ரஜினிக்கு பி.எச்.டி. பட்டமா கொடுக்கப்போகிறார்கள்?: அமைச்சர் ஜெயக்குமார் கேள்வி

21-01-2020 05:28 PM

சென்னை,

பழைய சம்பவங்களை  பேசி ஆராய்ச்சி செய்வதால் ரஜினிகாந்துக்கு பி.எச்.டி பட்டமா கொடுக்கப்போகிறார்கள்? என்று மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் இன்று கேள்வியெழுப்பியுள்ளார். 

ரஜினிகாந்த் கடந்த 15-ம் தேதி துக்ளக் விழாவில் பங்கேற்றபோது 1971-ல் பெரியார் நடத்திய ஊர்வலம் குறித்தும், முரசொலி - துக்ளக் குறித்தும் ஒப்பிட்டுப் பேசியது சர்ச்சையானது. 

இதில் பெரியார் குறித்து அவதூறாகப் பேசியதாக திராவிடர் கழகம் மூலம், ரஜினி மீது தமிழ்நாடு முழுவதும் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது.

ரஜினிகாந்த் பேட்டி

 சென்னையில் இன்று மீண்டும் செய்தியாளர்களைச் சந்தித்தார் ரஜினிகாந்த், 

1971-ல் சேலத்தில் நடந்த பேரணி குறித்து கற்பனையாக நான் எதுவும் கூறவில்லை. அதனால் என் பேச்சுக்கு மன்னிப்போ, வருத்தமோ கேட்க மாட்டேன். இது மறுக்கக் கூடிய சம்பவம் அல்ல. ஆனால் மறக்க வேண்டிய சம்பவம்  என்று தெரிவித்தார்.

இதனால் இந்த விவகாரம் மீண்டும் சூடுபிடித்தது. 2017-ல் வெளியான அவுட்லுக் பத்திரிகையை ரஜினி ஆதாரமாகக் காட்டி பேட்டி அளித்ததைப் பலரும் விமர்சித்தனர்.

அமைச்சர் ஜெயக்குமார் கருத்து

ரஜினிகாந்த் பேச்சு குறித்து நேற்றே அதிமுக சார்பில் அமைச்சர் ஜெயக்குமார் பேட்டி அளிக்கும்போது, 

பரட்டை பத்த வச்சது இன்னும் எரிந்து கொண்டிருக்கிறது. ரஜினிகாந்த் பழைய கருத்துகளைப் பேசி இருக்கக்கூடாது. பெரியார் குறித்த பேச்சை அவர் தவிர்த்திருக்க வேண்டும் என்று தெரிவித்திருந்தார்.

இந்நிலையில் இன்று தனியார் தொலைக்காட்சிக்குப் பேட்டியளித்த அமைச்சர் ஜெயக்குமார், 

தேவையில்லாதவைகளை ஆராய்ச்சி செய்ய வேண்டாம். பழைய நிகழ்வுகளைப் பேசி ஆராய்ச்சி செய்வதால் ரஜினிகாந்துக்கு பிஎச்.டி பட்டமா கொடுக்கப் போகிறார்கள்?

இது மறுக்க வேண்டிய சம்பவமல்ல, மறக்க வேண்டிய சம்பவம் என அதை ஞாபகப்படுத்தி, தன்னுடைய கருத்திலேயே ரஜினி முரண்பாடாக உள்ளார். அனைவரும் மதிக்கும் பெரியார் பற்றி ரஜினிகாந்த் பேசியது கண்டனத்துக்குரியது  என அமைச்சர் ஜெயக்குமார்  தெரிவித்தார்.Trending Now: