காஞ்சிபுரம் அருகே பெரியார் சிலையை சேதப்படுத்தியோரை தண்டிக்க ராமதாஸ் வலியுறுத்தல்

24-01-2020 12:58 PM

சென்னை,

காஞ்சிபுரம் அருகே பெரியார் சிலையை சேதப்படுத்தியோரை தண்டிக்க வேண்டும் என பாமக நிறுவனர் ராமதாஸ் இன்று வலியுறுத்தியுள்ளார்.

காஞ்சிபுரத்தில் பெரியார் சிலை சேதப்படுத்தப்பட்டதற்கு இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் இரா.முத்தரசன், அமமுக பொதுச்செயலாளர் டிடிவி.தினகரன் ஆகியோரும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

இதுகுறித்து ராமதாஸ் இன்று விடுத்துள்ள அறிக்கையில், 

காஞ்சிபுரம் மாவட்டம் கலிப்பட்டு கிராமத்தில் அமைக்கப்பட்டிருந்த தந்தை பெரியாரின் திருவுருவச் சிலையை சில விஷமிகள் சேதப்படுத்தியது அதிர்ச்சியளிக்கிறது. பொது அமைதியை சீர்குலைக்கும் நோக்குடன் செய்யப்பட்டு உள்ள இந்த வெறுப்புச் செயல் கண்டிக்கத்தக்கது.

பெரியாரின் கொள்கைகளில் மாற்றுக்கருத்து இருந்தால், அதை கொள்கைகள் மூலமாகத் தான் எதிர்கொள்ள வேண்டும். மாறாக, பெரியாரின் சிலைகளை சேதப்படுத்துவது, அவமதிப்பது போன்ற செயல்கள் ஏற்றுக்கொள்ள முடியாதவை. இத்தகைய செயல்களால் பெரியாரை எவராலும் சிறுமைப்படுத்த முடியாது. மாறாக, இதை செய்தவர்கள் தான் சிறுமைப்பட்டு போவார்கள்.

அண்மைக்காலமாகவே பெரியார், திருவள்ளுவர் உள்ளிட்டோரின் சிலைகளை சேதப்படுத்தும் நிகழ்வுகள் அதிகரித்து வருகின்றன. இது ஒரு சாராரின் வக்கிர உணர்வையே வெளிப்படுத்துகிறது.

கலிப்பட்டு கிராமத்தில் பெரியாரின் சிலையை சேதப்படுத்தியவர்களை காவல்துறை கைது செய்து தக்க தண்டனை பெற்றுத்தர வேண்டும். இனி இத்தகைய செயல்கள் நடைபெறாமல் தடுக்க வேண்டும்.

இவ்வாறு ராமதாஸ் கூறியுள்ளார்.

முத்தரசன், டிடிவி தினகரன் கண்டனம்

காஞ்சிபுரத்தில் பெரியார் சிலை சேதப்படுத்தப்பட்டதற்கு இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் இரா.முத்தரசன், அமமுக பொதுச்செயலாளர் டிடிவி.தினகரன் ஆகியோரும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.Trending Now: