இலங்கை இறுதிக்கட்ட போரின்போது காணாமல் போன தமிழர்கள் இறந்து விட்டனர்: கோத்தபய ராஜபக்சே தகவல்

22-01-2020 07:37 PM

கொழும்பு,

இலங்கையில் நடைபெற்ற இறுதிக்கட்ட போரின்போது காணாமல் போன தமிழர்கள் இறந்துவிட்டனர் என இலங்கை அதிபர் கோத்தபய ராஜபக்சே தெரிவித்தார்.

கடந்த 2009-ம் ஆண்டு  இலங்கையில் ராணுவத்துக்கும், விடுதலைப்புலிகளுக்கும் இடையே இறுதிக்கட்ட போர் நடந்தது. அதில், 1 லட்சம் பேர் பலியானதாக கருதப்படுகிறது. சுமார் 20,000 தமிழர்கள் காணாமல் போனதாகவும் கூறப்படுகிறது.

போர் நடைபெற்றபோது இலங்கையின் பாதுகாப்பு செயலாளராக இருந்த கோத்தபய ராஜபக்சே, போரில் முக்கிய பங்கு வகித்தார். தமிழர்கள் கொல்லப்பட்டதிலும், காணாமல் போனதிலும் அவர் மீது குற்றச்சாட்டு கூறப்பட்டு வருகிறது. அப்போது அதிபராக இருந்தவர் மகிந்த ராஜபக்சே.

கோத்தபய ராஜபக்சே தற்போது இலங்கை அதிபராகி விட்டார். ஐ.நா. உயர் அதிகாரி ஹனாஸ் சிங்கர், இலங்கைக்கு வந்துள்ளார். அவர் கோத்தபய ராஜபக்சேவை சந்தித்தார்.

இருவரும் இலங்கையில் அமைதி, நல்லிணக்கம் நிலவச் செய்வது குறித்து பேச்சுவார்த்தை நடத்தினர்.  அப்போது, இறுதிக்கட்ட போரின்போது காணாமல் போன தமிழர்கள் இறந்து விட்டதாக ஹனாஸ் சிங்கரிடம் இலங்கை அதிபர் அதிர்ச்சிகரமான தகவலை தெரிவித்தார்.

கோத்தபய ராஜபக்சே கூறியதன் சுருக்கம்:

இறுதிக்கட்ட போரின்போது காணாமல் போனவர்கள் இறந்து விட்டனர். அவர்களில் பெரும்பாலானோரை விடுதலைப்புலிகள் கடத்திச்சென்று, தங்கள் படையில் வலுக்கட்டாயமாக சேர்த்தனர். இதை அவர்களின் குடும்பத்தினரே சான்றளித்துள்ளனர். ஆனால், காணாமல் போனவர்களுக்கு என்ன கதி நேர்ந்தது என்பது தெரியாததால், ‘காணாமல் போனார்கள்’ என்றே அவர்கள் கூறி வருகிறார்கள்.

தேவையான விசாரணை முடிந்த பிறகு, காணாமல் போனவர்களுக்கான மரண சான்றிதழ் வழங்கப்படும். பின்னர், பாதிக்கப்பட்ட குடும்பத்தினர் தங்கள் வாழ்க்கையைத் தொடர தேவையான உதவிகள் வழங்கப்படும்.

இது தங்களது அரசியலுக்கு உதவாது என்பதால், இந்த தீர்வை தமிழ் அரசியல்வாதிகள் எதிர்க்கிறார்கள். ஆனால், பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு இந்த தீர்வு நன்மை பயக்கும்.

இவ்வாறு கோத்தபய ராஜபக்சே கூறியதாக, இலங்கை அதிபர் மாளிகை தெரிவித்துள்ளது.Trending Now: