நிர்பயா வழக்கு குற்றவாளி சீராய்வு மனு : ஜனவரி 20ம் தேதி உச்சநீதிமன்றம் விசாரணை

18-01-2020 01:32 PM

புதுடில்லி,

நிர்பயா பாலியல் வன்கொடுமை வழக்கு குற்றவாளிகளில் ஒருவரான பவன் குமார் குப்தா உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்த சீராய்வு மனு மீது ஜனவரி 20ம் தேதி விசாரணை நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த 2012ம் ஆண்டு நிர்பயா என்ற இளம் பெண் டில்லியில் ஓடும் பேருந்தில் கூட்டு பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டார். இதில் படுகாயமடைந்த அந்த பெண் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

இந்த சம்பவத்தில் கைதான 6 பேரில் ஒருவர் சிறுவர் என்பதால் சிறார் சிறைச்சாலையில் அடைக்கப்பட்டு 3 ஆண்டுகள் தண்டனைக்கு பின் விடுதலை பெற்றார். மற்றோருவரான ராம் சிங் திகார் சிறையில் தற்கொலை செய்து கொண்டார்.

மீதியுள்ள 4 பேரும் நிர்பயா வழக்கில் குற்றவாளிகளாக அறிவிக்கப்பட்டு மரண தண்டனை விதிக்கப்பட்டது. இந்த தண்டனை கடந்த 2017ம் ஆண்டு உச்சநீதிமன்றத்தால் உறுதி செய்யப்பட்டது.

நிர்பயா வழக்கு குற்றவாளிகள் தாக்கல் செய்த கருணை மனுக்கள்  நிராகரிக்கப்பட்ட நிலையில் பிப்ரவரி 1ம் தேதி காலை 6 மணிக்கு நிர்பயா வழக்கு குற்றவாளிகள் 4 பேரையும் தூக்கிலிடும்படி டில்லி நீதிமன்றம் வெள்ளிக்கிழமை உத்தரவிட்டது.

முன்பு ஜனவரி 22ம் தேதி குற்றவாளிகளை தூக்கிலிட டில்லி நீதிமன்றம் உத்தரவிட்ட நிலையில் குற்றவாளி முகேஷ் சிங் கருணை மனு தாக்கல் செய்ததால் தண்டனை தேதி ஒத்திவைக்கப்பட்டது.

இதற்கிடையில் 4 குற்றவாளிகளில் ஒருவரான பவன் குமார் குப்தா சம்பவம் நடந்த போது தனக்கு பதினெட்டு வயதாகவில்லை.அதனால் தனக்கு வழங்கப்பட்ட மரண தண்டனையை ரத்து செய்ய வேண்டும் என்றும் டில்லி உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார்.

அந்த மனுவை கடந்த ஆண்டு டிசம்பர் 19ம் தேதி டில்லி உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. அதைத் தொடர்ந்து டில்லி உயர்நீதிமன்ற உத்தரவை எதிர்த்து நேற்று உச்சநீதிமன்றத்தில் சீராய்வு மனு தாக்கல் செய்தார்.

அந்த மனுவை இன்று பரிசீலித்த உச்சநீதிமன்றம் வரும் ஜனவரி 20ம் தேதி பவன் குமார் குப்தாவின் சீராய்வு மனு விசாரிக்கப்படும் என தெரிவித்தது. நீதிபதிகள் ஆர். பானுமதி, அசோக் பூஷன் மற்றும் ஏ.எஸ். போபண்ணா ஆகியோர் அடங்கிய அமர்வு இந்த சீராய்வு மனுவை விசாரிக்கவுள்ளனர்.

இந்திரா ஜெய்சிங் அறிவுரை 

மூத்த வழக்கறிஞரும் மரண தண்டனைக்கு எதிராக பிரச்சாரம் செய்து வருபவருமான மனித உரிமை ஆர்வலர் இந்திரா ஜெய்சிங் நிர்பயா வழக்கு குற்றவாளிகளை மன்னிக்கும்படி நிர்பயாவின் தாயாருக்கு அறிவுறுத்தியுள்ளார். இதற்கு நிர்பயாவின் தாயார் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.

நிர்பயா வழக்கு குற்றவாளிகளை தூக்கிலிடும் தேதி ஜனவரி 22ம் தேதியில் இருந்து பிப்ரவரி 1ம் தேதிக்கு நேற்றுப் மாற்றப்பட்டதைத் தொடர்ந்து நிர்பயாவின் தாயார் ஆஷா தேவி மனமுடைந்தார். தனக்கு துரோகம் இழைக்கப்பட்டுவிட்டதாக வருத்தத்துடன் தெரிவித்தார்

நிர்பயாவின் தாயார் ஆஷா தேவி இவ்வாறு கூறிய சில மணி நேரத்தில் வழக்கறிஞர் இந்திரா ஜெய்சிங் குற்றவாளிகளை மன்னிக்கும்படி அவருக்கு அறிவுறுத்தி தன் டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டார்.

வேதனை எனக்கு நன்கு புரிகிறது. அதேசமயம் ஆஷா தேவி காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியின் வழியை பின்பற்ற வேண்டும் என வலியுறுத்துகிறேன். அவர் ராஜீவ் காந்தி கொலையில் தொடர்புடைய நளினியை மன்னித்ததால் அவருடைய மரண தண்டனை ஆயுள் தண்டனையாக குறைக்கப்பட்டது. நாங்கள் உங்களுடன் இருக்கிறோம் அதேசமயம் மரண தண்டனையை எதிர்க்கிறோம் என இந்திரா ஜெய்சிங் தன் டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

நிர்பயாவின் தாயார் எதிர்ப்பு

இந்திரா ஜெய்சிங்கின் அறிவுரைக்கு நிர்பயாவின் தாயார் ஆஷா தேவி கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். தனக்கு இப்படிப்பட்ட அறிவுரையை வழங்க இந்திரா ஜெய்சிங் யார்? அவருக்கு எங்கிருந்து இந்த தைரியம் வந்தது ? என கேள்வி எழுப்பியுள்ளார்.

நாடு முழுவதும் குற்றவாளிகளுக்கு மரண தண்டனை நிறைவேற்றப்பட வேண்டும் என எதிர்பார்த்துள்ளது. இந்திரா ஜெய்சிங் போன்றவர்களால் தான் கற்பழிப்பு சம்பவங்களால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நியாயம் கிடைப்பதில்லை.

உச்சநீதிமன்றத்தில் அவரை நான் பலமுறை பார்த்திருக்கிறேன். அப்போது என்னிடம் வந்து ஒருமுறை கூட அவர் பேசியதில்லை. ஆனால் இப்போது குற்றவாளிகளுக்கு ஆதரவாக அவர் பேசுகிறார். அவரை போன்றவர்கள் கற்பழிப்பவர்களுக்கு ஆதரவாக பேசுவதால் தான் நாட்டில் பாலியல் வன்கொடுமை சம்பவங்கள் தொடர்ந்து நடக்கிறது என ஆஷா தேவி சாடினார்.

இந்திரா ஜெய்சிங்கின் அறிவுரைக்கு நிர்பயாவின் தந்தையும் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.

ஒரு பெண்ணாக இருந்துகொண்டு இவ்வாறு கூறியதற்கு இந்திரா ஜெய்சிங் வெட்கப்பட வேண்டும். இப்படி கூறியதற்காக நிர்பயாவின் தாயாரிடம் அவர் மன்னிப்பு கேட்க வேண்டும். நாங்கள் இந்த வழக்கு தொடர்பாக 7 ஆண்டுகளாக போராடி வருகிறோம். நாங்கள் சாதாரண குடிமக்கள் அரசியல்வாதிகள் அல்ல. எங்களுக்கு சோனியா காந்தி போல் பெரிய மனது கிடையாது என நிர்பயாவின் தந்தை தெரிவித்துள்ளார்.Trending Now: