ஈராக் தலைநகர் பாக்தாத்தில் ஷியா இனத்தவர் பேரணி ; அமெரிக்க ராணுவம் வெளியேற வலியுறுத்தல்

24-01-2020 08:42 PM

பாக்தாத்

ஈராக்கில் தலைநகரான பாக்தாத்தில் ஷியா வகுப்பைச் சேர்ந்த மதத்தலைவர் முக்தாதா அக் சாதிர்  விடுத்த அழைப்பை ஏற்று  இன்று பல்லாயிரக் கணக்கானவர்கள் கலந்து கொண்ட பேரணி நடைபெற்றது.

ஈராக் நாட்டில் உள்ள அமெரிக்க ராணுவம் முழுமையாக வெளியேற்றப்பட வேண்டும் என்று பேரணியில் கலந்து கொண்டவர்கள் கோஷமிட்டனர்.

ஈராக் நாட்டின் அரசை எதிர்த்து தொடர்ந்து ஆர்ப்பாட்டங்கள் நடைபெற்று வருகின்றன. இந்த ஆர்ப்பாட்டங்களுடன் இப்பொழுது அமெரிக்க ராணுவத்திற்கு எதிரான ஆர்ப்பாட்டமும் ஒன்று சேர்ந்து கொண்டது.

வெள்ளிக்கிழமை அதிகாலையில் இருந்து அமெரிக்க ராணுவ எதிர்ப்புப் பேரணியில் கலந்துகொள்ள ஆண்களும் பெண்களும் குழந்தைகளும் கூட்டம் கூட்டமாக வந்து தெருக்களில் சேர்ந்தனர்.

”நோ டு அமெரிக்கா” என்பது அவர்கள் ஒருமித்த கோஷமாக இருந்தது.

பாக்தாத் நகரின் மையப்பகுதியில் உள்ள மைய அரங்கத்திலிருந்து பேரணிக்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டன.

ஈரான், ஈராக் ராணுவ தலைவர்கள் அமெரிக்காவின் ஆளில்லா விமான தாக்குதலில் உயிரிழந்ததை தொடர்ந்து ஈராக் நாட்டின் நாடாளுமன்றத்தில் இருந்து  அமெரிக்க இராணுவம் வெளியேற வேண்டும் என்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

ஆனால் அந்தத் தீர்மானத்தை ஏற்க முடியாது என அமெரிக்கா கூறியது. அமெரிக்க வீரர்கள் தங்குவதற்கான படைத் தளங்களையும் பயிற்சி முகாம்களையும் நாங்கள் பெரும் செலவில் அமைத்து இருக்கிறோம். அதற்கான செலவுத் தொகையை ஈராக் அரசு தருமானால் உடனே வெளியேறுகிறோம் என அமெரிக்க ராணுவ உயர் அதிகாரிகள் தெரிவித்தனர்.

ராணுவத்திற்கு எதிரான பேரணியில் குடும்பம் குடும்பமாக ஈராக் நாட்டைச் சேர்ந்தவர்கள் கலந்து கொண்டது திருப்புமுனையாக அமைந்துள்ளது.Trending Now: