துரை கருணா எழுதும் ‘கொஞ்சம் திரும்பிப் பார்ப்போம்..!’ – 65

24-01-2020 03:17 PM

சுருக்கெழுத்து உருவான வரலாறு!

தலைவர்கள், முக்கியப் பிரமுகர்கள் பேசுவதை, உயர் அதிகாரிகள் சொல்வதை அப்படியே அட்சரம் பிசகாமல் குறிப்பெடுப்பதற்கு பயன்படுவதுதான் சுருக்கெழுத்து முறை. இது எப்போது எப்படி உருவானது என்பது குறித்து, நம்முடைய தமிழ் கலைக்களஞ்சியம் வெளியிட்டுள்ள பதிவைக் காண்போம்.

ஒருவர் வேகமாக பேசும் போது அவர் பேசுகிற வார்த்தைகளை அப்படியே எழுதுவதற்கு யாராலும் முடியாது. நிமிடத்துக்கு சுமார் 160 வார்த்தைகளை பேசுகின்றவர்கள் இருக்கிறார்கள். ஆனால், அதை விரைவாக அப்படியே எழுத நினைப்பவர்கள் நிமிடத்திற்கு சுமார் 60 வார்த்தைகள் வரைதான் எழுத முடியும். ஆகவே ஒருவரின் பேச்சை முழுமையாக எழுத சுருக்கமான குறியீட்டு முறை அவசியம். இதுதான் சுருக்கெழுத்து முறை. ஒருவர் சுருக்கெழுத்தாளராக முறையாகப் பயிற்சி பெற்றபின் நிமிடத்துக்கு சுமார் 250 வார்த்தைகள் கூட எழுதலாம். சாதாரணமாக இப்போது நிமிடத்துக்கு 150 முதல் 200 வார்த்தைகள் வரை எழுதுபவர்கள் நிறையப் பேர் உண்டு.

ரோமானிய பேரரசின் சிறந்த பேச்சாளரான சிசரோ என்பவரின் தனிச் செயலாளராக இருந்த மார்க்கஸ் டல்லியஸ் டைரோ என்பவர் கி.மு. 100–ம் ஆண்டில் இந்த சுருக்கெழுத்து முறையை முதன்முறையாக  கண்டுபிடித்தார் என்பது வரலாற்று பதிவு. இவர் கண்டு பிடித்த சுருக்கெழுத்து என்பது பேசுபவரின், சொற்களில் உள்ள விகுதிகளை விடுத்து, அந்த சொற்களின் முதல் எழுத்தை மட்டும் வைத்துக் கொண்டு மற்றவற்றை உள்வாங்கி வேகமாக சுருக்கமாக எழுதுவது என்பதுதான். ரோமாபுரியிலும் மற்ற ஐரோப்பிய நாடுகளிலும் இந்த சுருக்கெழுத்து முறையைத்தான் அவ்வப்போது சிலர் சில மாற்றங்களை செய்து, விரிவுபடுத்தி பயன்படுத்தி வந்தனர்.

கொஞ்சம், கொஞ்சமாக இந்த முறை மாறுதலுக்கு உட்பட்டு கி.பி. 400–ம் ஆண்டு வாக்கில் 13 ஆயிரம் குறியீடுகள் புழக்கத்திற்கு வந்தன. அந்த கால கட்டங்களில் கிரேக்கர்களும் ஒரு வகையான சுருக்கெழுத்து முறைகளை பின்பற்றி வந்தனர். ரோமானியரின் வீழ்ச்சிக்கு பிறகு இச்சுருக்கெழுத்து முறை கொஞ்சம் கொஞ்சமாக மறைந்து விட்டது.

டிமோத்தி பிரைட் என்ற ஆங்கிலேயர்தான் முதன்முதலாக 1588–ம் ஆண்டில்,  சொற்களை குறியீடுகள் கொண்டு விரைவாக எழுதும் சுருக்கெழுத்து முறையை  கண்டு பிடித்தார். அப்போது நடைமுறையில் இது பெருமளவு பயன்தரதக்கதாக இல்லாவிட்டாலும் அடுத்தடுத்து மற்றவர்கள் இத்துறையில் புதிய மாற்றங்களை கொண்டு வருவதற்கு அடிப்படையாக அமைந்தது.

பின்னர் 1837–ம் ஆண்டு சர் ஐசக் பிட்மன் என்ற ஆங்கிலேயர் குறியீடுகளை உள்ளடக்கி, தாம் எழுதி வெளியிட்ட சுருக்கெழுத்து நூல் (STENOGRAPIC SOUND HAND என்ற தலைப்பிலானது) தான் உலக அளவில் பிரபலமானது. காபல்ஸ்பெர்கர் என்ற ஜெர்மானிய நாட்டு அறிஞரும், எமிலி டியூப்ளாலே என்ற பிரெஞ்ச் நாட்டு  அறிஞரும் கூட சுருக்கெழுத்து முறையில் சில எளிய குறியீடுகளை கண்டுபிடித்து அறிமுகப்படுத்தினர்.

பிட்மன் அறிமுகப்படுத்திய சுருக்கெழுத்து என்பது மொழியின் உச்சரிப்பை, அதன் ஒலிமுறையை அடிப்படையாக கொண்டது. 1852–ம் ஆண்டு வரையிலும் வணிகத்துறையில் வழக்கத்தில் இருந்த ஒவ்வொரு வகை ஒலிக்கும் ஏற்ற குறியீடு அமைத்து தம் சுருக்கெழுத்து முறையை இவர் ஒழுங்குபடுத்தினார்.

ஆங்கில மொழியிலுள்ள ஒவ்வொரு அடிப்படை ஒலிக்கும் ஏற்ற குறி இவரது நூலில் இடம் பெற்றிருந்தது. மெய்யெழுத்துக்களுக்கான குறியீடுகள் பெரும்பாலும், நேர் கோடுகள் வளை கோடுகளாகவே இருந்தன. எனவே, சுருக்கெழுத்தாளர்கள் பலரும் சிரமமின்றி எளிதாகவும், விரைவாகவும் எழுத முடிந்தது. இவ்வாறு எழுதப்பட்ட சுருக்கெழுத்துக்களை, இம்முறையை அறிந்த மற்றொருவரும் கூட எளிதில் படித்து விரைவாக, வரிவாக எழுத முடியும். ஆங்கிலம் தவிர, இருபதுக்கும் மேற்பட்ட வேற்று மொழிகளிலும் பிட்மன் முறையை பின்பற்றி சுருக்கெழுத்து முறையை ஏற்படுத்தியுள்ளனர்.

இதையடுத்து 1888–ம் ஆண்டு இங்கிலாந்தை சேர்ந்த ஜான் ராபர்ட் கிரெக் என்ற கல்வியாளர் வகுத்தளித்த சுருக்கெழுத்து முறைக்கு ‘கிரெக்’ என்று அவரது பெயரையே சூட்டியதுடன், இங்கிலாந்தில் மட்டுமல்லாது ஐக்கிய அமெரிக்க நாடுகளிலும் இம்முறையை பரப்பினார். இதுவும் எழுத்து ஒலியை அடிப்படையாகக் கொண்டது என்றாலும், இந்த ‘கிரெக்’ சுருக்கெழுத்து முறை உலகின் பல பகுதிகளிலும் பரவியது.

பின்னர், எமிலி டியூப்ளாயே சுருக்கெழுத்து முறையை ஆதாரமாக கொண்டு 1882–ம் ஆண்டு ஜே.எம்.ஸ்லோன் என்பவர், ‘ஸ்லோன் டியப்ளாயே’ என்ற பெயரில் புதிய சுருக்கெழுத்து முறையை உருவாக்கினார். இது எளிய வடிவ கணித முறையாகும். இது ஆங்கில மொழி பேசுகிற பல்வேறு நாடுகளிலும் பயன்பட்டு வருகிறது. இந்த முறை எந்த மொழிக்கும் எளிதில் அமைத்துக் கொள்ள ஏதுவாக இருந்தது.

தமிழ் சுருக்கெழுத்து முறை என்பது 1910–ம் ஆண்டுதான் உருவாக்கப்பட்டது. வேலூர் போலீஸ் பயிற்சிப் பள்ளியில் ஆங்கில சுருக்கெழுத்து ஆசிரியராக இருந்த எம். சீனிவாச ராவ் என்பவர்தான் தமிழ் சுருக்கெழுத்து முறையை முதன் முறையாக அறிமுகப்படுத்தினார். பிட்மன் வகுத்தளித்த சுருக்கெழுத்து முறையை பின்பற்றித்தான் தமிழ் மொழிக்கே சிறப்பாகவுள்ள சில ஒலிகளுக்கேற்ற குறியீடுகளை இவர் உண்டாக்கினார்.

முதலில் தமிழில் நிகழ்த்தப்பட்ட சொற்பொழிவுகளை போலீஸ் துறையிலுள்ள அதிகாரிகள் முழுமையாக எடுப்பதற்காகவே, தமிழில் இந்த சுருக்கெழுத்து முறையை சீனிவாச ராவ் உருவாக்கினார். ஆனாலும், மற்றவர்களும் தமிழ் சுருக்கெழுத்து முறையை கற்று, கையாள்வதற்கு வழி ஏற்பட்டது. இது தவிர பி.ஜி. சுப்பிரமணிய ஐயர் என்பவரும் தமிழ் சுருக்கெழுத்து முறையை சில மாற்றங்களை செய்து 1939–ம் ஆண்டு வெளியிட்டார். இதுவும் பிட்மன் முறையை அடிப்படையாக கொண்டதுதான் என்றாலும், தமிழில் பேசும்போது அடிக்கடி வரும் வார்த்தைகளுக்கும் சிறப்பு குறியீடுகள் நிறையவே இடம் பெற்றன. சிறப்பான சில தமிழ் வார்த்தைகளை சுருக்க முறையில் எழுதும் முறையையும் இவர் எளிமையாக விளக்கியிருந்தார். இவரது சுருக்கெழுத்து முறை யில் உள்ள ஒவ்வொரு விதியை யும், தத்துவத்தையும் பல எடுத்துக்

காட்டுகளுடன் இவர் விளக்கி யுள்ளார்.

இப்போதும் கூட பல அலுவலகங்களில் சுருக்கெழுத்து பயிற்சி பெற்ற ஸ்டெனோ கிராபர் களுக்கு முன்னுரிமை வழங்கும் நிலை உள்ளது. விஞ்ஞான வளர்ச்சி யின் விளைவாக ஆங்கிலம் மற்றும் தமிழ் சுருக்கெழுத்து பயிற்சி அளிக்கும் நிறுவனங்களோ, டைப் ரைட்டிங் கற்றுக் கொடுக்கும் பயிற்சி மையங்களோ அதிகளவில் இல்லை என்ற நிலை உருவாகி விட்டது.

Trending Now: