மூத்த பத்திரிகையாளர் சுதாங்கனின் ‘திருமால் பெருமை’ –18

21-01-2020 12:16 AM

 அசுரர்கள் பிரகலாதன் மீது ஏவிய மாயாஜாலங்கள் யாவும் விஷ்ணுவின் சக்கராயுதத்தால் தகர்த்தெறியப்பட்டன. அசுர சமையல்காரன் கொடுத்த விஷ உணவை பிரகலாதன் சாப்பிட்டு ஜீரணம் செய்துவிட்டான். இப்படி எத்தனையோ சிறப்புக்களைப் பெற்று பிரகலாதாழ்வானாக இருந்த ஒரு மகாபுருஷன். தன்னை போன்றே எல்லா உயிர்களையும் நினைத்தவன். சத்தியசீலன், தர்மாத்மா, எல்லா நற்குணங்களுக்கும் அவன் ஒரு பொக்கிஷமாகத் திகழ்ந்தான். நல்லோர் யாவருக்கும் ஒப்புயர்வற்ற ஒரு பக்தனாக விளங்கினான்.

 மைத்ரேயர் பராசரரிடம் சொன்னார், ‘தாங்கள் மனு புத்திரர்களின் வம்சாவளிகளைப் பற்றிச் சொன்னீர்கள். இந்த உலகத்திற்கு காரணரூபன் விஷ்ணு பகவானே என்றும் எடுத்துச் சொன்னீர்கள். பிரகலாதனைப் பற்றி  எத்தனையோ கெடுதல்களை செய்தும் அவன் உயிருக்கு எந்த ஆபத்தும் ஏற்படவில்லை என்றும் தாங்கள் சொன்னீர்கள். அது பற்றி என் மனதில் பல சந்தேகங்கள் உருவாகின்றன.  அசுரர்கள் பிரகலாதனுக்கு அடுக்கடுக்காக ஏன் இந்த துன்பங்களை ஏற்படுத்தினார்கள்? பரம தர்மவானாகிய அவனிடத்தில் அசுரர்களுக்கு ஏன் பகை வந்தது? பகைவர்கள் கூட்டத்தைச் சேர்ந்தவனாயிருந்தாலும், உத்தம குணங்களைக் கொண்ட இப்படிப்பட்ட நல்லவனை தாக்க வேண்டும் என்ற எண்ணம் எவருக்குமே ஏற்பட நியாயமில்லையே? அதுவும் பிரகலாதன் அசுர குலத்தில் தோன்றியவன்தானே? மாற்றான் அல்லவே!  அப்படியிருக்க, அவனைக் கொல்ல முயற்சிகள் ஏன்?  இந்த சந்தேகங்களைத் தாங்கள் தெளிவாக்க வேண்டும். அதன்  மூலமாக பிரகலாதனின் முழு சரித்திரத்தையும் தாங்கள் சொல்ல வேண்டும்.’’

 பராசரர் சொன்னார் , ‘மைத்ரேயரே! நன்கு கேட்டீர்கள். உம்முடைய கேள்விகளுக்குப் பதிலாக பக்தன் பிரகலாதனின் புனித சரித்திரத்தைச் சொல்கிறேன். திதியின் மகன் ஹிரண்யகசபு, கடுந்தவங்கள் புரிந்து பிரம்மதேவனிடம் பல வரங்களைப் பெற்று, அதனால் திமிர்  பிடித்து மூவுலகங்களையும் தனது ஆட்சிக்குள் கொண்டு வந்தான். அஷ்ட திக் பாலகர்களின் பதவிகளை பறித்துக் கொண்டு தானே இந்திரன், சூரியன், வாயு, வருணன், சோமன், குபேரன், யமன் ஆகியோரின் அதிகாரங்களைக் கைப்பற்றினான். யாகங்களில் தேவர்களுக்கு அளிக்கப்பட்ட அவர் பாகங்களை அவனே எடுத்துக் கொண்டான். தேவலோகத்திலிருந்து விரட்டியடிக்கப்பட்ட தேவர்கள் பூலோகத்தில் மனிதர்களாக உருவம் பூண்டு திரிந்தார்கள். மூன்று உலகங்களையும் கைப்பற்றிய இரணியன், கந்தர்வர்கள் புகழ்பாட, எல்லா போகங்களையும் அனுபவித்து வந்தான்.

 மதுவுண்டு களித்திருந்த இரணியனுக்கு சித்தர்கள், கந்தர்வர்கள், நாகர்கள் எல்லோரும் வேலை செய்தார்கள். வாத்தியங்களை வாசித்து  சித்த கணங்கள் அவனை மகிழ்வித்தார்கள்.  மிகச் சிறந்த அரண்மனையில் அமர்ந்து, மதுக்கோப்பையில் அவன் மதுவருந்த, அப்ஸ்ரஸ் அவன் முன்னே நடனமாடினார்கள்.

 கல்விக்காக குருகுலம் சென்று திரும்பிய பிரகலாதன், இரணியன் முன்னிலையில் பாடங்களைச் சொல்வது வழக்கம்.  ஒரு சமயம் பிரகலாதன் தன் குருவுடம் தந்தையிடம்  வந்து பணிவுடன் வணங்கி நின்றான். அப்பொழுது இரணியன் தன் மகனை அவன் அதுவரையில் கற்றதை சொல்லும்படி கேட்டான்.

 பிரகலாதன் உடனே ‘தந்தையே!  மத்யம், அந்தம், எதுவும் இல்லாதவனும், பிறப்பற்றவனும், வளர்ச்சியோ தேய்மானமோ இல்லாதவனும்,  சத்தியத்திலிருந்து தவறாதவனுமான அந்த நாராயணனை முதலில் வணங்குகிறேன்.

 இதனைக் கேட்டதும் இரணியனின் கண்கள் சிவந்தன. உதடுகள் துடிதுடித்தன.  கோபத்துடன் பிரகலாதனின் ஆசிரியரைப் பார்த்துக் கேட்டான். ‘அடே! கெட்ட புத்தி படைத்த பிராமணப் பதரே! என் கட்டளையை மீறி என் எதிரியின் புகழ்பாட என் மகனுக்கு பாடம் சொல்லிக் கொடுத்தது இதுதானா?’

 ஆசிரியர் சொன்னார், ‘மகாபிரபு! நான் சொல்லிக் கொடுத்ததை இவன் சொல்லவில்லை. என்னை நம்புங்கள்’ என்றார்.

 இரணியன் பிரகலாதனிடம் ‘இதை உன் ஆசிரியர் சொல்லிக் கொடுக்கவில்லை என்றால் இதனை உனக்கு யார் சொல்லிக் கொடுத்தது?’ என்று கோபத்துடன் கேட்டான்.

 பிரகலாதன் அமைதியாக, ‘எல்லோர் இதயத்திலும் நல்லாசிரியனாக இருப்பவன் அந்த நாராயணன்தானே! அவன் அப்படியிருக்கும்போது வேறு யாருடைய உபதேசம் தேவை?’

 இரணியன் கேட்டான். ‘அட முட்டாளே! உலகங்களுக்கெல்லாம் கடவுளாக இருக்கும் என் முன்னிலையில் மீண்டும் மீண்டும் நீ திமிருடன் பேசுகிறாய். அந்த நாராயணன் எவன்?’

 பிரகலாதன் சொன்னான், ‘அந்த நாராயணனை சுலபத்தில் பார்த்துவிட முடியாது. அவனுடைய பரமபதத்தை யோகிகள்தான் காணலாம். எல்லாமும் அவனிடத்திலிருந்து தோன்றியது. எல்லாமாகவும் இருப்பவன் அவனே.

 இரணியன் சொன்னான், ‘தந்தையே! கோபம் வேண்டாம். அவன் எனக்கு மாத்திரம் பிரபு இல்லை. அவன் உலகமனைத்திற்கும், ஏன் உங்களுக்கு அந்த நாராயணன்தான் கர்த்தா. காப்பாளன்’

 இரணியனுக்கு ஆத்திரம் மூண்டது, ‘எவனோ ஒரு பாவி இவன் மனதில் புகுந்து, மனதைக் கலைத்து கெட்ட விஷயங்களைப் பேச வைத்திருக்கிறான்.’

 ‘தந்தையே! அவன் எவனுமல்ல. என் விஷ்ணு பகவானே! அவன் என் மனத்தை மட்டும் ஆட்கொள்ளவில்லை. உலகத்தார் அனைவரின் மனத்திலும், உங்கள் மனம் உட்பட, அவனே புகுந்து கொண்டு எல்லோரையும் இயங்க வைக்கிறான்.’

 இரணியனுக்கு ஆத்திரம் அதிகமாயிற்று. உடனே ‘இந்த பாவியை இங்கிருந்து உடனே அப்புறப்படுத்துங்கள். குருவின் வீட்டிற்கு அழைத்துச் சென்று இவனை நன்றாக தண்டியுங்கள். யாரோ ஒருவன் இவன் புத்தியைக் கெடுத்துவிட்டான்’ என்றான்.

 பிறகு பிரகலாதனை ஆசிரியரின் வீட்டிற்கு இழுத்துச் சென்றார்கள். இதற்கு பிறகும் பிரகலாதனுக்கு குருபக்தியில் எந்த குறைவும் இல்லை.Trending Now: