ரோஹிங்கியா முஸ்லிம்களின் படுகொலையை நிறுத்த சர்வதேச நீதிமன்றம் மியான்மர் அரசுக்கு உத்தரவு

23-01-2020 08:55 PM

தி ஹேக்

ரோஹிங்கியா முஸ்லிம்கள் படுகொலை செய்யப்படுவதை  உடனே தடுத்து நிறுத்த நடவடிக்கை எடுக்கும்படி மியான்மர் அரசுக்கு சர்வதேச நீதிமன்றம் இன்று உத்தரவு வழங்கியது.

இந்த.உத்தரவை அமல்படுத்துவது குறித்து தனக்கு அறிக்கை தாக்கல் செய்யும்படியும் சர்வதேச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

ஆப்பிரிக்க நாடுகளில் ஒன்றான காம்பியா ரோஹிங்கியா முஸ்லிம்கள் படுகொலை தொடர்பாக மியான்மருக்கு எதிராக சர்வதேச நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்தது.

ரோஹிங்கியா முஸ்லிம்கள் படுகொலை செய்யப்படுகிறார்கள் ; இனப்படுகொலை அங்கு நடக்கிறது அதை தடுத்து நிறுத்த சர்வதேச நீதிமன்றம் தகுந்த உத்தரவு பிறப்பிக்க வேண்டும் என்று காம்பியா தன் மனுவில் கூறியிருந்தது.

சர்வதேச நீதிமன்றத்தில் காம்பியா வழக்கு தொடர இஸ்லாமிய நாடுகளின் அமைப்பு உதவி செய்துள்ளது.

காம்பியா தாக்கல் செய்த மனுவின் பேரில் இன்று சர்வதேச நீதிமன்றம் தீர்ப்பை வழங்கியது. 17 நீதிபதிகளைக் கொண்ட அமர்வு தனது தீர்ப்பை ஏகமனதாக இன்று வழங்கியது.

தலைமை நீதிபதி அகமது யூசுப் தீர்ப்பை வாசித்தார்.

இன ஒழிப்பு தொடர்பாக 1948ஆம் ஆண்டு ஐக்கிய நாடுகள் சபை வகுத்த விதிகளின்படி நடந்த சம்பவங்களை பகுத்தாய்வு செய்யும் பொழுது ரோஹிங்கியா முஸ்லிம்களின் உரிமைகள் பறிக்கப்பட்டுள்ளன .அவர்களது உரிமைகளை மீட்க முடியாதபடி பல சந்தர்ப்பங்களில் சிதைக்கப்பட்டு இருப்பதை காணமுடிகிறது. இந்த நிலை தொடர கூடாது. ரோகிங்கியா முஸ்லிம்கள் படுகொலை செய்யப்படுவதை  தடுத்து நிறுத்த வேண்டும்.

காம்பியா நாட்டின் சார்பாக நீதிமன்றத்தில்  தாக்கல் செய்யப்பட்ட மனுவில் கூறப்பட்டுள்ள சாட்சியங்களை மியான்மர் அரசு கலைக்கக்கூடாது சாட்சியங்களை அழிக்கவும் கூடாது என சர்வதேச நீதிமன்ற நீதிபதிகள் குழு தனது தீர்ப்பில் குறிப்பிட்டுள்ளது.

தீர்ப்பில் கூறப்பட்டுள்ள உத்தரவுகளை மியான்மர் அரசு நிறைவேற்றுவது குறித்து சர்வதேச நீதிமன்றத்தில் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் எனவும் நீதிபதிகள் தங்கள் தீர்ப்பில் குறிப்பிட்டுள்ளனர்.Trending Now: