தஞ்சை பெரிய கோயில் குடமுழுக்கு விழா தமிழில் நடத்தாவிட்டால் போராட்டம்: வேல்முருகன் அறிவிப்பு

24-01-2020 03:48 PM

தஞ்சாவூர்,

தஞ்சை பெரிய கோயில் குடமுழுக்கு விழா தமிழ் வழியில் நடத்தாவிட்டால் போராட்டம் நடத்தப்படும் என தமிழக வாழ்வுரிமைக் கட்சித் தலைவர் வேல்முருகன் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.

இதுகுறித்து தஞ்சாவூரில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் வேல்முருகன் தெரிவித்தது:

தமிழ் மன்னன் ராஜராஜசோழன் கட்டிய பெரியகோயிலில் குடமுழுக்கு உள்ளிட்ட சடங்குகள் தமிழில்தான் நடத்தப்பட்டு வந்தன. இக்கோயிலில் தமிழுக்குத்தான் முக்கியத்துவம் கொடுக்கப்பட்டது. இதை நம் முன்னோர்கள் ஆதாரப்பூர்வமாக பதிவு செய்துள்ளனர்.

இடைப்பட்ட காலத்தில்தான் மாற்றம் செய்யப்பட்டு சம்ஸ்கிருதத்தில் நடத்தப்படுகிறது. எனவே தஞ்சை பெரியகோயில் குடமுழுக்கு விழாவை தமிழில்தான் நடத்த வேண்டும்.

தேவைப்பட்டால் தமிழில் அர்ச்சனை செய்யலாம் என்பதை ஏற்க முடியாது.

தமிழ் வழியில் குடமுழுக்கு நடத்தப்படாவிட்டால் சென்னையில் உள்ள இந்து சமய அறநிலையத்துறை அலுவலகம் முன் போராட்டம் நடத்தப்படும்.

ஹைட்ரோ கார்பன் திட்டத்தை மத்திய அரசு திரும்பப் பெற வேண்டும். இதுதொடர்பாக மத்திய அரசுக்குக் கடிதம் எழுதுவது போதாது.

மக்களைக் காப்பாற்ற முதலமைச்சர் முன்வர வேண்டும்.

குடியுரிமைத் திருத்தச் சட்டத்தை மத்திய அரசுத் திரும்பப் பெற வேண்டும் என்று வேல்முருகன் செய்தியாளர்கள் சந்திப்பில் தெரிவித்தார்.Trending Now: