இது உங்கள் இடம்!

22-01-2020 06:07 PM


ரோடு கிராசிங்கில் கவனம் தேவை!

குமரி மாவட்டத்தில் நான்கு வழிச்சாலை வேலை நடந்து கொண்டிருக்கிறதே தவிர இன்னும் வேலை முடிந்து வண்டிகள் போகவில்லை. ரோடுகளில் எக்கச்சக்கமான இரு சக்கர வாகனங்கள், நான்கு சக்கர வாகனங்கள் பறப்பதை நாம் காணலாம். ரோட்டின் ஓரத்தில் சில ஊர்களில் 10 கிலோ மீட்டர் வேகத்தில் அதற்கு கூடுதல் போகக்

கூடாது என்று போர்டு போட்டிருந்தும் போர்டை யார் பார்க்கிறார்கள்? யாரோ நம்மை கொள்வதற்கு துரத்துவது போல் வாகனங்கள் வேகமாக போவதும் உண்டு. இதனால் பொதுமக்கள் பலர் பாதிப்படை வதுண்டு. வயதானவர்கள், நடக்க முடியாதவர்கள், சிறு பிள்ளைகள் ரோட்டை கிராஸ் செய்வதற்கு மிகவும் பயப்படுகிறார்கள்.

– ப. மாதேவன், வெள்ளமடம்.

மூத்தோருக்கு மரியாதை!

சிநேகிதியின் மகளுக்கு பிறந்த நாள் அழைப்பின் பேரில் போயிருந்தேன். பிறந்த நாள் பேபியின் சித்தப்பா, பெரியப்பா பிள்ளைகள் (பத்து வயதிற்குள்) வந்திருந்தார்கள். சிநேகிதி அவர்களை அறிமுகம் செய்து வைக்க குழந்தைகள் ‘ஹாய்’ சொல்லி கைகுலுக்கின. அங்கு வந்த சிநேகிதியின் அம்மா ‘‘வயசுல பெரியவங்களுக்கு ‘ஹாய்’ சொல்லக்கூடாது. கை கூப்பி வணக்கம் சொல்லணும்’’ என்று அறிவுரை சொல்ல, அடுத்த நொடியே எல்லா பிள்ளைகளும் கைகூப்பி ‘வணக்கம் பாட்டி’ன்னு சொல்ல மகிழ்வாயிருந்தது. பிறந்த நாள் பாடலையும் தமிழில் பாட சிறப்பாயிருந்தது.

– என். கோமதி, பெருமாள்புரம்.

இடைஞ்சலோ இடைஞ்சல்!

எல்லா இடங்களிலும் வாகனத்தில் செல்பவர்களின் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டுதான் இருக்கிறது. இரு சக்கர வாகனங்கள் பெருகி விட்டன. தற்போது உள்ள சாலைகளில் இரு சக்கர வாகனங்கள் செல்லவே இடமில்லை. நிறைய வாகன ஓட்டிகள் யாரை பற்றியும் கவலைப்படாமல் சிறிய தெருவாக இருந்தாலும் தாங்கள் கொண்டு வந்த வண்டிகளை அப்படியே ரோட்டிலேயே விட்டுவிட்டு அவரவர் வேலையை செய்ய கிளம்பி விடுகிறார்கள். இது எல்லா இடங்களிலும் இப்போது மிகவும் சகஜமாக நடக்கிறது. இரு சக்கர வாகனங்கள் தான் அப்படியென்றால் நான்கு சக்கர வாகனங்களை (கார்) ஓட்டுபவர்களும் இப்படித்தான் ரோட்டில் அப்படியே நிறுத்திவிட்டு அவர்களது வேலைகளை பார்க்க சென்று விடுகின்றனர். இல்லையென்றால், அந்த தெருவில் இரு சக்கர வாகனமே போய்வர முடியாமல் இருக்கும். நான்கு சக்கர வாகன ஓட்டிகள் அந்த தெருவில் தங்கள் வாகனங்களை ஓட்டிச் சென்று எல்லாருக்கும் இடைஞ்சலை ஏற்படுத்துகிறார்கள். நான்கு சக்கர வாகன ஓட்டிகளே! கொஞ்சம் நிதானமாக சிந்தித்து செயல்படுங்கள்.

– வர்ஷினி, மயிலாடுதுறை.

பொது இடத்தில் இப்படியா?

எனது தெருவில் உள்ள பேக்கரிக்கு சென்றிருந் தேன். மிகவும் பரபரப்பாக காணப்பட்டது கடை. வெகுநேரமாக பிரட் வாங்க காத்திருந்தேன். அப்படி காத்திருந்த வேளையில் ஒரு சம்பவம். ஒரு தாய் தனது ஐந்து வயது பையனை அடித்து நொறுக்கிக் கொண்டிருந்தார். ‘கையில் காசை பார்த்துட்டா போதும்.... அதை வாங்கி கொடு, இதை வாங்கி கொடுன்னு என் உயிரை எடுக்குறே....? வா வீட்ல சூடு போடுறேன்....’ இப்படி திட்டிக் கொண்டே அந்த பையனை அடித்துக் கொண்டிருந்தார். நானும் அருகில் இருப்பவர்களும் எவ்வளவோ சொல்லியும் அந்த அம்மா கேட்கவே இல்லை. அருகில் நின்று கொண்டிருந்த ஒரு பெண்மணி, ‘‘தம்பி.... உனக்கு என்ன வேணும்? ஏன் அழுகுறே.... வா நான் வாங்கி தர்றேன்...’’ என்றார். உடனே அந்த பையனின் அம்மா சிரித்துக் கொண்டு ‘அதோ அவங்க கேட்கிறாங்க பாரு.... என்ன வேணுமோ வாங்கிக்கோ’ என்று சொன்னார். சுற்றி உள்ளவர்களுக்கு பெரிய ஆச்சரியம். இந்த முறை யில் ஒரு குழந்தையை பொது இடத்தில் வைத்து வசை பாடுவது சரியா.... என்று அனைவரும் திட்டி தீர்த்தனர்.

– நிவேதிதா, சென்னை.Trending Now: