திரிபுராவில் புரு இன அகதிகள் நிரந்தரமாக தங்க அனுமதி

24-01-2020 03:24 PM

திரிபுராவில் உள்ள அகதிகள் முகாம்களில் தங்கியுள்ள மிஜோரம் மாநிலத்தைச் சேர்ந்த புரு இன மக்கள், இனி திரிபுராவிலேயே நிரந்தரமாக தங்கும் வாய்ப்பு ஏற்பட்டுள்ளது. மிஜோரம் மாநிலத்தைச் சேர்ந்த ‘புரு’ பழங்குடியின மக்கள் திரிபுராவில் உள்ள முகாம்களில் வசித்து வருகின்றனர். 1997ம் ஆண்டு மிஜோரமில் நடந்த இனக்கலவரத்தால் பாதிக்கப்பட்டு 30 ஆயிரம் புரு பழங்குடியின மக்கள் உயிர் பிழைத்தால் போதும் என்று அண்டை மாநிலமான திரிபுராவில் தஞ்சம் அடைந்தனர். இவர்கள் திரிபுராவில் பல முகாம்களில் வசித்து வருகின்றனர். இவர்களை மீண்டும் மிஜோரம் மாநிலத்தில் குடியேற வைக்க கடந்த காலங்களில் எட்டு முறை முயற்சிகள் நடந்தன. இதற்கு போதிய பலன் கிடைக்கவில்லை. இறுதியாக 2018, ஜூலையில் மத்திய அரசு, திரிபுரா,மிஜோரம் மாநில அரசுகளுக்கு இடையே முத்தரப்பு ஒப்பந்தம் ஏற்பட்டது. பெரும்பாலான புரு பழங்குடியின மக்கள் மிஜோரம் திரும்பி செல்ல மறுத்துவிட்டனர். அங்கு சென்றால் மீண்டும் தாக்கப்படலாம் என்ற அச்சத்தில் திரும்பி செல்ல மறுத்துவிட்டனர். அப்போது 1,900 குடும்பங்கள் மட்டுமே திரும்பி சென்றன.  

திரிபுராவில் அகதிகளாக வாழும் புரு பழங்குடியின மக்களின் பிரச்னைக்கு நிரந்தர தீர்வு காணும் வகையில் சென்ற 16ம் தேதி மத்திய அரசு, திரிபுரா, மிஜோரம் மாநில அரசுகள், புரு பழங்குடியின மக்கள் பிரதிநிதிகள் இடையே ஒப்பந்தம் ஏற்பட்டுள்ளது. இந்த ஒப்பந்தம் டில்லியில் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா முன்னிலையில் கையெழுத்தானது.

இந்த ஒப்பந்தம் பற்றி அமித் ஷா கூறுகையில், “23 ஆண்டு பிரச்னைக்கு நல்ல முடிவு எட்டப்பட்டுள்ளது. சிக்கலான பிரச்னைகளை பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் ஒன்றன் பின் ஒன்றாக தீர்த்து வருகின்றோம். இந்த ஒப்பந்தப்படி திரிபுராவில் வாழும் ஒவ்வொரு புரு பழங்குடியின குடும்பங்களுக்கு தலா ரூ.4 லட்சம் வழங்கப்படும். அவர்களது வங்கி கணக்கில் மாதம் தோறும் ரூ.5 ஆயிரம் வீதம் இரண்டு வருடங்களுக்கு வழங்கப்படும். திரிபுராவில் நிரந்தரமாக தங்குவதற்கு வீட்டு மனை, வீடு கட்டுவதற்கு ரூ.1 லட்சத்து 50 ஆயிரம், இரண்டு வருடங்களுக்கு ரேஷன் பொருட்கள் இலவசமாக வழங்கப்படும். பல்வேறு முகாம்களில் வாழும் புரு பழங்குடியின மக்கள், இனி சொந்த வீடுகளில் நிரந்தரமாக வசிக்கலாம். இதற்காக மத்திய அரசு ரூ.600 கோடி வழங்கும். இனி அவர்கள் திரிபுராவில் வாழும் மற்றவர்களை போல் கௌரவமாக வாழலாம். வாக்குரிமையும் வழங்கப்படும்” என்று தெரிவித்தார். இந்த ஒப்பந்தம் திரிபுரா முதல்வர் பிப்லப் குமார், மிஜோரம் முதல்வர் ஜோரம் தங்கா, அசாம் நிதி அமைச்சர் ஹிமந்தா பிஸ்வா சர்மா, திரிபுரா அரச குடும்பத்தைச் சேர்ந்த பிரட்யாட் தேப் பர்மன் ஆகியோர் முன்னிலையில் ஏற்பட்டது.

ஆனால் இந்த ஒப்பந்தம் குறித்து புரு பழங்குடியினத்தைச் சேர்ந்த ஒரு பிரிவினர் சந்தேகப்படுகின்றனர். 2010ல் ஒப்பந்தம் ஏற்பட்ட பிறகு மிஜோரமுக்கு திரும்பி சென்ற புரு பழங்குடியினத்தைச் சேர்ந்தவர்கள், தற்போது ஏற்பட்டுள்ள ஒப்பந்தம் காரணமாக, தங்களின் அரசியல் எதிர்காலம், பாதுகாப்பிற்கு பாதகமாக அமையும் என்று கூறுகின்றனர்.

மிஜோரமைச் சேர்ந்த மனித உரிமை ஆர்வலர் சுகாஸ் சக்மா கூறுகையில்,

“இந்த ஒப்பந்தத்தை வரவேற்பது குறுகிய பார்வையே. இதில் மகிழ்ச்சியடைய என்ன இருக்கிறது? இது ஒரு இனத்தைச்  சேர்ந்தவர்களுக்கான மாநிலம் (மிஜோரம்) என்பதை சட்டபூர்வமாக்குகிறது. இது அரசியல் சட்டத்தின் பன்முகத்தன்மைக்கு எதிரானது. இதற்காக மத்திய அரசு வெட்கப்படவேண்டும். மத்திய அரசால் காஷ்மீர் பண்டிட்டுகள், மீண்டும் காஷ்மீருக்கு திரும்பி வருவதை உறுதிப்படுத்த முடியவில்லை. இப்போது மத்திய அரசால் புரு பழங்குடியினத்தைச் சேர்ந்தவர் களை, அவர்களது சொந்த மாநிலமான மிஜோரமுக்கு திருப்பி அனுப்ப முடியவில்லை. நாளை மகாராஷ்டிராவில் உள்ள பிகார் மாநிலத்தைச் சேர்ந்தவர்கள், அங்கிருந்து விரட்டியடிக்கப்படலாம், அப்போது மத்திய அரசு அவர்களின் பாதுகாப்பிற்கு உத்தரவாதம் வழங்க முடியாது என கூறலாம். இதற்கு என்ன அர்த்தம்?” என்று கேட்கின்றார்.

தற்போது மிஜோரமில் எத்தனை புரு பழங்குடியினர் வாழுகின்றனர் என்பதை கணக்கிடுவது சிரமம். கடந்த காலங்களில் இவர்களில் பலர் மிஜோ பழங்குடி பெயர்களை வைத்துக் கொண்டுள்ளனர். 2010ல் திரிபுராவின் அகதிகள் முகாமில் இருந்து மிஜோரம் மாநிலத்தில் உள்ள மமிட் மாவட்டத்திற்கு சென்ற புரு பழங்குடியின தலைவர் கூறுகையில், “இந்த ஒப்பந்தம் மூலம் திரிபுராவில் வாழும் எங்கள் சகோதர, சகோதரிகளுக்கு வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கின்றோம். மிஜோரமில் வாழும் நாங்கள் சந்தோஷமாக இருப்பதாக கூற முடியாது” என்று கூறியுள்ளார்.

மிஜோ இன மக்களால் புறக்கணிக்கப் படலாம் என்ற அச்சத்தில் தனது பெயரை குறிப்பிட விரும்பாத இந்த புரு பழங்குடியின தலைவர் மேலும் கூறுகையில், மிஜோரமில் எத்தனை புரு இன மக்கள் வாழுகின்றனர் என்பது முக்கியம். நாங்கள் பல காலமாக எங்களது அரசியல் உரிமைகளுக்காக போராடி வருகின்றோம். எங்கள் இனத்தைச் சேர்ந்தவர் சட்டமன்ற உறுப்பினராக வர வேண்டும். எங்களுக்கு மாவட்ட கவுன்சில் வேண்டும். ஆனால் இவை எல்லாம் இப்போது கானல்நீராக மாறிவிட்டது” என்று தெரிவித்தார்.

பல காலமாக மிஜோரமைச் சேர்ந்த புரு பழங்குடியின மக்களின் அரசியல் உரிமைகள் நசுக்கப்பட்டு வருகின்றன. மிஜோரமில் செல்வாக்கு மிக்க மிஜோ இளைஞர் சங்கம் தலைமையில் பல்வேறு அமைப்புகளைச் சேர்ந்தவர்கள், திரிபுராவில் அகதிகள் முகாமில் வாழும் புரு பழங்குடியின மக்களுக்கு மிஜோரம் மாநில தேர்தல்களில் வாக்களிக்க உரிமை வழங்க கூடாது என எதிர்ப்பு தெரிவித்தனர். இதனால் பல்வேறு பிரச்னைகள் உண்டானது. மிஜோரமைச் சேர்ந்த மிஜோ பழங்குடியின மக்களுக்கும், புரு பழங்குடியின மக்களுக்கும் இடையே 1990களில் முதலில் மோதல் ஏற்பட்டது. புரு இன மக்களுக்கு வாக்குரிமை வழங்க கூடாது என மிஜோ இன மக்கள் வலியுறுத்தினார்கள். மிஜோ இளைஞர் சங்கம், மிஜோ மாணவர் சங்கம் ஆகியவற்றைச் சேர்ந்தவர்கள் புரு பழங்குடியின மக்கள், மிஜோரம் மாநிலத்தைச் சேர்ந்தவர்கள் அல்ல. எனவே இவர்களின் பெயர்களை வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்க வேண்டும் என வலியுறுத்தினார்கள்.

“இந்த இரண்டு சங்கங்களைச் சேர்ந்தவர் களின் நெருக்கடியால், புரு இன மக்களின் பெயர்கள் வாக்காளர் பட்டியலில் இருந்து பெருமளவு நீக்கப்பட்டது” என்று புரு இனத்தைச் சேர்ந்தவர்கள் கூறுகின்றனர். இதே போல் புரு பழங்குடியின மக்கள் தனியாக தன்னாட்சி கவுன்சில் வேண்டும் என்ற கோரிக்கை வைத்தனர். இதற்கும் மிஜோ அரசியல் வாதிகளாலும், மற்ற அமைப்புகள் மத்தியிலும் கடுமையான எதிர்ப்பு கிளம்பியது.

தற்போது ஏற்பட்டுள்ள ஒப்பந்தத்தை மிஜோ இளைஞர்கள் சங்கம் வரவேற்றுள்ளது. இது தொடர்பாக வெளியிட்ட அறிக்கையில், “இந்த ஒப்பந்தம் மூலம் ஏற்பட்டுள்ள பலன், திரிபுராவில் தங்கியுள்ள புரு பழங்குடியின மக்களின் பெயர்களை, மிஜோரம் வாக்காளர்   பட்டியலில் இருந்து நிரந்தரமாக நீக்குவதே” என்று கூறியுள்ளது.      

ஆனால் மிஜோரமில் வாழும் புரு இன மக்கள், இந்த ஒப்பந்தம், “தங்களின் அரசியல் எதிர்காலத்திற்கு ஏற்பட்ட மரண அடி” என்கின்றனர். திரிபுரா அகதிகள் முகாமில் இருந்து 2010ல் மிஜோமிற்கு திரும்பிய புரு இனத்தைச் சேர்ந்தவர், அவர்கள் அனைவரும் மோசம் செய்து விட்டனர் என்று தெரிவித்தார்.

மிஜோரமைச் சேர்ந்த மனித உரிமை ஆர்வலர் சுகாஸ் சக்மா,” இந்த ஒப்பந்தத்தால் மிஜோரமின் பெருவாரியான மிஜோக்களால் மீண்டும் ஒரு முறை அங்குள்ள புரு இன மக்கள் மீது தாக்குதல் நடத்தப்படலாம். அவர்கள் மாநிலத்தை விட்டு வெளியேற மீண்டும் நிர்ப்பந்திக்கப்படலாம்” என்று தெரிவித்தார்.

இதே போன்ற அச்சம் மிஜோரமில் வாழும் புரு இன மக்கள் மத்தியிலும் நிலவுகிறது. தெற்கு மிஜோரமில் உள்ள லால்கடாலி மாவட்டத்தில் உள்ள தேவாலயத்தில் பாஸ்டராக உள்ள புரு இனத்தைச் சேர்ந்த ஜாவ்மராய், “ஒரு சிறு சம்பவம் கூட பெரிய கலவரமாக மாற வாய்ப்பு உள்ளது” என்று தெரிவித்தார். சென்ற வாரம் அவரது கிராமத்தில் 700 புரு இன மக்களின் வீடுகள் மிஜோ இனத்தவர்களால் தாக்கப்பட்டது. இந்த தாக்குதல் அருகில் உள்ள மிஜோ இன மக்கள் வாழும் கிராமத்தைச் சேர்ந்த மிஜோ இளைஞன், புரு இனத்தைச் சேர்ந்தவர்களால் கொலை செய்யப்பட்ட பிறகு நடந்துள்ளது.

1997ம் ஆண்டிலும் இதே போன்ற சம்பவத்தால் கலவரம் மூண்டது. அப்போது டம்பா புலிகள் காப்பகத்தில் வனக்காவராக இருந்த மிஜோ இனத்தைச் சேர்ந்தவர் புரு தேசிய விடுதலை முன்னணியைச் சேர்ந்தவர்களால் கொலை செய்யப்பட்டார். இந்த அமைப்பு 1996ல் புரு தன்னாட்சி கவுன்சில் கோரிக்கையை வலியுறுத்தி அமைக்கப்பட்டது. இந்த கொலைக்கு பிறகு பெரும் கலவரம் மூண்டது. இந்த பகுதியில் வசிக்கும் மற்றொரு புரு இனத்தைச் சேர்ந்தவர், “மற்ற இடங்களில் ஒருவர் தவறு செய்தால், அவர் மீது போலீசார் நடவடிக்கை எடுப்பார்கள். சட்டப்படி நடவடிக்கை அமையும். ஆனால் இங்கு வேறு மாதிரி நடக்கும். கலவரம் மூண்டால் போலீசார் எந்த நடவடிக்கையும் எடுக்காமல் கைகட்டி, வாய்பொத்தி வேடிக்கை பார்த்துக் கொண்டிருப்பார்கள்” என்று தெரிவித்தார்.

2010ம் வருடம் ஏற்பட்ட ஒப்பந்தப்படி திரிபுரா அகதிகள் முகாமில் இருந்து மிஜோரமுக்கு திரும்பிய 1,900 குடும்பங்களைச் சேர்ந்தவர்களுக்கு, குடும்பத்திற்கு தலா ரூ.80 ஆயிரம் வழங்கப்பட்டது. ஒரு வருடம் ரேஷன் பொருட்கள் இலவசமாக வழங்கப்பட்டது. ஆனால் தற்போது திரிபுராவிலேயே நிரந்தரமாக தங்கும் புரு பழங்குடியின மக்களுக்கு அதிக உதவிகள் வழங்கப்படுகின்றன.  “இது அநியாயம். மத்திய அரசு எங்களை வஞ்சித்துவிட்டது. நாங்களும் அதே இனத்தைச் சேர்ந்தவர்களே” என்று மமிட் என்ற இடத்தைச் சேர்ந்த புரு இன மக்கள் தலைவர் எல்விஸ் சோர்கி தெரிவித்தார்.

அதே நேரத்தில் திரிபுராவில் அகதிகள் முகாம்களில் தங்கியுள்ள புரு பழங்குடியின மக்கள் மத்தியில் மகிழ்ச்சி தாண்டவமாடுகிறது. தற்போது ஏற்பட்டுள்ள இந்த ஒப்பந்தத்தை வரவேற்று சமீபத்தில் இவர்கள் ‘மகிழ்ச்சி பேரணி’ நடத்தியுள்ளனர். ஆனால் இவர்களது அடிமனதில் வருத்தமும் இருக்கிறது. இனி தங்களின் சொந்த ஊருக்கு எப்போதுமே திரும்பி செல்ல முடியாது என்ற வருத்தமும் இருக்கின்றது. ஒரு முகாமில் தங்கியுள்ள புரு இன தலைவர் சார்லி மால்சாய் கூறுகையில், “பிறந்த கிராமமே வரவேற்காத போது, நாங்கள் என்ன செய்ய முடியும். மிஜோரமில் நாங்கள் எப்போதும் பாதுகாப்பாக இருந்ததில்லை” என்று தெரிவித்தார்.

இடம் பெயர்ந்த புரு பழங்குடியின மக்கள் சங்க தலைவர் சவ்பங்கா கூறுகையில், “இது அதிர்ஷ்டமா அல்லது துரதிஷ்டமா என்பதல்ல. இது ஏற்றுக் கொள்ள வேண்டிய ஒப்பந்தம்” என்று கூறினார்.

இனி சொந்த நாட்டிலேயே அண்டை மாநிலமான திரிபுராவில் அகதிகளாக வாழ்ந்த புரு பழங்குடியினத்தைச் சேர்ந்தவர்கள், சுதந்திரமாக எல்லா உரிமைகளுடன் வாழ்வதற்கு வாய்ப்பு கிடைத்துள்ளது. இவர்களின் எதிர்காலம் பாதுகாப்பாகவும், பிரகாசமாகவும் இருக்க வேண்டும்.

நன்றி: ஸ்கோரல் இணையதளத்தில் அருணாப் சைக்கியா.


Trending Now: