மக்களுக்கு பயன்படணும்!

22-01-2020 03:27 PM

“டாக்டர் நீனா குப்தான்னு ஒரு கணித ஆய்வாளருக்கு சாந்தி ஸ்வரூப் பட்நாகர் விருது கிடைச்சிருக்குன்னு நியூஸ் படிச்சேன் மிஸ். ரொம்ப சின்ன வயசிலேயே இந்த விருதை வாங்கியிருக்காங்களாம். இது அவ்வளவு முக்கியமான விருதா மிஸ்?” பள்ளி விட்டு வீடு திரும்பும்போது, உமா மிஸ்ஸிடம் கேட்டேன்.

”எவ்வளவு முக்கியமான விருது தெரியுமா? உலக அளவுல நோபல் விருதுகளை முக்கியமானதுன்னு சொல்றோம் இல்லையா? அதேபோல, இந்திய அளவுல அறிவியல், கணிதம், பொறியியல்னு பல துறைகளில் முக்கியமானவங்களை அங்கீகரிக்கற விருது தான் 'சாந்தி ஸ்வரூப் பட்நாகர் விருது.' இவர் யாருன்னு தெரியுமா? தெரிஞ்சா தான் இந்த விருதோட மகிமை தெரியும்.”

“யார் மிஸ் இந்த பட்நாகர்?”

“இந்திய ஆய்வகங்களோட தந்தைன்னே இவரைச் சொல்லுவாங்க. சி.எஸ்.ஐ.ஆர்.னு கேள்விப்பட்டிருக்கியா? இந்திய அறிவியல், தொழில்துறை ஆராய்ச்சி மையம்னு இதுக்கு பேரு. இன்னிக்கு சி.எஸ்.ஐ.ஆர். அமைப்புக்கு 38 தேசிய பரிசோதனைக் கூடங்கள், 39 வெளி மையங்கள், 3 கண்டுபிடிப்பு வளாகங்கள் இருக்கு. 5 யூனிட்களில் ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிபுணர்கள் வேலை செய்யறாங்க. 4,600 விஞ்ஞானிகளும் அவர்களுக்கு உதவியாக 8,000 அறிவியல் மற்றும் தொழில்நுட்பப் பணியாளர்களும் வேலைசெய்யறாங்க. இந்த வளர்ச்சி அத்தனைக்கும் ஆரம்பம், பட்நாகர் போட்டது.”

“ஓ!”

“ஆமாம். இந்தியா சுதந்திரம் அடையறதுக்கு கொஞ்சம் முன்னாடி 1942இல, சி.எஸ்.ஐ.ஆர். நிறுவனத்தோட ஆலோசகரா சேர்ந்தார் பட்நாகர். சுதந்திரம் அடைஞ்ச பிறகு, இந்த அமைப்போட வளர்ச்சி அசுர வேகத்துல இருந்தது. ரொம்ப ஜாலியா ஒரு விஷயம் சொல்வாங்க. ஜவாஹர்லால் நேரு காலையில வாக்கிங் போகும்போது, பட்நாகர் அவரோட பேசி ஏதேனும் ஒரு துறைக்கான ஆய்வுக்கூடத்துக்கு அனுமதி வாங்கிடுவாராம். அப்புறம், நேரு ஆபீஸ் போறதுக்குள்ள அதுக்குத் தேவைப்படக்கூடிய ஆவணங்களையெல்லாம் தயாரிச்சு அவரோட மேஜைக்கு அனுப்பிடுவாராம். அந்த அளவுக்கு உற்சாகி. திட்டமிடக்கூடியவர்.

சி.எஸ்.ஐ.அர்.இல பட்நாகர் 15 ஆண்டுகள் இருந்தார். அதுக்குள்ள தேசிய அளவுல முக்கியமான 12 ஆய்வுக்கூடங்களை அமைச்சு, செயல்படவும் தொடங்கிடுச்சுன்னா பார்த்துக்கோயேன். இன்னிக்கு நாம பெருமையா சொல்ற, பூனேவுல இருக்கும் தேசிய வேதியியல் ஆய்வுக்கூடம், டில்லியில் இருக்கும் தேசிய இயற்பியல் ஆய்வுக்கூடம் ஆகியவை அப்போதான் உருவாச்சு.

கேரள மாநிலத்துல இருக்கும் ரேர் எர்த் லிமிடெட்டையும் இவர்தான் உருவாக்கினார். இதில்லாமல், பல தனியார் எண்ணெய் சுத்திகரிப்பு நிலையங்கள் உருவாகவும் இவர்தான் காரணம்.”

“ஆச்சரியமா இருக்கே மிஸ். எதுக்கு இவ்வளவு ஆய்வகங்களைத் தொடங்கினார்?”

“முதல்ல அவரே ஒரு சயின்டிஸ்ட் கதிர். வேதியியல் துறையில் மிக முக்கியமான பல ஆய்வுகளையும் கண்டுபிடிப்புகளையும் செஞ்சு இருக்கார். சி.எஸ்.ஐ.ஆர்.க்கு முன்னாடி அவர் கல்லூரியில பேராசிரியரா இருந்தார். அங்கேதான் அவரோடு வேரொரு மேதைமை வெளிப்பட்டது. அறிவியலும் தொழில்நுட்பமும் மனிதகுலத்துக்கு உதவணுங்கறதுதான் அவரோட எண்ணம். விஞ்ஞானிகள் தந்த கோபுரத்துல போய் உட்கார்ந்து கொள்ளக் கூடாது. மக்களோட தேவை என்ன? தொழிற்சாலைகளோட தேவை என்ன? இந்திய வளர்ச்சிக்கு என்ன முன்னேற்றங்கள் தேவை? இதையெல்லாம் புரிஞ்சுக்கிட்டு தங்களோட அறிவையும் திறமையையும் பயன்படுத்தி, வழிமுறைகளையும் தீர்வுகளையும் கண்டுபிடிக்கணும்ங்கறதுதான் அவரோட நோக்கம்.

அதாவது, அறிவியல்ங்கறது வெறும் படிப்பு இல்ல. அதுக்கு ஒரு பயன்பாடு இருக்கு. மக்களுக்குப் பயன்படணும். அப்போதுதான், அந்த அறிவுக்கே பெருமை. அதை மையமாக வெச்சுத்தான் அவர் வேலை செஞ்சுருக்கார்.

கல்லூரியில இருந்தபோது, ஒரு பெரிய எண்ணெtய் துரப்பண நிறுவனத்துக்கு உதவியிருக்கார். எண்ணெய் துரப்பணம் செய்யும்போது, களிமண் பயன்படுத்துவாங்க. கீழே போகும்போது, அங்கே உப்புத்தண்ணீரோட களிமண் சேர்ந்தா, அது கெட்டியா மாறிடும். துரப்பணக் குழாய் கீழே போகமுடியாது. அதுக்கு அறிவியல்பூர்வமான தீர்வைக் கொடுத்தார் பட்நாகர். இதைக் கண்டு ஆச்சரியப்பட்ட, அந்த பிரிட்டிஷ் துரப்பண நிறுவனம் 1925இலேயே அவருக்கு 1.5 லட்சம் ரூபாய் கொடுத்தது. அதை அப்படியே பஞ்சாப் பல்கலைக்கழகத்துல பெட்ரோலிய ஆய்வுகளுக்கான ஒரு துறையை ஆரம்பிக்க பயன்படுத்தினார்.

இது ஓர் உதாரணம். தன் கண்டுபிடிப்புகளுக்குக் கிடைத்த காப்புரிமைத் தொகையைக்கூட அறிவியல் வளர்ச்சிக்குக் கொடுத்தவர் பட்நாகர். நான் வளர்ந்தால் போதாது, என் இந்தியா வளரணும், அதுக்கு என் அறிவு பயன்படணும்ங்கறதுதான் இந்த முன்னோடியோட எண்ணம். தன்னைப்போல இந்தியா மீது ஆர்வம் கொண்ட எண்ணற்ற விஞ்ஞானிகளை வளர்த்தெடுக்கணும்னு விருப்பப்பட்டார் பட்நாகர். அந்தக் கனவு இன்னிக்கு ஆலமரம்போல விரிந்து படர்ந்திருக்கு.

அப்பேர்ப்பட்ட தொலைநோக்குப் பார்வையோட இருந்த மனிதர் பெயரால வழங்கப்படற ஒரு விருதை வாங்கறது எவ்வளவு பெரிய விஷயம்? உண்மையிலேயே கொடுத்து வெச்சிருக்கணும்.”

எனக்கு வார்த்தைகள் கைகொடுக்கவில்லை. பட்நாகர் தான் என் மனமெங்கும் ஆக்கிரமித்திருந்தார்.Trending Now: