ஒரு பேனாவின் பயணம் – 241 – சுதாங்கன்

20-01-2020 11:15 PM

‘பாவை பாடிய பாவை’

 பள்­ளிப்­ப­ரு­வத்­தில் இசைத்­தட்­டுக்­கள் மூல­மாக எம்.எல்.வசந்­த­கு­மா­ரி­யின் ‘திருப்­பா­வை’யை கேட்ட போது அந்த பாடல் மட்­டுமே மன­தில் பதிந்­தது. ஆனால், கொஞ்­சம் விவ­ரம் தெரிந்து கல்­லூரி முடித்து, பத்­தி­ரி­கைக்கு போக­லாம் என்று ஆசைப்­பட்­டுக்­கொண்­டி­ருந்த கால­கட்­டத்­தில் ‘திருப்­பாவை’ இயற்­றிய ஆண்­டாள் என்­கிற அந்த  பாவையை படிக்­கும்­போ­து­தான் எனக்­குள் எத்­தனை பிர­மிப்பு.

 சென்ற மாதம் முழு­வ­தும்   வைணவ பக்­தர்­கள் ‘திருப்­பா­வை’­­யி­லும், சைவ பக்­தர்­கள் ‘திரு­வெம்­பா­வை’­­யி­லும் மூழ்கி இருந்­தி­ருப்­பார்­கள். ஒரு கால கட்­டத்­தில் தமிழ்­நாட்­டில் ‘திருப்­பாவை’ ‘திரு­வெம்­பாவை’ மாநா­டு­கள் நடந்­த­துண்டு. சில மாநா­டு­க­ளை­யொட்டி ‘திருப்­பாவை’ பிர­பந்­தங்­க­ளைக் குறித்த சொற்­பொ­ழி­வு­க­ளும் நடை­பெற்­றன.  அந்த கால­கட்­டத்­தில்  பாவை பாடல்­கள், அதா­வது ஆண்­டா­ளின் திருப்­பாவை , நாச்­சி­யார் திரு­மொழி பாடு­ப­வர்­க­ளுக்கு சன்­மா­ன­மும் வழங்­கப்­பட்­டது.

‘திருப்­பாவை’, ‘திரு­வெம்­பாவை’  இரண்­டை­யும் ‘பாவைப் பிர­பந்­தங்­கள்’ என்­பார்­கள். குழந்­தை­கள் நாவில் அருள் சுரக்­கும் பாவை  நட­மி­ட­வேண்­டும் என்­பதை காஞ்சி காம­கோடி பீடத்து பர­மாச்­சா­ரி­யர் மிக­வும் விரும்­பி­ய­துண்டு. அந்த கால­கட்­டத்­தில் பாவை விழா­வைப் பக்தி விழா­வா­க­வும், கலை விழா­வா­க­வும் கொண்­டா­டச் செய்­தது. சமய அடிப்­ப­டைக் கருத்­துக்­களை வற்­பு­றுத்தி ஒற்­று­மையை வளர்த்­துப் பிணக்­கு­க­ளைத் தீர்த்து கொள்­வ­தற்கு ‘திருப்­பாவை’ – ‘திரு­வெம்­பாவை’ விழாக்­கள் பெரிது பயன்­ப­டும் என்­பது பர­மாச்­சா­ரி­ய­ரின் எண்­ணம்.

 ‘திருப்­பா­வை­யும்’- ‘திரு­வெம்­பா­வை’­­யும் தமி­ழர்­க­ளுக்கு கிடைத்­தி­ருக்­கும் அரு­மை­யான பொக்­கி­ஷங்­கள். தமிழ் இலக்­கி­யப் பூங்­கா­விலே தெய்­வீக மணம் கம­ழும்  இன்­னிசை பூங்­கொத்­துக்­கள். ஒரு காலத்­தில் இவற்­றின் மணம் வெளி­நா­டு­க­ளி­லும் கமழ்ந்­தது.

 ‘பாவை நோன்பு’ ஒரு பழ­மை­யான நோன்பு. ‘திருப்­பா­வை’­­யும், ‘திரு­வெம்­பா­வை’­­யும் தோன்­று­வ­தற்கு முன்பே, தமி­ழர்­கள் நெடுங்­கா­ல­மாக வழி­வ­ழி­யாக கடைப்­பி­டித்து வந்த நோன்பு ‘தொல்­பாவை’ என்று நாத­மு­னி­க­ளுக்­குப் பின் தோன்­றிய உய்­யக்­கொண்­டார் என்ற ஆசா­ரி­யர் குறிப்­பி­டு­கி­றார். ‘மேலை­யார் செய்­வ­ன­கள்’ என்று கூறி ஆண்­டா­லும் இந்த நோன்­பைக் கடைக்­பி­டித்த நமது முன்­னோரை பெரு­மை­யா­கக் குறிப்­பி­டு­கி­றார். ‘பாவை நோன்பு’ நோற்­கும் இடத்தை பாவைக் களம் என்­கி­றாள்.

 பாவை என்ற சொல்­லுக்கு பல பொருள் உண்டு. பாவையை  ‘பதுமை’ என்­கி­றோம். ` பாவை’ சித்­தி­ரத்­தை­யும் குறிக்­கும். ‘சித்­தி­ரப் பதுமை’ போன்ற பெண்­ணும் பது­மை­தான். ` பாவை’ நோன்பு என்­றும் பொருள்­ப­டும். முற்­கா­லத்­திலே நாட்­டில் பஞ்­சம் வந்­தால் கன்­னிப்­பெண்­கள் ஆற்­றங்­க­ரை­யில் அல்­லது குளக்­க­ரை­யில் மண­லால் பதுமை அமைத்து நோன்பு நோற்­றுத் தொழு­வ­துண்டு. பனி­நீ­ரா­டித் தொழு­வது பாவை நோன்­பின் முக்­கிய அம்­சம்.

‘மழையே ! மழையே! வாவா’

 என்று குழந்­தை­கள் பாடு­வார்­கள்.  இந்த முறை­யில் குழந்தை உள்­ளத்­தோடு நோன்பு நோற்­கும் கன்­னிப்­பெண்­க­ளும் மழையை அழைப்­பார்­கள். கூவி அழைப்­பார்­கள் என்­றும், பாடி அழைப்­பார்­கள் என்­றும், ‘மழையே ! நீ பெய்­து­தான் ஆக­வே­ணும்’ என நிய­மிப்­பார்­கள் என்­றும் கரு­த­லாம்.

 மண­லால் பிடித்த பாவையை ஒரு பெண் தெய்­வ­மாக வழி­பட்­டார்­கள். தேவி­யாக வழி­பட்­டார்­கள். தேவி­யின் அரு­ளால் மழை பெய்து நாடு செழிக்­கும் என்­பது நம்­பிக்கை. நல்ல கண­வரை அடைய வேண்­டு­மென்று கன்­னிப்­பெண்­கள் இந்த நோன்பை நோற்­பார்­கள். இந்த  பழந்­த­மி­ழர் வழக்­கம் இன்­றும் கேர­ளம் முத­லிய பிர­தே­சங்­க­ளில் உரு­மா­றிச் சிதைந்து காணப்­ப­டு­கி­றது. ஏன், சயாம் என்­கிற நாட்­டில் – தமி­ழ­கத்­தி­லி­ருந்து இரண்­டா­யி­ரம் மைல்­க­ளுக்கு அப்­பால் உள்ள அந்த வெளி­நாட்­டி­லும் திருப்­பாவை, திரு­வெம்­பா­வைப் பாடல்­கள் வழங்கி வந்த சின்­னத்தை அந்த நாட்­ட­வர் கொண்­டாடி வரு­கி­றார்­கள். அதை ஒரு காலத்­தில் அவர்­கள் தேசிய விழா­வா­கக் கொண்­டா­டி­னார்­கள்.

  பாவை­யர் பாவை பிடித்து வைத்­துக் கொண்­டா­டிய பாவை நோன்பை ஒட்டி எழுந்­த­து­தான் ஆண்­டா­ளின் திருப்­பாவை பிர­பந்­தம். ‘பாவை பாடிய பாவை’ என்று ஆண்­டாளை குறிப்­பி­ட­லாம். அடை­தல் என்ற இரட்­டைக் கருத்­தைக் காண்­கி­றோம். கண்­ண­னையே தலை­வ­னாக  அடைய வி

ரும்­பு­கி­றார்­கள் கோபி­யர்­கள்.  அத­னால் ` நல்ல கண­வனை நாடு­தல்’ என்று நடை­முறை கருத்­துக்­களை வைத்­துக் கொண்டு ஜீவாத்­மாக்­கள் பர­மாத்­மாவை  நாடும் மகத்­தான் சம­யப் பேருண்­மையை உணர்த்­து­கி­றாள் ‘திருப்­பாவை’ செல்வி ஆண்­டாள்.

 மார்­கழி மாதத்­து­டன் தட்­சி­ணா­ய­ணம் முடிந்து, தை மாதம் பிறந்­த­வு­டன் உத்­த­ரா­ய­ணம் தொடங்­கு­கி­றது.  அத­னால் பழமை முடிந்து, புதுமை தோன்­று­வ­தற்கு மார்­கழி முடி­வும் தை பொங்­க­வும் அறி­குறி என­லாம். ஆனால்,  மார்­க­ழியை முதன்மை மாதம் என்று கரு­த­லாம்.  ‘எல்­லா­வற்­றி­லும் நான் மார்­கழி மாதம்’ என்­கி­றான் பக­வத் கீதை­யில் கண்­ணன். ‘சிறந்த பொருள்­க­ளில்  எல்­லாப் பொரு­ளா­கிய நானே சிறந்த பொருள் !’ என்று சொல்லி வரும்­போது, ‘மாதங்­க­ளில் தன்னை மார்­கழி’ என்று கண்­ணன் குறிப்­பி­டு­வது முக்­கி­ய­மா­னது.

 பொழுது விடி­வ­தற்கு முந்­திய அதி­கா­லை­யைப் பிரம்ம முகூர்த்­தம் என்ற தூய அமைதி வாய்ந்த வேளை­யா­கப் போற்­று­கி­றோம்.  அப்­ப­டியே புதிய ஆண்­டில் செய்­வ­தற்­கு­ரிய நல்ல காரி­யங்­களை பெருங்­கா­ரி­யங்­களை- மன­மா­ரச் சிந்­திப்­ப­தற்கு ஏற்ற தூய மாத­மாக மார்­க­ழியை நம் முன்­னோர் கரு­தி­யி­ருக்­க­வும் கூடும். இப்­போது கரு­து­வது போல மார்­க­ழியை ‘சூனிய மாதம்’ என்று எப்­போ­தும் கரு­த­வே­யில்லை. இது எப்­படி  இருந்த போதி­லும், ‘மார்­கழி நோன்பு’ என்ற மார்­க­ழித் திரு­நாள் இந்த மாதத்­திற்­கு­ரிய சிறப்­புக்­க­ளில் ஒன்­றாக கரு­தப்­பட்­டது. பாவை நோன்­பு­தான் மார்­கழி நோன்பு. இந்த நோன்­பைப் பாடும் ஆண்­டா­ளின் பாடல்­க­ளுக்­குத்­தான் ‘திருப்­பாவை’ என்று பெயர்.  நடை­முறை நோன்பு ஒன்றை ஆதா­ர­மா­கக் கொண்டு இப்­பி­ர­பந்­தத்தை ஆண்­டாள் சமய பேருண்­மை­களை வெளி­யி­டும் பிர­பந்­த­மாக இயற்­றி­யி­ருக்­கி­றாள். ஆண்­டா­ளு­டைய பக்தி அனு­ப­வங்­களை செய்து வைத்­தி­ருக்­கும் தங்­கப்­பாத்­தி­ரம் – அமிர்த கல­சம் – இந்த பிர­பந்­தம். கோதைத் தமிழ் என்று சிறப்­பாக பேசப்­ப­டு­கி­றது.

 பக­வா­னுக்கு ஆளாகி உறவு பூண்டு, ஒவ்­வொ­ரு­வ­ரும் தமக்கு இசைந்த தொண்டு செய்­யு­மாறு திரு­வ­ருள் புரி­ய­வேண்­டு­மென்று  இறை­வ­னி­டம் கைங்­க­ரிய பிரார்த்­தனை செய்து கொள்­வது ‘திருப்­பா­வை’­­யில் தேர்ந்த உட்­பொ­ருள். இது வைணவ சமய சார­மான தனிப்­பெ­ருங்­கொள்கை. ராமா­னுஜ தரி­ச­ன­மா­கிய வைஷ்­ண­வத்தை உரு­வாக்­கிய மகத்­தான சக்­தி­க­ளில் ஒன்று ‘திருப்­பாவை’ என்று யூகிக்­க­லாம். ராமா­னு­ஜர் திரு­பா­வை­யில் விசே­ஷ­மாக ஈடு­பட்டு திருப்­பாவை ஜீயர் என்­றும் பெயர் பெற்­றார்.

 ஆண்­டாள் கி.பி.  731ல் ‘திருப்­பா­வை’யை இயற்­றி­னார் என்­பது ஆராய்ச்­சி­யா­ளர் கருத்து. ஆண்­டா­ளின் தந்தை பெரி­யாழ்­வார். இந்த இரண்டு பக்­த­ம­ணி­க­ளும் வாழ்ந்த காலம் கி.பி. எட்­டாம் நூற்­றாண்டு என்­பது நிச்­ச­யம். தன் காலத்­திற்கு முற்­பட்ட காலத்­திலே தமிழ்ப் பெண்­கள் நல்ல நாய­கனை அடை­ய­வும் நாடு செழிக்­க­வும் நோற்ற நோன்பு ஒரு  அழ­கிய வழக்­கம் என்று தோன்­றி­யது ஆண்­டா­ளுக்கு. ஆயர்­கு­லச் சிறு­மி­யர் நோன்பு நோற்­றுக் கண்­ணனை அடைந்த கதை­யை­யும் கேள்­விப்­பட்­டி­ருந்­தாள். தானும் அந்த கோபி­ய­ருள் ஒருத்­தி­யாக இருந்­தால் அந்த முறை­யில் தானும்  கண்­ணனை அடைந்­தி­ருக்­க­லாமே என்று நினைத்­தாள். ஆனால், அந்த காலம் எங்கே? இவள் எங்கே?

 ஒரு நாட்­டி­லி­ருந்து மற்­றொரு நாட்­டுக்கு எவ்­வ­ளவு தூர­தே­ச­மா­யி­னும் ரயில் மூல­மா­கவோ, விமா­னம் மூல­மா­கவோ இன்று போய்ச் சேர்ந்­து­வி­டு­கி­றோம். ஆனால், இந்த காலத்­தி­லி­ருந்து அந்த காலத்­திற்­குப் போய் சேர்­வ­தற்கு எந்த வகை கால இயந்­தி­ரத்­தை­யும் விஞ்­ஞா­னம் கண்­டு­பி­டிக்­க­வில்லை. ஆண்­டா­ளுக்கு மனோ­பா­வம் ( பாவனை) என்­கிற ஞான விமா­னந்­தான் உதவி செய்­தது.

கவி­ஞர்­கள் எல்­லாம், உண்மை கவி­ஞர்­க­ளெல்­லாம், ‘பாவனை’ என்ற ஞான விமா­னத்­தைத் துணை­யா­கக் கொண்­டு­தான் எந்த காலத்­தி­லும் சஞ்­ச­ரிக்­கி­றார்­கள். எந்த லோகத்­தி­லும் சஞ்­ச­ரிக்­கி­றார்­கள். மக்­கள் உள்­ளங்­க­ளி­லும் சஞ்­ச­ரிக்­கி­றார்­கள். கூடு­விட்டு கூடு பாய்ந்து அரக்­கர் உள்­ளங்­க­ளி­லும் அம­ரர் உள்­ளங்­க­ளி­லும் புகுந்து பேசு­கி­றார்­கள். ஆண்­டா­ளும் ஒரு நல்ல கவி; உண்மை கவி; உத்­த­மக் கவி, கவி­ஞ­ரின் பாவனா சக்தி இந்த அம்­மை­யா­ரின் – இந்த பக்தி கவி­யின் – மனோ­ரத்­தைத் நிறை­வே­றச் செய்­தது. கோபி­யரை  வழி­காட்­டி­க­ளா­கக் கொண்டு கண்­ணனை அடைய விரும்­பிய ஆண்­டாள் காலத்தை, அக்­கா­லத்து ஆயர்­பா­டி­யில் குடி­பு­குந்து கோபி­ய­ரோடு கோபி­யாய்க் கலந்து கொள்­வ­தற்கு, இவ­ளு­டைய பக்தி நிறைந்த பாவ­னை­யில் முதிர்ச்சி அரும்­பெ­ருந் துணை­யா­யிற்று.

 ஆண்­டாள் பாவை நோன்பு நோற்­றது பாவ­னை­யால்­தான்; செய­லைக் கொண்டு அல்ல; பாசு­ரத்­தைக் கொண்­டு­தான் கோபி­யர்­கள்  எப்­படி நோற்­றார்­கள் என்­பதை நாம் அறி­யோம். பண்­டைத் தமி­ழர்­க­ளின் பாவை நோன்­புக் காட்­சி­க­ளை­யும் தெளி­வாக நாம்  மனக்­கண் முன் கண்­டு­கொள்ள முடி­யும் என்று தோன்­ற­வில்லை. ஆண்­டாள் கோபி­ய­ருள் கோபி­யாகி மான­சீ­க­மாக நோற்ற நோன்­புக் காட்­சி­களோ கண்­முன் காண்­ப­து­போல் நம் அகக்­கண் முன்னே திரைப்­ப­டக் காட்­சி­க­ளாக ஒன்­றன்­பின் ஒன்­றாய் வரு­வ­தைக் காண­லாம்.

‘அந்தோ! அந்த நாளில் நான் பிறந்­தே­னில்­லையே! அந்த ஆயச் சிறு­மி­ய­ருள் ஒருத்­தி­யாக நோன்பு  நோற்­றேன் இல்­லையே! எவ்­வ­ளவு தூரத்­தில் இருக்­கி­றது கண்­ணன் பிறந்த, கோபி­யர் வாழ்ந்த, கோகு­லம்! காலத்­தாலோ நெடுந்­தொ­லை­வில் இருக்­கி­றது -  எட்டாத தொலை­வில்! அந்த ஆயப்­பா­டிக்கு எப்­ப­டித்­தான் செல்ல முடி­யும் – இப்­ப­டி­யெல்­லாம் யோசனை செய்­தாள். வருந்­தி­னாள். உளம் கசிந்­தாள், உரு­கி­னாள். கடை­சி­யாக, அந்த ஆயப்­பா­டிக்கே சென்­று­விட்­டாள் அதி­ச­ய­மாக! பறந்து சென்று விட்­டாள் பாவனா சக்­தி­யால்! அப்­ப­டிக் கண்டு தோற்று பேறு பெற்ற கதை­தான் ஆண்­டா­ளின் ‘பாவைப் பாட்டு’.

 அந்த அற்­பு­தம் இருந்த இடத்­தி­லேயே நிகழ்ந்­து­விட்­டது. திடீ­ரென்று,  ஆண்­டாள் வாழ்ந்த ஊர் பேர் எல்­லாம் மறைந்­து­விட்­டன. உற்­றார், பெற்­றார், தோழி­யர் எல்­லோ­ரும் மறைந்­து­விட்­ட­னர். ஸ்ரீவில்­லி­புத்­தூ­ருக்கே ஓடி­வந்­து­விட்­டது ஆயப்­பாடி! இவ­ளைத் தேடி வந்து விட்­டது! தோழி­ய­ரும் தானும் ஆயக்­கு­லப் பெண்­கள் ஆகி­விட்­டதை உணர்­கி­றாள். இப்­ப­டி­யும் நடக்­குமா?  பெரு­மாள் கோயில் – ஸ்ரீவில்­லி­புத்­தூர் வட­பத்­திர சாயி சன்­னிதி – இப்­போது எங்கே? அது­வும் மறைந்து போய்­விட்­டதா? அந்த இடத்­தில் இப்­போது காணப்­ப­டு­கி­றது ஒரு மாளிகை – நந்­த­கோ­பன் மாளி­கை­தான். மாளி­கைக்­குள்ளே கண்­ணன். பாவனை மந்­தி­ரம் பலித்­து­விட்­டது. மார்­க­ழித் திங்­க­ளில் மதி­நி­றைந்த நன்­னா­ளும் வாய்த்­து­விட்­டது. இப்­ப­டிப் பிறந்­தது ‘திருப்­பாவை’.  பாவனை – ஆயப்­பா­டி­யில் பாவை நோன்பு நோற்­கி­றாள் ஆண்­டாள். கண்­ண­னு­டைய கல்­யாண குணங்­கள் ஆகிய தூய நன்­னீ­ரில் ஆடி மூழ்­கிப் பேறு பெறு­வ­தற்கு, கோபி­யர் வாழ்ந்த காலம்­தான் அவ­சி­யமா? அந்­தக் களம்­தான் அவ­சி­யமா? பாவைக்­க­ளன் ஆகி­வி­ட­லாம். எந்த ஊரும், எந்த ஊர்ப் பகு­தி­யும், எந்­தக் கால­மும் கண்­ணனை அணு­கு­வ­தற்கு ஏற்ற காலம்­தான். கடுந்­த­வம் வேண்­டாம். யாகம் வேண்­டாம், யோகம் வேண்­டாம். அவற்­றுக்­கெல்­லாம் விரோதி ஆகிய மோகத்­தையே பக்­திக் காதல் ஆக்­கிக் கொண்டு பர­மனை அணு­கி­வி­ட­லாம். ஆசை விரோ­தி­யல்ல, கண்­ணனை அடை­ய­வே­ணும் என்ற ஆசை ஒன்றே போது­மா­னது. என்ன அழ­கான தத்­து­வம். என்ன வசீ­க­ர­மான உண்மை.

‘வாருங்­கள்! வாருங்­கள்!’ என்று பர­ப­ரப்­பாக ஒரு­வ­ரை­யொ­ரு­வர் அழைத்­துக் கொண்டு நீரா­டப் புறப்­ப­டு­வோர் கூட்­டம் ஒன்று கட்­பு­ல­னா­கி­றது. பக­வா­னு­டைய பெய­ரைப் பாடு­கி­றார்­கள். அரு­ளைப் பாடு­கி­றார்­கள். ஒரு­வ­ரை­யொ­ரு­வர் எழுப்­பு­கி­றார்­கள். ஒரு­வ­ரை­யொ­ரு­வர் பரி­க­சிக்­கி­றார்­கள். முகங்­கள் நீண்டு தொங்­க­வில்லை. புன்­னகை பூத்த  பரந்த வத­னங்­க­ளைக் காண்­கி­றோம். பாடு­கி­றார்­கள். ஆடு­கி­றார்­கள். பர­வ­ச­மா­கி­றார்­கள். ஒரு­வ­ரோ­டொ­ரு­வர் உறவு கொண்­டா­டு­கி­றார்­கள். கட­வு­ளு­ட­னும் உறவு கொண்­டாட ஓடு­கி­றார்­கள்.

 தாயின் குரல் கேட்­கி­றது. மகள் குரல் கேட்­கி­றது  ‘அம்­மாமி! அவனை எழுப்­ப­மாட்­டிரோ?’ என்று கெஞ்­சு­கி­றாள் ஒருத்தி. ‘கிளி மொழியே, எழுந்து வாரா­யோ’­­என்று கொஞ்­சு­கி­றது ஒரு குரல். ‘ஆடி வா மயிலே!’ என்று பாடு­கி­றது ஒரு குரல். ‘ஓடியா பேய்ப்­பெண்ணே! என்று கண்­டிப்­பாய் கட்­ட­ளை­யி­டு­கி­றது ஒரு குரல். உள்ளே இருந்து ஒரு குரல் பதில் சொல்ல, வெளி­யி­லி­ருந்து பல குரல்­கள் தாக்­கு­வ­தும் நம் காதில் விழு­கி­றது. சிறகு கட்­டிய அம்­பு­கள் போல பறக்­கின்­றன. வினா விடை­கள். தந்­தி­ரப் பேச்சு, மந்­தி­ரப் பாட்டு, வசீ­கர இசை, எல்­லா­வற்­றுக்­கும் மேலாக குழந்தை உள்­ளம், தூய அன்பு, கள்­ளங்­க­ப­ட­மற்ற நெஞ்சு!

 ஆண்­டாள் கட்டி நிறுத்­திய நோன்பு மாளி­கை­யில்  காணும் காட்­சி­க­ளில் சில இவை. சிறு மாளி­கை­தான். ஆனால் செல்­வம் நிறைந்த சிங்­கார மாளிகை. கண்­ண­னுக்­கா­கக் கட்­டிய காதல் மாளிகை. இங்கே ` கோபி­யர் இவர்­கள், ஆண்­டாள் அவள்!’ என்று பிரித்­துக் காண இய­லாது. சிங்­கா­ச­னத்­தி­லி­ருந்து யசோதை  இளஞ்­சிங்­கம் கோபி­ய­ருக்கு அரு­ளு­வ­து­போல் ஆண்­டா­ளுக்­கும் இரங்கி அரு­ளு­வதை மட்­டுமா காண்­கி­றோம். அந்த சிங்­கா­த­னத்­தில் ஆண்­டா­ளின் அன்­புச் சொற்­களை மாலை­யா­கப் பூண்டு ஒரு புது மகிழ்ச்­சி­யு­டன் கண்­ண­பி­ரான் வீற்­றி­ருப்­ப­ தை­யும் காண­லாம்.  விளை­யாட்­டும் வேடிக்­கை­யு­மாக எவ்­வ­ளவு மகத்­தான உண்­மை­களை வெளி­யி­டு­கி­றது ‘திருப்­பாவை’! உயர்ந்த பொருளை ஆண்­டாள் வெளி­யி­டும் முறையே அலாதி. கற்­றோ­ரும் மற்­றோ­ரும் ஒருங்கே வியந்து ஈடு­ப­டும் பாசு­ரங்­கள் இவை. சிறு­வர் விளை­யாட்­டின் மூல­மா­கவே தெய்வ அன்­பைப் பெற்­றுக்­கொள்ள முடி­யும் என்­பதை ஆச்­ச­ரி­ய­மாக உணர்த்­தி­னா­லும் பக்தி பிர­பந்­தம் அது.

 இந்த பிர­பந்­தம் பிறந்த கதை­தான் எவ்­வ­ளவு வசீ­க­ர­மா­னது. பிறந்த கதை மட்­டுமா?

(தொட­ரும்)Trending Now: