இந்தியாவின் நேரடி வரிகள் வருமானம் 20 ஆண்டுகளில் முதன் முறையாக சரிவு

24-01-2020 08:12 PM

புதுடெல்லி

இந்தியாவில் உள்ள தொழில் நிறுவனங்கள் மற்றும் கம்பெனிகள் மூலமாக வரும் வருமானமும் வருமான வரி மூலமாக கிடைக்கும் வருமானமும் கடந்த 20 ஆண்டுகளில் முதன்முறையாக குறையும் நிலை தற்போது ஏற்பட்டுள்ளது.

இதனை இந்திய நேரடி வரிகள் வருமான துறையைச் சேர்ந்த உயர் அதிகாரிகள் வெளிநாட்டு செய்தி நிறுவனம் ஒன்றுக்கு அளித்த பேட்டியில் உறுதி செய்துள்ளனர்.

பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசு நேரடி வரி வசூல் மூலமாக 13.5 லட்சம் கோடி ரூபாய் திரட்ட இலக்கு நிர்ணயித்து இருந்தது.

ஆனால் கம்பெனிகள் தொழில் நிறுவனங்கள் சேவை அமைப்புகளின் உற்பத்தி, விற்பனை, ஏற்றுமதி பாதிக்கப்பட்ட காரணத்தினால் வரி வருமானம் கடுமையாக குறைந்துள்ளது.

இந்தியாவின் ஒட்டுமொத்த வளர்ச்சியும் 5 சதவீத அளவுக்கு குறைந்து இருப்பதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

தற்பொழுது கடந்த 11 ஆண்டுகளில் மிக குறைவான வளர்ச்சி விகிதத்துடன் இந்தியா உள்ளது.  

2019- 2020 ஆம் நிதியாண்டின் ஜனவரி 23ஆம் தேதி நிலவரப்படி நேரடி வரிகள் வருமானம் 7 .3 லட்சம் கோடியாக உள்ளது என நேரடி வரி வருமானத்துறை மதிப்பிட்டுள்ளது.

இது சென்ற ஆண்டு நேரடி வரி வருமானத்தோடு ஒப்பிடும்போது 5.5 சதவீத குறைவானதாகும்.

நேரடி வரிகள் மூலமான வருமானம் 11.5 லட்சம் கோடியை  2018 -2019 ஆம் ஆண்டில் தாண்டவில்லை. அந்த அளவையும் 2019-2020ம் ஆண்டில் எட்டமுடியாத நிலை உருவாகியுள்ளது.

 2019-20ம் ஆண்டில் நேரடி வரிகள் மூலமான வருமானம் 7.3 லட்சம் கோடியைத் மிஞ்சாது என அதிகாரிகள் மதிப்பிட்டுள்ளனர்.

இலக்கை எட்டாதது  பெரிய பிரச்சனை அல்ல. ஆனால் சென்ற ஆண்டைவிட நேரடி வரிகள் மூலமான வருமானக்  குறைவு பெரிய பிரச்சனை என நிதி அமைச்சக அதிகாரிகள்  கருதுகின்றனர்.

ஜிஎஸ்டி வரியிலும் நினைத்த அளவு திருப்திகரமான வசூல்  இலக்கை எட்ட முடியவில்லை.

2019- 20ம் ஆண்டில் வரிகள் மூலமாக கிடைக்கும் வருமானம் 3 லட்சம் கோடி அளவுக்கு குறையும் என்று மதிப்பிடப்பட்டுள்ளது.

வரிகள் வருமானம் குறையும் நிலையில் அரசு புதிய திட்டங்களில் முதலீடு செய்வதும் ஏற்கனவே துவக்கப்பட்டுள்ள திட்டங்களில் முதலீட்டை பழைய அளவிலேயே தொடர்வதும் பெரிய சிக்கலாக அமையக்கூடும்.

அந்த சிக்கலை சமாளிக்க அரசு பெருமளவில் வெளிநாட்டுக் கடன் பெறுவது ஒன்றே வழியாக அமையும்.

வரவு செலவுத் திட்டத்தை பொருத்தமட்டில் அரசாங்கம் நிதிப்பற்றாக்குறையை 3.8 சதவீதத்தில் நிறுத்த வாய்ப்புள்ளது.

வரி செலுத்தாமல் ஏமாற்றுவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கும்படி வரித்துறை அதிகாரிகளுக்கு அரசு கட்டளையிட்டுள்ளது.

இந்த தீவிர முயற்சி காரணமாக வரி வருமான குறைவை சரிகட்ட இயலுமா என்று கூற இயலாது.Trending Now: