஸ்சி குரூப் 4 முறைகேடுகள் நடந்தது எப்படி? சிறப்பு மைப் பேனாவால் விரியும் ஊழல் காவியம்

25-01-2020 01:11 PM

சென்னை,

   டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வில் தேர்விற்காக சில மணி நேரங்களில் எழுத்துகள் மறையக்கூடிய சிறப்பு மையினாலான பேனாவில் ஆப்செக்டிவ் டைப் வினாக்களுக்கு தேர்வர்கள் விடைகள் எழுதியது வெளிச்சத்திற்கு வந்துள்ளது. அந்த எழுத்துகள் மறைந்துவிட காலி இடத்தில் சரியான விடைகளை அதிகாரிகள் பின்னர் நிரப்பியது தெரிய வந்துள்ளது. அதனால் தேர்வு எழுதியவர்கள கூடுதல்  மதிப்பெண்களை பெற முடிந்துள்ளது.

டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வில் முறைகேட்டில் ஈடுபட்டதாக தேர்வர்கள் 99 பேரை டிஎன்பிஎஸ்சி தகுதிநீக்கம் செய்து உத்தரவிட்டுள்ளது. தேர்வு முறைகேட்டில் ஈடுபட்டவர்கள் மீது 6 பிரிவுகளில் சிபிசிஐடி வழக்கு பதிவு செய்துள்ளது.

கடந்த 2019-ம் ஆண்டு செப்டம்பர் மாதம் 1ம் தேதி தமிழ்நாடு முழுவதும் டிஎன்பிஎஸ்சி குரூப் 4 பதவிகளில் அடங்கிய பணிகளுக்கான எழுத்து தேர்வு நடைபெற்றது. இதற்கான தரவரிசை பட்டியல் கடந்த ஆண்டு நவம்பர் மாதம் வெளியிடப்பட்டது.

ராமநாதபுரம் மாவட்டம் ராமேசுவரம் (1606), மற்றும் கீழக்கரை (1608)யில் ஆகிய இரு தேர்வு மையங்களில் தேர்வு எழுதியவா்களில் மாநில அளவில் 40 பேர் முதல் 100 இடங்களில் முன்னிலை பிடித்தனர்.

சமூக இடஒதுக்கீடு ரீதியாக முன்னிலை பெற்றவர்களும் இந்த 2 தேர்வு மையங்களிலேயே தேர்வு எழுதியுள்ளனர். ஒரே மாவட்ட தேர்வு மையங்களில் முறைகேடு நடந்துள்ளதாக தேர்வர்கள் குற்றம்சாட்டினர். இது பெரும் சா்ச்சையை ஏற்படுத்தியது.

கீழக்கரை மையங்களில் தேர்வு எழுதியவர்களில் பெரும்பாலானவர்கள் வெளி மாவட்டங்களைச் சேர்ந்தவர்கள் என்றும், வெளி மாவட்டங்களில் இருந்து வந்து தேர்வு எழுதியவர்களில் முதல் 100 இடங்களில் முன்னிலை பெற்றிருப்பதும், 15 பேர் மாநிலங்கள் அளவில் முதல் 15 இடங்களில் தேர்ச்சி பெற்றிருப்பது பிற தேர்வு மையங்களில் தேர்வு எழுதியவர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

நேரடி விசாரணை

இந்த நிலையில் முதல் 40 பேரையும் நேரடியாக அழைத்து விசாரணை நடத்த முடிவு செய்த தோ்வாணையம், சம்பந்தப்பட்ட தோ்ச்சி பெற்ற நபா்களுக்கு கடிதம் அனுப்பியது. அதன்படி, தரவரிசையில் மாநில அளவில் முதல் சுமார் 40 பேரிடம், கடந்த கடந்த 13ம் தேதி நடைபெற்ற விசாரணையில் சம்பந்தப்பட்ட தேர்வர்கள் நேரில் ஆஜராகி விளக்கம் அளித்தனர்.

இந்நிலையில், குரூப் 4 தேர்வில் நடைபெற்ற முறைகேடு புகார் எதிரொலியாக சர்ச்சைக்குரிய 9 தேர்வு மையங்கள், ராமேசுவரம் பகுதியில் 5 தனியார் பள்ளிகள், ஒரு தனியார் பாலிடெக்னிக் கல்லூரி உள்ளிட்ட தேர்வு மையங்களை டிஎன்பிஎஸ்சி அதிரடியாக ரத்து செய்து கடந்த 23ம் தேதி உத்தரவிட்டது. மேலும் தேர்வாணையம் நடத்திய விசாரணையில் முறைகேடு நடந்திருப்பது உறுதி செய்யப்பட்டிருப்பதாகவும் தகவல் வெளியானது.

குரூப் 4 தேர்வில் முறைகேட்டில் ஈடுபட்டதாக ராமேசுவரம், கீழக்கரை தேர்வு மையங்களில் தேர்வு எழுதிய தேர்வர்கள் 99 பேரை தகுதிநீக்கம் செய்து உத்தரவிட்ட தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் (டிஎன்பிஎஸ்சி), அவர்களுக்கு வாழ்நாள் தடை விதித்து அதிரடி நடவடிக்கை எடுத்துள்ளது.

முறைகேடு நடந்தது எப்படி

குறிப்பிட்ட 2 மையங்களில் தேர்வு எழுதிய மாணவர்கள் இடைத்தரகரின் ஆலோசனைப்படி சில மணி நேரங்களில் எழுத்துகள் மறைக்கூடிய சிறப்பு மையிலான பேனாவை பயன்படுத்தி உள்ளனர்.

மாணவர்கள் அந்த பேனாவை பயன்படுத்தி விடைத்தாளில் தேர்வு எழுதி உள்ளனர். தேர்வு முடிந்த பின் அந்த விடைத்தாளில் சிறப்பு மையால் எழுதப்பட்ட எழுத்துக்கள் மறைந்த பின், சரியான விடையை அதிகாரிகள் எழுதி, தேர்வு தாள் கட்டுடன் சேர்த்துள்ளனர்.

ஒரு சிலர் விடைத்தாளில் எதையும் எழுதாமல் கொடுத்ததாகவும், அதை அந்த இரு வட்டாட்சியர் உதவியுடன் இடைத்தரகர்கள் எழுதியதாகவும் கூறப்படுகிறது.

இதற்காக அந்த அதிகாரிகள் ஒவ்வொருவரிடமிருந்தும் ரூ. தலா 10 முதல் 12 லட்சம் வரை  சேவை கட்டணமாக பெற்றது தெரியவந்தது.

இதுபோன்ற மோசடியை நாங்கள் சந்திருப்பது இதுவே முதல் முறை என்று ஒரு மூத்த புலன் விசாரணை அதிகாரிகள் கூறியுள்ளார்.

இதுபோன்று தற்பொழுது அதிகரிகள் துணையுடன் தேர்வு முறைகேடுகள் நடந்திருப்பது மக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

இரு வட்டாட்சியர் உள்பட 10 அதிகாரிகளிடம் சிபிசிஐடி போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்Trending Now: