காத்தானின் பொம்மை!

22-01-2020 03:33 PM

புன்­னைக்­காய்­குடி அமை­தி­யான கிரா­மம். அங்கு, சிறு­வன் காத்­தான் குடும்­பம், மண் பாண்­டங்­கள் செய்து வாழ்ந்து வந்­தது. வெள்­ளிக் கிழ­மை­க­ளில், சந்தை கூடி சந்­த­டி­யாக இருக்­கும்.

ஆண்­க­ளும், பெண்­க­ளும் பொருட்­களை சுமந்து வரு­வர். சாக்கை விரித்து, சரக்கை பரப்­பும் காட்­சி­களை பார்ப்­ப­தில், காத்­தா­னுக்கு தனி ஆர்­வம்.

அன்று சீக்­கி­ரமே எழுந்து சந்­தைக்கு சென்­ற­வன் கவ­னத்தை, ஒரு பொம்­மைக் கடை ஈர்த்­தது. வண்­ணம் பூசிய அழ­கிய மண் பொம்­மை­களை விற்­றுக்­கொண்­டி­ருந்­தார் முதி­ய­வர்.

அவற்றை கூர்ந்து நோக்கி, 'என்ன அழ­கான பொம்­மைங்க; என்­னால இது போல செய்ய முடி­யுமா...' என முணு­மு­ணுத்­தான். இதைக் கேட்ட முதி­ய­வர் சிரித்­த­ப­டியே, 'தம்பி... உன்­னா­லும் செய்ய முடி­யும்...' என்­றார்.

'இல்ல தாத்தா... அப்­பா­வும், அண்­ணா­வும் செய்­யுற சட்டி, பானை­க­ளையே, என்­னால் செய்ய முடி­யாதே... மண்ணு தான் குழைத்­துக் கொடுக்­கி­றேன்...'

'அடடே... இதுவே பெரிய விஷ­ய­மாச்சே... பொறு­மை­யும், விடா­மு­யற்­சி­யும் இருந்தா எதை­யும் சாதிக்­க­லாம்...' என்று உற்­சா­கப்­ப­டுத்­தி­னார்.

காத்­தா­னுக்கு ஆசை பிறந்­தது. அந்த பொம்­மை­க­ளையே கவ­னித்­தான்.

அப்­போது, 'ஒன்றை மட்­டும் ஞாப­கத்­தில் கொள்; எதை­யும் முழு­ம­ன­து­டன் திருத்­த­மா­கச் செய்...' என்­றார் முதி­ய­வர்.

கடைக்கு ஆட்­கள் வரவே, நகர்ந்­தான் காத்­தான். ஜமுக்­கா­ளம், மிதி­யடி பரப்­பி­யி­ருந்த கடைக்கு வந்­தான். அங்கு சிறு­மி­யு­டன் இருந்த மூதாட்டி, 'என் பேத்தி, பின்­னிய விரிப்பை விற்க வந்­தி­ருக்­கி­றாள்...' என்­றாள்.

வித­வி­த­மான பூ வடி­வத்­து­டன், அழ­காக இருந்­தது விரிப்பு.

'இதை நீயா பின்­னின...' என்­றான்.

பெரு­மை­யு­டன், 'ஆமா... தறில போட்டு பூ வடி­வத்­து­டன் பின்­னி­னேன்...' என்­றாள் சிறுமி.

அது போன்றே ஒரு கடை அமைக்க தீர்­மா­னித்து, வீட்­டுக்கு ஓடி­னான் காத்­தன். குழைத்­துப் போட்­டி­ருந்த களி­மண், மூலை­யில் கிடந்­தது. அதை எடுத்து புளி­ய­ம­ரத்­த­டிக்கு வந்­தான். பிஞ்சு விரல்­க­ளால், உருட்டி நெளித்­தான். சிறிய குரு­வி­யாக மாறி­யது.

வியப்பு மேலிட, 'அடே ரொம்ப நல்லா வந்து விட்­டதே' என, பெரு­மைப்­பட்­டுக் கொண்­டான்.

குருவி ஒரு பக்­கம் சாய்ந்து நின்­றது. சிறிய தவறு. அடுத்த பொம்­மையை, கவ­ன­மு­டன் உரு­வாக்­கி­னான். தண்­ணீர் குடத்­து­டன் பெண், குரைக்­கும் நாய், வாத்து, மூட்டை சுமக்­கும் முதி­ய­வர்... இப்­படி, பல பொம்­மை­கள் செய்­தி­ருந்­தான்.

சில­வற்­றில் குறை­கள் இருந்­தன.

'வண்­ணம் பூசி சரி செய்து விட­லாம்' என்று சமா­தா­னம் செய்து கொண்­டான். சட்டி, பானை­களை சுடும் முன், வெயி­லில் காய வைப்­பது வழக்­கம்.

'என் பொம்­மை­கள் சின்­னது தானே, சீக்­கி­ரம் காயந்து விடும்' என நினைத்து, சூளைக்­குள் வைத்து தீ மூட்­டி­னான்.

அரை­மணி நேரம் காத்­தி­ருந்து ஆவ­லோடு பிரித்­தான். மனம் சுண்டி விட்­டது. சூளை­யில், அவன் செய்த பொம்­மை­கள் ஒன்­றை­யும் காண­வில்லை.

துாளான களி­மண் சிறு கட்­டி­க­ளு­டன் இருந்­தது. அவ­னுக்­குக் கண்­க­ளில் நீர் திரண்­டது. ஏமாற்­றத்­து­டன் நின்­றான்.

பிற்­ப­கல், 3:00 மணிக்கு அண்ணா வந்­தான். சோர்ந்­தி­ருந்த காத்­தா­னைக் கண்டு, 'ஏன் அழுற...' என விசா­ரித்­தான்.

'இந்த புத்­திக்­கெட்ட சூளை, என் பொம்­மை­களை வீணாக்­கி­விட்­டது; எவ்­வ­ளவு அழ­காக இருந்­துச்சு தெரி­யுமா... நானே செய்­தேன்...'

'பொம்­மையா... நீ செய்­தாயா...' என்று வியப்­போடு கேட்ட அண்­ணா­வி­டம், நடந்­த­வற்றை கூறி­னான் காத்­தான்.

'தம்பி... சூளை மேல் குத்­த­மில்லை. அப்பா செய்ற மாதிரி, மண் பொம்­மை­களை, இரண்டு நாளா­வது காய வைக்க வேண்­டாமா... பொம்மை பார்க்க, காய்ந்த மாதிரி இருக்­கும். உள்ளே ஈரம் அப்­ப­டியே தான் இருக்­கும். ஈர மண்ணை சூளை­யில் வைத்­தால், மண்­ணில் உள்ள தண்ணி ஆவி­யாக மாறு­மல்­லவா... அந்த ஆவிக்கு வெளியே போக வழி கிடை­யாது. அது, உன் பொம்­மையை உடைத்து தான் வெளி­யே­ற­ணும்; அத­னால, சுக்­காக காய்ந்த பின் தான், சூளை­யில் சுட­ணும்...' என்­றான்.

நன்கு புரிந்து கொண்­டான் காத்­தான். நன்­றி­யு­டன் பார்த்­த­வனை, 'தம்பி... நீ மறு­ப­டி­யும் பொம்மை செய்... சுடு­வ­தற்கு நான் பயிற்சி தரேன்...' என்­றான் அண்­ணன்.

'ஊஹூம்... கையெல்­லாம் வலிக்­குது... இப்போ செய்து, சந்­தை­யில விற்க நேர­மேது...'

'ஏன், அடுத்த சந்­தை­யில் விற்­க­லா­மில்ல... இன்­னிக்கு சிர­ம­மாக இருந்­தால் நாளைக்­குச் செய்...' என்று அர­வ­ணைத்­தான்.

மறு­நாள் -

மண்­ணைப் பிசைந்து, அழகு பொம்­மை­கள் செய்­தான் காத்­தான். பூனைக் குட்டி, நாய், குருவி எல்­லாம் வடி­வ­மாக வந்­தி­ருந்­தன. மூன்று நாட்­கள் வெயி­லில் காய வைத்­தான்.

கடை­சி­யாக மிக­வும் கவ­ன­மாக, ஒரு கிளி செய்­தான். அதைக் காய வைக்க எடுத்­துச் சென்ற போது, தவறி விழுந்து உடைந்­தது. காத்­தா­னுக்கு, துக்­க­மும், ஆத்­தி­ர­மும் தாங்­க­வில்லை. உடைந்த கிளியை எட்டி உதைத்து, 'இனி பொம்­மையே செய்­வ­தில்லை' என, ஓடி விட்­டான்.

அன்று மாலை, வெளி­யில் காய வைத்­தி­ருந்த பொம்­மை­க­ளைக் கண்­டார் அப்பா. அது பற்றி பெரு­மை­யாக அம்­மா­வி­டம் பேசிக் கொண்­டி­ருந்­தார். அது காதில் விழுந்­த­தும், காத்­தா­னுக்கு உற்­சா­கம் பிறந்­தது.

அடுத்த நாள் அழகு மிக்க கிளி பொம்­மை­களை உரு­வக்­கி­னான். அவற்றை நன்­றாக உலர்த்தி, சூளை­யில் சுட்டு, பள­ப­ளக்­கும் வண்­ணங்­கள் பூசி, அழ­கு­ப­டுத்­தி­னான்.

வெள்­ளிக்­கி­ழமை சந்தை கூடி­யது. காத்­தா­னின் மகிழ்ச்­சிக்கு கேட்­கவா வேண்­டும். பொம்­மை­களை அடுக்கி கடை பரப்­பி­னான். சிறிது நேரத்­தில், குழந்­தை­கள் கூடி விட்­ட­னர்.

யானைக் குட்டி பொம்­மையை பார்த்த ஒரு­வன், 'எவ்­வ­ளவு அழ­காக இருக்­குது...' என்­றான்.

எல்லா பொம்­மை­க­ளும் விற்று தீர்ந்­தன; கை நிறைய பணத்­து­டன் பொம்­மைக்­கார தாத்­தா­வுக்கு நன்றி தெரி­வித்­தான் காத்­தான்; அவ­னைப் பாராட்டி, மகாத்மா காந்தி பொம்மை ஒன்றை பரி­சாக அளித்­தார் முதி­ய­வர்.

தங்­கங்­களே... காத்­தான் பொம்மை செய்­தது போல், பல திறன்­கள் உங்­க­ளி­ட­மும் ஒளிந்­தி­ருக்­கும்; அவற்றை தட்டி எழுப்­புங்க... வீணாக பொழுதை போக்­கா­மல், ஆக்­கப்­பூர்­வ­மாக செய­லில் ஈடு­ப­டுங்க. சரியா!

வாண்­டு­மாமாTrending Now: