மலர் சாகுபடியால் வறுமையை விரட்டிய பெண்கள்!

24-01-2020 03:15 PM

தெற்கு ராஜஸ்தானில் கலிவாஸ் கிராமத்தைச் சேர்ந்தவர் பர்வாடி பாய் (35). இவர் இளையமகனுடன் கிராமத்தில் வசிக்கின்றார். உதயபூரில் உள்ள உயர்நிலைப் பள்ளியில் மகனும், மகளும் படிக்கின்றனர். இவரது கணவர் பியாரிலால் ஒன்பது வருடங்களுக்கு முன் காலமாகி விட்டார். அப்போதிருந்து பார்வாடி பாய் சம்பாதிக்கும் பணத்தில்தான் குடும்பம் நடக்கிறது. கிர்வா என்ற கிராமத்தில் உள்ள அரசு ஆரம்ப பள்ளியில் சமையல் வேலை செய்கிறார். மாத சம்பளம் ரூ.1,200 மட்டுமே. உதயபூரில் இருந்து 28 கி.மீட்டர் தூரத்தில் கிர்வா உள்ளது. வறட்சி பிரதேசம். இந்த கிராமத்தின் நில அமைப்பு காரணமாக நிலத்தடியில் குறைந்த அளவு தண்ணீரையே தேக்கி வைத்துக் கொள்ள முடியும். இதனால் விவசாயத்தில் வருமானம் இல்லாமல் மக்கள் வறுமையில் தள்ளப்படுகின்றனர். வருமானத்திற்காக கிடைக்கும் கூலி வேலைகளை செய்கின்றனர்.

இந்த கிராமத்து பெண்கள் தண்ணீர் கொண்டு வருவது உட்பட வீட்டு வேலை களையும், கால்நடைகளை மேய்ப்பது போன்ற வேலைகளை செய்கின்றனர். இதனால் எவ்வித வருமானமும் இல்லை. சில நேரங்களில் அவசர தேவைக்காக 60 சதவிகிதம் முதல் 120 சதவிகிதம் வரை வட்டியில் கடன் வாங்கு கின்றனர்.

இந்த நெருக்கடியான சூழ்நிலையில் பெண்களின் வாழ்க்கையில் மறுமலர்ச்சி உண்டாக தொடங்கியது. பெண்கள் சாமந்தி, ரோஜா பூ பயிரிட தொடங்கியவுடன் வருமானம் கிடைக்க தொடங்கியது. இந்த பூக்களுக்கு வருடம் முழுவதும் தேவை இருந்து கொண்டேயுள்ளது.

இதற்கு காரணம் ‘சேவா மந்திர்’ என்ற தொண்டு நிறுவனமே. தெற்கு ராஜஸ்தானில் இயங்கும் சேவா மந்திர் ‘சுலவாம்பாம்’ என்ற திட்டத்தை அறிமுகப்படுத்தியது. இதன் பொருள் ‘சுய நம்பிக்கை’ என்பதே. பெண்கள் நிலத்தில் பூக்களை பயிரிட்டு வருவாய் பெறுவதால், அவர்கள் சுயமாக நிற்பதுடன், வறுமையை அகற்றவும் முடிகிறது. இந்த சுலவாம்பாம் திட்டம் பழங்குடி மக்கள் வாழும் ஒன்பது கிராமங்களில் அறிமுகப்படுத்தப்பட்டது. அதில் ஐந்து கிராமங்களில் மலர் சாகுபடி அறிமுகம் செய்தனர். இந்த ஐந்து கிராமங்களிலும் 13 மகளிர் சுயஉதவி குழுக்கள் அமைக்கப்பட்டன. இவற்றில் 250 பெண்கள் உறுப்பினராக சேர்ந்தனர். இந்த பெண்களுக்கு  கிருஷி விக்யான் கேந்திரா திறன் மிகு பயிற்சி அளித்தது.

மலர் சாகுபடி நிபுணர்கள் விதைகளை பக்குவப்படுத்துவது, சிக்கனமாக செடிகளுக்கு தண்ணீர் பாய்ச்சுவது, பூச்சி வராமல் தடுப்பது, பூக்கள் பறிப்பது, விற்பனை செய்வது போன்ற பயிற்சி அளித்தனர். கிருஷி விக்யான் கேந்திரா புஸ்கர் ரக ரோஜாப்பூ, பூசா ரக சாமந்தி வளர்க்க உதவி செய்தது. இந்த பூக்களுக்கு உதயபூரில் நல்ல வரவேற்பு இருப்பதுடன், நல்ல விலையும் கிடைக்கிறது.

உதயபூர் மாவட்டத்தில் அல்சிகார்க், பாய், பிப்லாவாஸ், கெலி ஆகிய கிராமங்களைச் சேர்ந்த பெண்கள் மலர் சாகுபடி செய்ய தொடங்கினார்கள். அதில் ஐந்து பேர் ரோஜா பூ சாகுபடி செய்தனர். 44 பேர் சாமந்தி பூ சாகுபடி செய்தனர். ஜூன் மாத வாக்கில் செடிகளை நட்டால், அக்டோபரில் பூக்களை பறிக்கலாம். “ நானே கன்றுகளை நட்டு, அவற்றை பராமரிக்கின்றேன்” என்கின்றார் பர்வாடி பாய்.

அல்சிகார்க் கிராமத்தைச் சேர்ந்தவர் சீதா பாய். இவர் 15 வருடங்களுக்கு முன் கணவரை இழந்து விட்டார். இவரது இரண்டு மகன்களும் தனியாக வாழ்கின்றனர். அவர்கள் தினசரி உதயம்பூர் சென்று கூலி வேலை செய்கின்றனர். இவருக்கு சொந்தமான நிலத்தில் கடுகு, கோதுமை, மக்காச் சோளம், வெண்டைக்காய், பீன்ஸ் போன்வற்றை குடும்ப தேவைக்காக பயிரிடுகின்றார். குடும்பத்திற்கு தேவையானது போக மீதமிருந்தால் விற்பனை செய்வார். இவர் மற்ற பயிர்களை பயிர் செய்வதில்லை. ஏனெனில் அவற்றை கால்நடைகளில் இருந்து காப்பாற்ற இயலாது. சீதா பாய் முதன் முறையாக பூக்களை சாகுபடி செய்தார். இதே போல் இந்த கிராமத்தைச் சேர்ந்த தரம் பாய் முதன் முறையாக பூக்களை சாகுபடி செய்கின்றார். இவர் இதற்கு முன்பு கோதுமை, மக்காச் சோளம், காய்கறி ஆகியவற்றை பயிரிட்டு வந்தார்.

ஒவ்வொருவரும் அரை பிகா நிலத்தில் (இரண்டரை பிகா ஒரு ஏக்கர்) மலர் சாகுபடி செய்கின்றனர். இரண்டு அல்லது மூன்று நாட்களுக்கு ஒரு முறை 20 கிலோ பூ பறித்து, சந்தைக்கு சென்று விற்பனை செய்கின்றனர். மூன்று மாதங்கள் வரை பூக்களை பறிக்கின்றனர். இந்த பெண் விவசாயிகளுக்கு பூக்களை பயிரிடுவதால் நிரந்தர வருமானம் கிடைக்கின்றது. முதன் முறையாக இடைத்தரகர்கள் இல்லாமல் நேரடியாக சந்தையில் விற்பனை செய்கின்றனர். தீபாவளி போன்ற பண்டிகை நாட்களில் பர்வாடி பாய் நேரடியாக உதயபூர் சென்று பூக்களையும், மாலைகளையும் விற்பனை செய்கின்றார். தினசரி சீதா பாய் உதயபூர் சென்று பூக்களை விற்பனை செய்கின்றார். உதயபூரில் டில்லி கேட், ஹாதி போல், பதேபுரா போன்ற இடங்களில். மலர் சாகுபடி செய்யும் பெண் விவசாயிகள் பூ, மாலைகளை விற்பனை செய்கின்றனர், குறிப்பாக நவராத்திரி, தீபாவளி போன்ற பண்டிகை காலங்களில் விற்பனை செய்கின்றனர்.

சீதா பாய் அவசர தேவைக்காக மகளிர் சுய உதவி குழுவிடம் கடன் வாங்குகின்றார். சென்ற வருடம் பூ பூக்கும் பருவம் முடிந்த நேரத்தில் ரூ.9 ஆயிரம் வரை சம்பாதித்துள்ளார். பர்வாடி பாய் மலர் சாகுபடி வருமானம் பற்றி கூறுகையில் “முன்பு மக்காச் சோளம் பயிரிட்டு ரூ.1,500 வரை கிடைத்தது. இந்த வருடம் சாமந்தி பூ பயிரிட்டதால் ரூ.8 ஆயிரம் வரை வருமானம் கிடைத்துள்ளது” என்கின்றார்.

தானகி (60) என்ற பெண் பாய் என்ற கிராமத்தில் தங்கி மகனுடன் வசித்து வருகிறார். இவரது கணவர் பிருலால் பக்கத்து கிராமத்தில் கோவில் பூசாரியாக உள்ளார். இவரது ஒரே மகள் விபத்தால் பக்கவாதத்தால் பாதிக்கப்பட்டுள்ளார். நகைகளை விற்று மகளின் மருத்துவத்திற்கு செலவழித்துள்ளார். “மகளின் மருத்துவ செலவிற்காக கடன் வாங்கினேன். ஆனால் கடனை திருப்பி கட்ட முடியவில்லை. ஆனால் பூ சாகுபடி மூலம் வருமானத்தை அதிகரித்து கடனை திருப்பி கட்டுவேன்” என்கின்றார்.

மலர் சாகுபடி செய்யும் மற்றொரு பெண் விவசாயி ஹகாரி. இவரது கணவர் விவசாய கூலியாக வேலை செய்கின்றார். இவரது மகன் உதயபூரில் கூலி வேலை செய்கின்றார். ஹகாரி நிலத்தில் மக்காச் சோளம் பயிரிடுவதுடன், மாடுகளை வளர்த்து மேய்த்து வந்தார். “இந்த வருடம் மலர் சாகுபடி செய்த்தன் மூலம் ரூ.9 ஆயிரம் வரை வருமானம் வந்துள்ளது. இது மக்காச் சோளம் பயிரிட்டு விற்பனை செய்தால் கிடைக்கும் வருமானத்தைவிட பல மடங்கு” என்று நம்பிக்கையுடன் கூறுகின்றார்.

2018ல் பூ பூக்கும் பருவம் முடிந்த நேரத்தில் தர்மி பாய் என்ற பெண் பூக்களை பயிரிட்டு ரூ.9 ஆயிரம் சம்பாதித்துள்ளார். தங்கி என்பவர் ரூ.10 ஆயிரம் வரை சம்பாதித்துள்ளார். இந்த பெண்கள் மலர் சாகுபடி செய்வதற்கு முன் இவர்களின் சராசரி வருமானம் ரூ.5,250 மட்டுமே. மலர் சாகுபடி செய்வதால் பெண் விவசாயிகளின் வருமானம் சராசரியாக 50 சதவிகிதம் வரை அதிகரித்துள்ளது. சிலர் அதிக அளவு சம்பாதித்துள்ளனர்.

இயற்கை வேளாண்மையை கடைப்

பிடிக்கும் சீதா பாய், தூரதர்ஷனில் இயற்கை முறையில் விவசாயம் செய்வது பற்றி உரை நிகழ்த்தியுள்ளார். தனியார் தொலைகாட்சியில் தர்மி பாய் சாமந்தி பயிரிடுவது பற்றி விபரமாக பேசியுள்ளார். சாமந்தி பயிரிடுவதால் நல்ல வருமானம் கிடைப்பதால், இந்த வருடம் அதிக நிலப்பரப்பளவில் சாமந்தி பயிரிட சீதா பாய் திட்டமிட்டுள்ளார். இதே போல் தர்மி பாயும் தொடர்ந்து சாமந்தி பயிரிடுவது என முடிவு செய்துள்ளார்.

விவசாய நிலங்களில் வேலை மட்டுமே செய்து வந்த இந்த பெண்கள் மலர் சாகுபடி செய்ய ஆரம்பித்த பிறகு, இவர்களது வாழ்க்கையே மாறிவிட்டது. இவர்கள் தற்போது விவசாயிகளாக மட்டுமல்லாது, பூ வியாபாரிகளாகவும் மாறிவிட்டனர்.

நன்றி: வில்லேஜ் ஸ்கொயர் இணையதளத்தில் ஜோதி ராஜ்புத்.
Trending Now: