இந்திய அரசியலமைப்புச் சட்டத்தை காப்பாற்றுவது இந்தியக் குடிமக்களின் பொறுப்பு: குடியரசு தின விழாவில் கெஜ்ரிவால் பேச்சு

25-01-2020 12:57 PM

புதுடெல்லி

இந்திய குடியரசின் அரசியலமைப்புச் சட்டத்தை காப்பாற்றுவது 130 கோடி இந்திய மக்களின் கடமையாகும் என டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் இன்று பேசினார்.

குடியரசு தினமான ஜனவரி 26ஆம் தேதி மத்திய அரசு டெல்லியில் சிறப்பாக விழா நடத்துகிற காரணத்தினால் டெல்லி அரசு ஜனவரி 25ஆம் தேதி குடியரசு தின விழாவைக் கொண்டாடுவது வழக்கம். ஒவ்வொரு ஜனவரி 25ஆம் தேதியும் டில்லி மாநில முதலமைச்சர் கொடியேற்றி டெல்லி குடிமக்களுக்கு உரையாற்றுவது வழக்கம். அதே போல இந்த ஆண்டும் சத்ரசல் அரங்கில் குடியரசு தின விழா கொண்டாட்டத்தை ஒட்டி தேசிய கொடியை ஏற்றி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் பேசினார்

இந்திய சுதந்திரத்திற்காக எண்ணற்ற தியாகங்களை செய்த நமது தலைவர்கள் சுதந்திரத்துடன் இந்திய அரசியலமைப்புச் சட்டத்தையும் நமக்கு பரிசாகத் தந்து இருக்கிறார்கள்.

இந்த அரசியலமைப்புச் சட்டத்தை முழுமையாக பாதுகாக்க வேண்டியது இந்தியாவின் குடிமக்களாகிய 130 கோடி ஜனங்களின் பொறுப்பாகும்.

இந்திய அரசியலமைப்புச் சட்டம் பாதுகாக்கப்பட்டால் நாடு எத்தகைய நெருக்கடியான சூழ்நிலையையும் மிகவும் எளிதாக கடக்க முடியும் என்று கெஜ்ரிவால் கூறினார்.

முந்திய ஆண்டுகளில் குடியரசு தினத்தன்று நான் உங்களோடு நீண்ட நேரம் பேச வாய்ப்பு கிடைத்தது. அதனால் பல கருத்துக்களை உங்களிடம் நான் தெரிவித்தேன். ஆனால் இந்த ஆண்டு டெல்லியில் நடக்க இருக்கும் சட்டமன்றத் தேர்தலில் காரணமாக தேர்தல் நடைமுறை விதிகள் அமல் செய்யப்பட்டுவிட்டன. அதனால் நான் நீண்டநேரம் பேச இயலாது என கெஜ்ரிவால் கூறினார்.

 தன்னுடைய உரையின் இறுதியில்  உணர்ச்சிமிகு பாடல் ஒன்றை அரவிந்த் கெஜ்ரிவால் உரத்த குரலில் பாடினார் .

பின்னர் பாரத் மாதா கி ஜே என்றும் இன்குலாப் ஜிந்தாபாத் என்றும் முழக்கமிட்டார்.

டெல்லி சட்டமன்றத்திற்கு வரும் பிப்ரவரி 8ஆம் தேதி தேர்தல் நடைபெற உள்ளது குறிப்பிடத்தக்கது.Trending Now: