கலைமாமணி வாமனன் எழுதும் ‘திரை இசைத்திலகம் கே.வி.மகாதேவன் 1918–2018’ – 100

22-01-2020 06:09 PM

நிரந்தரமானவனுக்கு நிலைக்கும் இசை!        

‘வானம்பாடி’  வந்த 1963ல், அக்டோ பர் 20ம் தேதி, இந்தியா மீது சீனா போர் தொடுத்தது. ஆயிரம் கிலோமீட்டர் இடை வெளியில், இரண்டு எல்லைகளில் புகுந்து இந்தியாவை தாக்கியது.  

‘ஆசிய ஜோதி’ என்றெல்லாம் புகழப் பட்ட ஜவஹர்லால் நேரு, கூசிய தருணம் மட்டுமல்ல... குலைந்துபோன தருணம் இது.

‘இந்தி-சீனி பாய் பாய்’ (இந்தியனும் சீனனும் சகோதரர்கள்) என்று அன்பொழுகப் பாசாங்கு செய்துவிட்டு,  விருந்தில் சீனிக்குப் பதில் விஷத்தைப் கலந்துவிட்டான் சீனாக் காரன்!

நல்ல நாட்டுக்கான இலக்கணத்தை, பசியும் இருக்கக்கூடாது, பிணியும் இருக்கக் கூடாது, பகையும் இருக்கக்கூடாது என்று வகுத்தார் திருவள்ளுவர்.

ஆனால், இமயத்தின் இதயத்தைக் கிழித்துக்கொண்டு இந்தியாவை கதி கலங்கச் செய்யும்படி ஆயிரமாயிரம் சீன ராணுவத்தினர் அதன் மீது பகைமையோடு பாய்ந்தார்கள்!

ஒரு நாட்டின் பாதுகாப்பை ‘ஏமம்’ என்று பேசினார் திருவள்ளுவர். ஆனால், யதார்த்தங்களைக் கவனிக்காத ஒரு குருட்டு லட்சியவாதத்தால், இந்திய நாட்டின் ராணுவத்தைப் பலப்படுத்துவதைக்கூட அசட்டை செய்துவிட்டது நேருவின் அரசு.

சீன தாக்குதலின் போது, போரில் இந்தியா அடைந்த பின்னடைவுகள் நாட்டு மக்களின் மனதில் பயங்கரமான வேதனையை ஏற்படுத்தின.  

இந்நிலையில், திராவிடக் கொள்கையைவிட்டு, தேசிய   சக்திகளோடு இணைந்திருந்த கண்ணதாசன், சீனத் தாக்குதலை மையமாக வைத்து ‘ரத்தத் திலகம்’ திரைப்படம் தயாரிக்கும் முயற்சியில் குதித்தார். பஞ்சு அருணாசலத்தை  தயாரிப்பாளராகக் கொண்டு அமைந்த நிறுவனத்தின் பெயரை, ‘நேஷனல் மூவீஸ்’ என்று வைத்தார்.

பாரத திருநாட்டிலேயே, முதன்முதலில்  இந்திய, சீனப் போரைக் குறித்துத் திரைப்படம் எடுத்த பெருமையை பெற்றார் கண்ணதாசன்.

இந்த வகையில் பெரும் தேசியவாதியாகக் கண்ணதாசன் அவதாரம் எடுத்தபோது, அவருடைய பாடல்களுக்கு மீண்டும் இசை வாகனம் அளிப்பவராக மகாதேவன் அவருக்கு துணை நின்றார். திரைப்பாடல் ஆசிரியர் என்பதுதானே கண்ணதாசனின் முதல் முகவரி... அதைத் தூக்கிப் பிடிக்கும் வகையில் அவருடைய பாடல்களுக்கு சிறந்த இசையமைய வேண்டும் அல்லவா? அது மகாதேவனிடமிருந்து கிடைத்தது.

‘ரத்தத் திலகம்’ வெளிவந்த காலகட்டத்தில், சீனாவின் ஆக்கிரமிப்பால் பாரத மக்களின் மனதில் நிராசைகள் நிரம்பியிருந்தன. இந்த சோகத்தை எதிரொலிப்பது போல், ‘ரத்தத் திலக’த்தின் கதை, ஒரு துன்பியல் முடிவைத்தான் பெற்றிருந்தது. சிவாஜியும் சாவித்திரியும் வீர மரணம் அடைவதுபோலத்தான் படத்தின் உச்சக்கட்டம் அமைந்தது.

‘ரத்தத்திலகம்’ படத்தின் முக்கிய நோக்கம் இந்திய, சீனப்போரைக் கதைப்பொருள்ளாக்கி, சீனாவின் அக்கிரமத்தை வெளிச்சம் போட்டுக் காட்டி, தமிழ்நாட்டில் தேசிய உணர்ச்சிக்கு ஊக்கம் அளிப்பதுதான்.

ஆனால் வெகுஜன அம்சங்களை மனதில் கொண்டு,  படத்திற்கு கிளுகிளுப்பூட்டும் வகையில் கண்ணதாசனும் படத்தின் திரைக்கதையை அமைத்து இயக்கிய தாதா மிராசி யும், ‘ரத்தத் திலக’த்தின் முதல் பாதியை இளமைத் துள்ளலுடன் கூடிய கல்லூரிக் காதல் காட்சிகள் நிரம்பியதாக வழங்கினார்கள்.

கல்லூரியில் சிவாஜியும், சாவித்திரியும் பங்குகொள்ளும் ‘ஒத்தெல்லோ’ நாடகம் அரங்கேறுகிறது.  ஷேக்ஸ்பியரின் நாடகம் என்பதால், படத்தில் அதை ஆங்கிலத்திலேயே நிகழ்த்தினார்கள்!

சிவாஜி (குமார்), சாவித்திரி (கமலா) காதல், பலவித மோதல்களில் தொடங்குவதாகக் கதையமைப்பு இருந்ததால், சிவாஜி படிப்பில் கவனம் செலுத்த முடியாதபடி, சாவித்திரி தன்னுடைய பிறந்த நாள் விழாவில் காது கிழிய பாடி கும்மாளம் அடிக்கிறார். ‘ஆன் தி மெர்ரி கோ ரவுண்டு’  என்று ஆங்கிலத்தில் உஷா  ஊதுப்பின் குரலில் பாடி சாவித்திரி நடனம் ஆடுகிறார்!

இப்படியெல்லாம் வித்தியாசமான அம்சங்கள் கூடிய படத்தில், வேறுறொரு புதுமையான விதத்தில் கண்ணதாசன் தன்னு டைய முத்திரையைப் பதிக்க எண்ணினார். தன்னுடைய கையெழுத்துப் பாடல் போல், ஒரு பாடலை தானே திரையில் தோன்றி அவர் வழங்க விரும்பினார்!

கல்லூரி நிகழ்ச்சியில், ‘கல்லூரியின் பழைய மாணவர் முத்தையா உமர் கய்யாம் தத்துவப் பாடல் வழங்குவார்’ என்ற அறிவிப்புடன், கண்ணதாசனே திரையில் தோன்றி தன்னுடைய பாடலை டி.எம்.சவுந்தரராஜன் குரலில் வழங்கினார்!

ஆச்சரியம் என்னவென்றால், தன்னுடைய இயற் பெயரான முத்தையாவுடன் கண்ண தாசன் எழுதி பாடுவதாக நடித்த, ‘ஒரு கோப்பையிலே என் குடியிருப்பு’ என்ற பாடல், உமர் கய்யாமின் தத்துவமாக அல்ல, கண்ணதாசனின் பிரகடனப் பாடலாகக் கருதப்பட்டுவிட்டது!

ஒரு விதத்தில் அது ஒரு சிலேடைப் பாடல்.....அதன் பல்லவி உமர் கய்யாமின் பாடல்களைப்போல மதுரச இன்பத்தையும் மங்கையர் தரும் மயக்கத்தையும் குறிக்கிறது... அதே நேரத்தில் கவிஞரின் பிம்பத்தையும் புதுப்பிக்கிறது. ‘இசை பாடலிலே என் உயிர் துடிப்பு’ என்பது கய்யாமைவிட கண்ண தாசனுக்குப் பொருந்துகிறது. பாடலின் சரணங்கள், படைப்பாற்றல்மிக்க கவிஞனின் ஆளுமையை சுட்டுவதுதால், கவிஞரின் சொந்த அறை கூவலாக ஒலிக்கின்றன.

இந்த வகையில் கண்ணதாசனை பிரத்யேகமாக இனம் காட்டும் பாடலாக எண்ணப்படும் பாடலுக்கு, என்றும் மணக்கும் இசையை நல்கிய பெருமை கே.வி. மகாதேவனுக்குக் கிடைத்தது.

மெல்லிசைப் பாணியில் சங்கராபரண மேளத்தில் (மேஜர் ஸ்கேல்) அமைந்த பாடலுக்கு, அவரோகணத்தில் சின்ன நிஷாதம் (ஏ ஷார்ப்) சேர்த்து, பாடல் வரிகளுக்கு பொருட்செறிவும் அவற்றின் கதிக்கு நடை அழகும் கொடுத்து, எளிமையான, அழகான, வெகு சீக்கிரத்தில் பாடக்

கூடிய மெட்டை அமைத்துக்கொடுத்தார் மகாதேவன்.  அவருடைய மெட்டும் வாத்திய இசை சேர்ப்பும் (ஏகப் பட்ட வயலின்கள்), பாடல் வரிகளுக்கு கம்பீரத்தையும் இனிமையையும் அளித்து, பாடலை நன்கு பரிமளிக்க வைத்தன. பாடலின் தன்மையைப் புரிந்துகொண்டு தன்னுடைய எடுப்பான குரலிலும் தெளிவான உச்சரிப்பிலும் சிறப்பாக டி.எம்.சவுந்தரராஜன் பாடினார்.

‘‘நான் நிரந்தரமானவன் அழிவதில்லை, எந்த நிலை யிலும் எனக்கு மரணம் இல்லை’’ என்ற கண்ணதாசனின் வரிகள், கண்ணதாசனின் அடையாளமாக தொடர்ந்து ஒலித்துக் கொண்டிருக்கின்றன. அதேநேரத்தில், கண்ண தாசனின் பாடல்களுக்கு இறவாத இசையமைத்துக் கொடுத்த மகாதேவனின் சிரஞ்சீவித்தன்மையையும் அவை பறை சாற்றிக்கொண்டிருக்கின்றன.            (தொடரும்)Trending Now: