இந்திய பங்குச்சந்தைகள் தொடர்ந்து 2வது நாளாக சரிவு

21-01-2020 08:31 PM

மும்பை,

  மும்பை பங்குச் சந்தை குறியீட்டெண் சென்செக்ஸ் இன்று 205 புள்ளிகள் வீழ்ச்சி அடைந்தது.

2019-2020 ஆண்டுகளுக்கான இந்தியாவின் ஒட்டு மொத்த பொருளாதார வளர்ச்சி  4.8 சதவீதமாக குறையும் என்று ஐ.எம்.எப் தலைமை ஆலோசகர் கீதா கோபிநாத் கணித்துள்ளார். 

மேலும் சீனாவில் வைரஸ் நோய் பரவி வருவது பெரும் கவலை ஏற்படுத்தியுள்ளது. இது போன்ற காரணங்களால் ஆசிய பங்குச்சந்தைகளில் வீழ்ச்சி ஏற்பட்டது. இதைத்தொடர்ந்து இந்திய பங்குச்சந்தைகளிலும் சரிவு ஏற்பட்டது.

இன்று காலை பங்குச்சந்தைகளில் வர்த்தகம் சரிவுடன்   தொடங்கியது. வர்த்தக இறுதியில் சென்செக்ஸ் 205.10 புள்ளிகள் சரிந்து 41,323.81, புள்ளிகளில் நிலைபெற்றது.

தேசியப் பங்குச் சந்தைக் குறியீட்டு எண் நிப்டி 54.70புள்ளிகள் சரிந்து 12,169.85 புள்ளிகளில் நிலைபெற்றது.

டாடா ஸ்டீல் இன்று ஒரே நாளில் மட்டும் 3.01 சதவீதம் சரிந்தது. இதைத்தொடர்ந்து எம் அண்ட் எம், மாருதி, ஆசிய பெயிண்ட்ஸ், பவர் கிரிட், ஐடிசி மற்றும் ஆக்சிஸ் வங்கி, ஆகிய  நிறுவனங்களின் பங்குகளின் மதிப்பும் சரிந்தது.

மறுபக்கம் அல்ட்ராடெக் சிமென்ட், எச்.டி.எஃப்.சி, கோட்டக் வங்கி, ஓ.என்.ஜி.சி மற்றும் டி.சி.எஸ்ஆகிய நிறுவனங்களின் பங்குகள் மதிப்பு உயர்ந்தது.

இந்திய ரூபாயின் மதிப்பு

இன்று காலை (21-01-2020) வர்த்தகம் துவங்கியதும் அமெரிக்க டாலருக்கு எதிரான நாணய மாற்றின் போது இந்திய ரூபாயின் மதிப்பு 6 காசுகள் சரிந்து ரூ.71.17 காசுகளாக இருந்தது. இன்று  மாலையில் இந்திய ரூபாயின் மதிப்பு ரூ.71.21  காசுகளாக நிலைபெற்றது.

நேற்று வர்த்தக இறுதியில் டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு 71.11 காசுகளாக இருந்தது குறிப்பிடத்தக்கது.Trending Now: