அரசியல் மேடை: திமுக நிலையும் ஸ்டாலின் எச்சரிக்கையும்!

24-01-2020 03:20 PM

அண்மையில் நடைபெற்ற திமுக செயற்குழுக் கூட்டத்தில் பேசிய அக்கட்சியின் தலைவர் ஸ்டாலின் சில அதிரடி கருத்துக் களை வெளியிட்டதாகவும், திமுக.வின் இரண்டாம் கட்டத் தலைவர்கள் உள்ளிட்ட முக்கிய நிர்வாகிகளுக்கு எச்சரிக்கை விடுத்ததாகவும் அறிவாலய வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

2019 நாடாளுமன்றப் பொதுத்தேர்தலில் திமுகவுக்கு கிடைத்த அபார வெற்றி, அபரிமிதமான வாக்குகள், அடுத்தடுத்து நடைபெற்ற வேலூர் தொகுதி தேர்தல், விக்கிரவாண்டி, நாங்குநேரி சட்டமன்ற தொகுதிகளுக்கான இடைத்தேர்தல், நடைபெற்று முடிந்த ஊரக உள்ளாட்சி தேர்தல்களில் கிடைக்கவில்லையே என்கிற ஆதங்கம் திமுக தலைமைக்கு ஏற்பட்டு விட்டது.

அடுத்தடுத்து, 9 மாவட்டங்களுக்கான உள்ளாட்சித் தேர்தல், 15 மாநகராட்சிகள்,27 நகராட்சிகள், 548 பேரூராட்சிகளுக்கான தேர்தல்கள், அதையடுத்து 2021 சட்டசபை பொதுத் தேர்தல் என தொடர்ந்து தேர்தல்கள் வருவதாலும், இடைத் தேர்தல்களிலும், உள்ளாட்சித் தேர்தலிலும் அதிமுக வெற்றி பெற்று விட்டதாலும், ஒரு வித பயம் திமுக தலைமைக்கு வந்து விட்டது. அதன் வெளிப்பாடுதான், செயற்குழுவில் ஸ்டாலின் பேசியது, எச்சரிக்கை விடுத்தது என திமுக முக்கிய பிரமுகர்களை தெரிவிக்கின்றனர்.செயற்குழுக்கூட்டத்தில் பேசிய ஸ்டாலின், கட்சியினரிடையே ஒற்றுமையும் ஒருங் கிணைப்பும் அவசியம். கட்சியிலுள்ள இரண்டாம் கட்டத் தலைவர்கள், மாநில, மாவட்ட நிர்வாகிகள் அடுத்தடுத்த நிலையில் உள்ள நகரம், ஒன்றியம், பேரூர், கிளை அமைப்புகளில் உள்ள நிர்வாகிகளை மதித்து, அவர்களை அரவணைத்து செல்ல வேண்டும் என அறிவுறுத்தி உள்ளார்.

நடைபெற்று முடிந்த உள்ளாட்சித் தேர்தலில், கட்சியினரிடையே ஒற்றுமை இல்லாததால், நாம் அதிக இடங்களில் வெற்றி பெற முடியவில்லை மாவட்ட, ஒன்றிய கவுன்சிலர்களாக அதிகம் பேர்  வெற்றி பெற்றும், தலைவர், துணைத் தலைவர் தேர்தலில் உரிய வெற்றியை பெற முடியவில்லை என குறிப்பிட்ட ஸ்டாலின், கட்சியை மறந்து மாமன், மச்சான், உறவினர் என பார்த்துச் செயல்பட்டதாலும், சில இடங்களில் நம் கட்சியினரும், கூட்டணி கட்சியினரும் விலை போய் விட்டதால்

தான் நமக்கு இத்தகைய நிலை ஏற்பட்டிருக் கிறது. இப்படிப்பட்ட துரோகச் செயலில் ஈடுபட்டவர்களின் பட்டியல் எனக்கு கிடைத்திருக்கிறது. நிச்சயமாக, உறுதியாக அவர்கள் மீது நான் நடவடிக்கை எடுப்பேன் என்று உறுதியுடன் கூறியுள்ளார்.

அதற்கான நடவடிக்கை தொடங்கி விட்டதாகவே தெரிகிறது. இப்படி தவறு செய்தவர்கள் மீது நான் நடவடிக்கை எடுக்கும் போது, அவர்களுக்காக,தலைமைக் கழக நிர்வாகிகள் யாரும் பரிந்து வரக்கூடாது. அவர்களுக்கு ஆதரவாக செயல்படக் கூடாது. அப்படி செயல்பட்டால் அவர்களையும் நான் கடிந்து கொள்ளும் நிலை வரும் என்றும் ஸ்டாலின் எச்சரித்துள்ளார்.

நாடாளுமன்ற தேர்தலில் மாபெரும் வெற்றி பெற்றிருந்தும், இந்த ஊரக உள்ளாட்சி தேர்தலில் கோட்டை விட்டு விட்டோம். கவுன்சிலர்கள் அதிகம் வெற்றி பெற்றும் தலைவர் தேர்தலில், நம் ஆட்களும், கூட்டணி கட்சியினரும் செய்த துரோகத்ததால் உரிய இடம் பெற முடியவில்லை எனக்குறிப்பிட்ட ஸ்டாலின், குறிப்பாக, தொடர்ந்து மேற்கு மண்டலத்தில் நம் கட்சி மிகவும் பலகினமடைந்து வருகிறது.

2016–ம் ஆண்டு நாம் ஆட்சி அமைக்க முடியாததற்கு மேற்கு மண்டலத் தோல்விதான் முக்கிய காரணம் என்றதுடன், இப்போது நடைபெற்ற உள்ளாட்சித் தேர்தலிலும் மேற்கு மண்டலம் காலை வாரி விட்டது. நம் கட்சி நிர்வாகிகள் பலரே விலைபோய் விட்டார்கள் என்று வெளிப்படையாகவே குற்றம் சுமத்தியுள்ளார்.

கோவை, சேலம், நாமக்கல், ஈரோடு, திருப்பூர் உள்ளிட்ட மேற்கு மண்டலம் அதிமுக – கோட்டையாக உள்ளது. இங்கு பல தேர்தல்களில் அதிமுகவே முன்னணியில் இருந்துள்ளது. இதை சுட்டிக்காட்டிய ஸ்டாலின் அந்த மாவட்டங்களில் அதிரடியாக சில மாற்றங்கள் செய்ய முடிவு எடுத்துள்ளார். இந்த மாற்றம் பலன் அளிக்குமா என்பது சந்தேகம்தான் என்கின்றனர் திமுக முக்கிய பிரமுகர்கள்.

ஒவ்வொரு மாவட்டத்திலும் மாவட்ட செயலாளர் பொறுப்பில் உள்ள முக்கிய பிரமுகர்கள், அந்த மாவட்டத்தையே தங்கள் கட்டுப்பாட்டுக்குள் வைத்துக் கொண்டு குறுநில மன்னர்கள் போலச் செயல்பட்டு வருகிறார்கள். ஆட்சியில் இருந்த போது, சம்பாதித்த பணத்தை வைத்துக்கொண்டு அவர்கள் செயல்படுகிறார்கள். அவர்கள் மீது நடவடிக்கை எடுத்துவிட்டு அடுத்து ஒருவரை மாவட்டச் செயலாளராக நியமித்தால், புதியவருக்கு பழைய மா.செ. முழுமையாக ஒத்துழைப்புத் தரமாட்டார் – தவிரவும் புதியவரிடம் போதிய பண பலம் இருக்காது. அதனால், பழைய மா.செ. ஆதரவு நிலையில் இருந்த ஒன்றிய, நகர, பேரூர், கிளை பொறுப்புகளில் உள்ளவர்கள் புதியவருக்கு போதிய அளவு ஆதரவு தரமாட்டார்கள்.

ஜெ. காலத்து அதிமுக போல அதிரடி அரசியலை ஸ்டாலின் முன்னெடுக்க நினைக்கிறார். புகார் வரும் கட்சி நிர்வாகி களை களையெடுக்க நினைக்கிறார். திமுக.வில் அத்தகைய அணுகுமுறை பலன் தராது என்கின்றனர்  அனுபவம் மிக்க திமுக பிரமுகர்கள்.

திமுக.வின் முன்னாள் தலைவர் மறைந்த கருணாநிதிக்கு உரிய ஆளுமைத்திறன், கட்சி யினரை மதித்து அரவணைத்து செல்லும் போக்கு, பேச்சாற்றல், எழுத்தாற்றல் இல்லாதது, மக்களின் ஆதரவு இல்லாதது என்பவை ஸ்டாலினுக்கு உள்ள பலகீனமாக பார்க்கப்படுகிறது. கட்சியின் மாவட்ட, நகர, ஒன்றிய அளவிலான நிர்வாகிகளுடான அவரது அணுகுமுறையும் கட்சியினரிடையே லேசான அதிருப்தியை ஏற்படுத்தி இருக்கிறது. முதலில் இந்த நிலையை அவர் மாற்றிக் கொள்ள வேண்டும். அதுதான் தலைமைப் பண்பு என்பதை அவர் உணர வேண்டும் என்கிற கருத்தும் திமுகவினரிடையே உள்ளது.

கடமை, கண்ணியம், கட்டப்பாடு என்கிற தாரக மந்திரத்தை கடைப்பிடித்து வந்த திமுகவினர் மத்தியில் இப்போது கடமை உணர்வும் இல்லை, கண்ணியமான நடவடிக்கைகளும் குறைந்துபோய்  விட்டது, கட்டுப்பாடும் பெருமளவு தளர்ந்து விட்டது என்பதை உணர்த்தும் விதமாகத்தான் ஸ்டாலி னின் பேச்சும், அவர் விடுத்த எச்சரிக்கையும் அமைந்துள்ளது.

எதிர்வரும் 2021 பொதுத் தேர்தலில் ஆட்சியை பிடித்தே தீர வேண்டும் என வியூகம் வகுத்துச் செயல்படத் தொடங்கி விட்டதன் முன்னோட்டமாகவும் இதை பார்க்கவும், அதனால்தான் கட்சியில்  ஒற்றுமை முக்கியம், சோர்வும், சுணக்கமும் கூடாது, இது தேர்தல் ஆண்டு .இப்போது முதலே உங்கள் பணியை தொடங்குங்கள் என்று கட்சியுனருக்கு கட்டளையிட்டுள்ளார். 2021 தேர்தலில் கூட்டணிகள் எப்படி மாறும், கமல் – ரஜினியின் தாக்கம் எப்படி இருக்கும், ஆட்சிக்கட்சியான அதிமுக – கூட்டணியை எப்படி எதிர்கொள்வது என்கிற கவலை திமுகவுக்கு உருவாகியுள்ளது. அதனால்தான் கட்சி நிர்வாகிகளை தயார்படுத்தும் பணியில் திமுக தலைவர் ஸ்டாலின் ஈடுபடத் தொடங்கிவிட்டார். அதன் தொடக்கம்தான் செயற்குழுக் கூட்டப்பேச்சு என்கின்றனர் அரசியல் பார்வையாளர்கள்.

செயற்குழுவில் எச்சரித்தபடி ஸ்டாலின் எடுக்கும் நடவடிக்கைகள் அவருக்கு எந்த அளவுக்கு கை கொடுக்கும். கட்சியினர் மத்தியில் எப்படி வரவேற்பு இருக்கும் என்பதை பொறுத்திருந்து பார்க்கலாம்.Trending Now: