மூத்த பத்திரிகையாளர் சுதாங்கன் எழுதும் வாலிப கவிஞர் வாலி – 27

22-01-2020 04:30 PM

ஆரம்பத்தில் கே.வி. எம்முக்கும்  வாலிக்கும் சுமுகமான உறவு ஏற்படவில்லை.  பிறகு ஒரு நாள் கே.வி. எம்மின் உதவியாளர் புகழேந்தி, வாலியின் இருப்பிடம் தேடி வந்து, வாலியை சமாதானப்படுத்தி கே.வி.எம்மை சந்திக்க வைத்து இருவருக்கும் சமரச உணர்வை ஏற்படுத்தினார். பிறகு வாலியும், கே.வி.எம்மும் இணைந்து எம்.ஜி.ஆர் நடித்த ` அரச கட்டளை’,  ‘அடிமைப்பெண்’, ‘அன்னமிட்ட கை’, ‘என் அண்ணன்’,‘தாலி பாக்கியம்’, ‘தாழம்பூ’ என்று ஏராளமான படங் களுக்கு ஒன்றாகப் பணிபுரிந்தார்கள்.

அதே போல் சிவாஜி நடித்த ‘எதிரொலி’, ‘பேசும் தெய்வம்’, ‘செல்வம்’,‘சிம்ம சொப்பனம்’ என எத்தனையோ படங்களுக்கு மனமொன்றித் தொழில்புரிய நேர்ந்தது.

 சிவாஜி தன் இறுதிநாள் வரையில் வாலியை எங்கா வது சந்திக்க நேர்ந்தால், வாலி எழுதி கே.வி. எம். இசையமைத்த, ‘அழகு தெய்வம் மெல்ல மெல்ல’  என்று வரி பிசகாமல் பாடி, வாலியை நலம் விசாரிப்பார். அதில் வாலி குறிப்பிட்டிருந்த உவமைகள் சிவாஜிக்கு  மனப் பாடம்.

 ` இளநீரைச் சுமந்திருக்கும்

 தென்னை மரமுமல்ல

 இங்குமங்கும் மீன்பாயும்

 நீரோடை அல்ல

 மழை மேகம் குடை பிடிக்கும்

 குளிர் நிலவும் அல்ல.

 இப்படிப் போகும் அந்த பாட்டு.

 அந்தப் பாட்டு இன்றளவும் நினை வில் நிற்பதற்குக் காரணம் ` மாமா’ வின் அற்புதமான இசையமைப்பு என்று சொன்னால் அது முக்காலும் உண்மை.

`மாமா’ என்று செல்லமாக அழைக்

கப்பட்ட  கே.வி. மகாதேவனோடு சேர்ந்து நூற்றுக் கணக்கான பாடல்களை வாலி  பின்னாளில் எழுதினார்.

சோக ராகமான `முகாரி’யில் ராம நாதய்யர் காதல் பாட்டை இசைத்தது போல, இன்னொரு சோக ராகமான ‘சஹானா’ வில் காதல் பாட்டை இசைந்து இசை கொண்டவர் மாமா.

கர்நாடக சங்கீதத்தைக் கலப்பட மில்லாமல் வழங்கிய அந்த மேதையோடு பணியாற்றியது  வாலிக்கு பெருமை சேர்க்கும் விஷயம்.

 தமிழிலும் தெலுங்கிலும்,  கிட்டத்தட்ட முப்பதாண்டுகள் கொடி கட்டிப் பறந்தவர் கே.வி. மகாதேவன். பாட்டுக்கான மெட்டு, என்ற கொள்கையை பிடிவாதமாகக் கடைப் பிடித்தவர் கே.வி. எம்.

இத்தகு மேதையோடு, வாலிக்கு சிந்தனை அலைவரிசை ஒன்றாக சில காலங்கள் வாலி காத்திருக்க வேண்டியிருந்தது. ஆனால், தான் சந்தித்த முதல் நாளிலேயே ஒரு இசையமைப் பாளருக்கும், வாலிக்கும் பரஸ்பர ஈர்ப்பு உண்டாயிற்று.

அவர்தான் வி.குமார்.

 கே. பாலசந்தர் இயக்கு நராவதற்குப் பெரிதும் காரணமாக இருந்தவரே, இந்த  குமார்தான். பாலசந்தர் இயக்கிய முதல் படமான `நீர்க்குமிழி’க்கே வாலி பாட்டு எழுதும் சூழ்நிலை வந்தது. ஆனால், ஏனோ அது முடியாமல் போனது.

 வி.குமாரும், வாலியும்  ஏவி.எம். தயாரித்து பாலசந்தர் இயக்கிய  ‘மேஜர் சந்திரகாந்த்’ படத்தில்தான் முதன்முதலாக இணைந்தார்கள். அவர்களை இணைத்த பெருமை ஏவி.எம்.குமரனையே சாரும்.

குமார், இசையமைத்து வாலி எழுது வதும் உண்டு. வாலி எழுதி, அவர் இசை

யமைப்பதும் உண்டு.  இருவரது பாடல் களிலும் இருவரது பங்கும் பரவியிருக்கும்.

இருவரும் சேர்ந்து பல பிரபல பாடல்

களை உருவாக்கியிருக்கிறார்கள்.குமாரு டைய மெட்டுக்களில், அந்நாளில் பணி யாற்றிக் கொண்டிருந்த இசையமைப்

பாளர்களின் பாதிப்பு கொஞ்சம் கூட இருக்காது. `இது குமார் பாட்டு’ என்று இனம் கண்டு கொள்ளலாம்.

அப்படி அவருக்கென்று ஒரு தனித் தன்மையை அவர் தக்க வைத்துக் கொண்டு பணி யாற்றியதுதான் அவரது தனி சிறப்பு.குமாரின் பாடல்கள் அனைத்திலுமே classical touches ஏராளமாக இருக்கும். யமுனா கல்யாணி, சுபபந்துவராளி, முதலிய ராகங்கள் அவர் அடிக்கடி கையாளக்கூடியவை. யாரும், அவருடைய பின்னணி இசையில் புல்லாங்குழல் அதுவும் ‘பன்னாலால் கோஷின் பாணி’ யில் பிரதானமாக இடம்பெறும்.

தொலைபேசி இலாகாவில் பணிபுரிந்த காலத்திலேயே, அவர் தொல்லிசையையும், மெல்லிசையையும் கற்றுத் தேர்ந்திருப்பதை, அவர் பாடும்போது அருகிலிருந்து உணர்ந்தவர் வாலி.  `எதிர்நீச்சல்’ `நூற்றுக்கு நூறு’ `இரு கோடுகள்’ `வெள்ளி விழா’ முதலிய கலாகேந்திரா படைப்புகளில் இவர்கள் இருவரது பங்கும் ஏராளமாக உள்ளது. அந்த  படத்தின் பாடல்களெல்லாம் மிகவும் பிரபலம் பெற்று, சம்பந்தப்பட்ட வர்களெல்லாம் சரியாமல் காப்பாற்றி யிருக்கிறது.

`புன்னகை மன்னன்’ பாடல் `இரு கோடுகள்’படத்தின் வெற்றிக்கு அஸ்தி வாரம் என்பதையும், அதற்கு அற்புதமான இசையமைத்து பாடல் வரிகளை பரிமளிக்கச் செய்தது குமார் என்பதையும், அந்த பாடல் ` பாப்புலராக’ இருக்க வேண்டும் என்பதை மட்டுமே மனதில் கொள்ளாமல், காட்சிக்கு பொருத்தமான கருத்தாழத்தோடு துலங்க வேண்டுமென்பதை நெஞ்சில் நிறுத்தி எழுதப்பட்டது என்பதையும், சராசரி ரசிகன் கூட இன்றளவும் உணர்ந்து பேசுகின்ற நிலையில் இருக்கும்போது இதையெல்லாம் சொல்ல  வேண்டியவர்கள் சொல்லாமல் கல்லாக இருந்து விட்ட காரணத்தால் வாலியே இதை வெளிப்படையாக சொல்லிக்கொண்டிருந்தார்.

 பொதுவாக சினிமாவில்  ஏறி வந்தவர்கள் ஏணிகளை உதாசீனப்படுத்திவிட்டு, இன்றைய சூழ்நிலைக்கேற்ப நிறம் மாறி நெஞ்சை நிமிர்த்திக் கொள்ளும் அறியாமை, எவரிடத்தும் நீக்கமற நிறைந்திருக்கிறது.

 குமார் இசையமைத்த அனைத்து படங்களுக்கும் குமாரின் பங்கு விகிதாசாரத்தில் வேண்டுமானால் வித்தியாசப் படலாமே தவிர – அறவே இல்லையென்று எவரும் சொல்ல இயலாது. குமாரின் பெரும்பாலான படங்களுக்குப் பாடலாசிரியராக  இருந்து உணர்ந்தவர் வாலி.

 வாலிக்கும், வி. குமாருக்கும் இடையே சுதிசுத்தமாக ஒரு மனநிலை ஒருமைப்பாடு இருந்தது. அதுதான் அவர்கள் பாடல்களின் வெற்றிக்குக் காரணம்.  குமாரின் இசைப்புலமையில் முழு நம்பிக்கை இருந்த காரணத்தினால் தான்   ‘வெள்ளி விழா’ படத்தில் வருகின்ற  ‘உனக்கென்ன குறைச்சல்’ என்ற பாடலைப் பாட, விஸ்வநாதன் மனமுவந்து வந்து பாடிக் கொடுத்தார்.

குமார்தான் கவிஞனாக மட்டும் கோலோச்சிக் கொண்டிருந்த வாலியை, ஒரு நாடகாசிரியனாகவும் விளங்க வேண்டுமென வற்புறுத்தி `கிருஷ்ண விஜயம்’ என்னும் நாடகத்தை எழுதத் தூண்டினார்.  அந்த நாடகக் குழுவில் வாலியுடன் பாகஸ்தராகவும் இருந்தவர் குமார்.

‘கிருஷ்ண விஜயம்’ நாடகம்- தேங்காய் சீனிவாசனின் அந்தஸ்தை உயர்த்தியது. ‘கலியுக  கண்ணன்’ என்னும் பெயரில் அது படமாக வந்த போது நாடகத்தில் கதாநாயகனாக நடித்த தேங்காய் சீனிவாசனே படத்திலும் கதாநாயகனாக நடித்தார்.

 வாலியினுடைய இந்த கதை , நான்கு மொழிகளில் திரைப்படமாக வந்து வெற்றி பெற்றது.

‘கலியுக கண்ணன்’ படத்தில் இடம்பெற்ற  ‘ஜெயிச்சுட்டே கண்ணா’ என்ற பாடலுக்கு குமார் பத்தே நிமிடங்களில் இசையமைத்தார்.

(தொடரும்)
Trending Now: