ஆன்மிக கோயில்கள்: ஞாபசக்தி பெருக்கும் டக்கன்பரவூர் சரஸ்வதி!

22-01-2020 06:12 PM

தல வர­லாறு :

பரவூர் தம்பிரான் என்ற மூகாம்பிகை பக்தர், மாதம் ஒரு முறை கொல்லூர் கோயிலுக்குச் சென்று தரிசனம் செய்து வருவது வழக்கம். வயதான காலத்தில் இவரால் கொல்லூர் செல்ல முடியவில்லை. மிகவும் வருத்தத்துடன் இருந்த அவரது கனவில் மூகாம்பிகை தோன்றி, ‘‘நீ இருக்கும் இடத்தருகே ஒரு கோயில் கட்டு. அங்கு நான் கலைவாணியாக அருள்பாலிக்கிறேன்’’ என்றாள். அதன்படி தாமரைப் பூக்கள் அடங்கிய குளம் அமைக்கப்பட்டு, நடுவில் சரஸ்வதிக்கு கர்ப்பக்கிரகம் அமைக்கப்பட்டது. கன்னிமூலையில் கணபதி, பிராகாரத்தில் சுப்ரமணியர், விஷ்ணு, யட்க்ஷி, ஆஞ்சநேயர், வீரபத்திரர் சிலைகள் பிரதிஷ்டை செய்யப்பட்டன.

பொது தகவல்:

இவளது திருநாமம் ‘தெட்சிண மூகாம்பிகை.’ தாமரையின் மீது சரஸ்வதியை அமர்த்தும் நோக்கத்தில், ஒரு சிறிய தாமரை குளத்தை அமைத்து, குளத்தின் நடுவில் சரஸ்வதி அமர்ந்துள்ள கர்ப்பக்கிரகம் இருப்பது போல் வடிவமைத்துள்ளனர்.

பாடங்களை முடித்து விட்டு ரிலாக்ஸாக இருக்கும் நம் குழந்தைகளை அடுத்த கல்வியாண்டில் நல்ல மதிப்பெண் பெறவும், ஞாபகசக்தி பெருகவும் இங்கு அழைத்துச் சென்று வாருங்கள்.

பிரார்த்தனை:

தீராத நோய் உள்ளவர்களும், செயல்களில் தடங்கல் உள்ளவர்களும் கோயிலிலேயே தரப்படும் அர்ச்சனை பொருட்களை வாங்கி, பெயர், நட்சத்திரம் சொல்லி பூஜை செய்ய வேண்டும். பிரசாத தட்டை, கோயில் முன்பு வைக்கப்பட்டுள்ள உண்டியலில் போட்டு விட வேண்டும். இப்படி செய்தால் சிறந்த பலன் உண்டு என்பது நம்பிக்கை.

இங்கு தினமும் இரவில் கலைவாணிக்கு மூலிகை கஷாயம் நைவேத்யம் செய்யப்படுகிறது. மறுநாள் காலை இந்த கஷாயத்தை மாணவர்கள் வாங்கி அருந்தினால் ஞாபகசக்தி பெருகும் என்பதும், மந்தபுத்தி விலகி கல்வியறிவு சிறக்கும் என்பதும் ஐதீகம். வெளியூர் பக்தர்களுக்கு கஷாயத்தை பாட்டிலில் தருகிறார்கள். இசையில் தேர்ச்சி பெற விரும்புபவர்களும் இங்கு வழிபாடு செய்கின்றனர்.

நேர்த்திக்கடன்:

பிரார்த்தனை நிறைவேறியதும் சரஸ்வதிக்கு அபிஷேகம் செய்தும், வஸ்திரம் சாத்தியும் நேர்த்திக்கடன் செய்கின்றனர்.

திருவிழா:

 தை மாதம் அனுஷம் நட்சத்திரத்தில் கொடியேற்றி, உத்திரட்டாதியில் ஆறாட்டு நடக்கிறது. தேர்வு காலத்தில் சிறப்பு வழிபாடு செய்யப்படுகிறது.

திறக்கும் நேரம்:

காலை 5  மணி முதல் 11  மணி வரை, மாலை    5  மணி   முதல் இரவு   8 மணி வரை திறந்திருக்கும்.

முகவரி:

சரஸ்வதி திருக்கோயில், டக்கன்பரவூர், எர்ணா குளம் மாவட்டம். கேரள மாநிலம்.Trending Now: