ஆட்சியை அமைக்க போவது யார்?

17-01-2020 01:29 PM

டில்லி சட்டசபை தேர்தல் தேதியை தேர்தல் கமிஷன் அறிவித்துள்ளது. 70 தொகுதிகளுக்கான வாக்குப்பதிவு அடுத்த மாதம் 8ம் தேதி நடைபெறுகிறது. வாக்குகள் 11ம் தேதி எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்படும். அடுத்த அரசு அமைப்பது யார் என 1 கோடியே 43 லட்சம் வாக்காளர்கள் வாக்கு பதிவு செய்து முடிவு செய்ய உள்ளனர். மற்ற மாநிலங்களை போல் டில்லி மாநில அரசுக்கு அதிகாரங்கள் இல்லை. சட்டம் ஒழுங்கு, போலீஸ் உட்பட பல்வேறு அதிகாரங்கள் மத்திய அரசு வசம் உள்ளது. அப்படி யிருப்பினும் ஒவ்வொரு கட்சியும் ஏன் டில்லி சட்டசபை தேர்தலுக்கும், ஆட்சி அமைப் பதற்கும் முக்கியத் துவம் கொடுக்கின்றன என்ற கேள்வி எழுவது நியாயமே.

இதற்கு முன் டில்லி சட்டசபை தேர்த லில் காங்கிரஸ், பாரதிய ஜனதா ஆகிய இரண்டு கட்சிகளே மோதிக் கொள்ளும். 1993ல் பா.ஜ,,முதன் முதலாக மாநில அரசை அமைத்தது. முதல மைச்சராக மதன்லால் குரான பதவியேற்றார். அதற்கு பிறகு 1998ல் நடைபெற்ற சட்டசபை தேர்தலில் காங்கிரஸ் வெற்றி பெற்று ஆட்சியை அமைத்தது. முதல்வராக ஷிலா தீட்சித் பதவியேற்றார். அதற்கு பின் நடைபெற்ற 2003, 2008 தேர்தல்களிலும் காங்கிரஸ் கட்சியே வெற்றி பெற்று ஆட்சியை அமைத்தது. முதலமைச்சராக ஷிலா தீட்சித் தொடர்ந்து மூன்று முறை இருந்தார்.

ஆனால் 2013ம் ஆண்டு டில்லி மாநில அரசியல் நிலவரத்தில் பெரும் மாற்றம் ஏற்பட்டது. அரவிந்த் கெஜ்ரிவால் தலைமை யிலான ஆம் ஆத்மி கட்சியும் களத்தில் குதித்தது. 2013ல் நடைபெற்ற தேர்தலில் வெற்றி பெற்று ஆம் ஆத்மி கட்சி ஆட்சி அமைத்

தது. முதலமைச்சராக அரவிந்த் கெஜ்ரிவால் பதிவியேற்றார். இந்த ஆட்சி 49 நாட்கள் மட்டுமே நீடித்த்து. அதன் பிறகு 2015ல் நடைபெற்ற சட்டசபை தேர்தலில் ஆம் ஆத்மி மொத்தமுள்ள 70 இடங்களில் 67 இடங்களில் வெற்றி பெற்றது. பாரதிய ஜனதா மூன்று தொகுதிகளில் மட்டுமே வெற்றி பெற்றது. காங்கிரஸ் ஒரு தொகுதியில் கூட வெற்றி பெறவில்லை. மீண்டும் அசுர பலத்துடன் ஆம் ஆத்மி கட்சி ஆட்சி அமைத்தது. முதல்வராக அரவிந்த் கெஜ்ரிவால் பதவியேற்றார்.    

வரும் பிப்ரவரி மாதம் நடைபெற உள்ள தேர்தலில் ஆம் ஆத்மி, பாரதிய ஜனதா, காங்கிரஸ் என மும்முனை போட்டி நடை

பெறுகிறது. ஆம் ஆத்மி மட்டுமே முதலமைச்சர் வேட்பாளராக அரவிந்த் கெஜ்ரிவாலை முன்னிறுத்தியுள்ளது. பாரதிய ஜனதா இதுவரை யாரையும் முதலமைச்சர் வேட்பாளராக அறிவிக்கவில்லை. டில்லி மாநில பா.ஜ,தலைவராக உள்ள மனோஜ் திவாரி எம்.பி., முதலமைச்சர் வேட்பாளராக யாரையும் முன்னிறுத்தாமல் தேர்தலை எதிர்கொள்வது என முடிவெடுத்துள்ளதாக விஷயமறிந்த வட்டாரங்கள் கூறுகின்றன. தேர்தல் கமிஷன் தேர்தலை அறிவிக்கும் முன்னரே, பிரதமர் நரேந்திர மோடி, மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா ஆகியோர் பல பொதுக்கூட்டங்களில் பேசி ஆதரவை திரட்டியுள்ளனர்.

காங்கிரஸ் கட்சியில் டில்லியில் செல்வாக்கு மிக்க தலைவராக இருந்த ஷிலா தீட்சித் மறைவுக்கு பிறகு, மக்களிடம் அறிமுகமான தலைமை இல்லாமல் தவிக்கிறது. சமீபத்தில் டில்லி மாநில காங்கிரஸ் கட்சி தலைவராக சுபாஸ் சோப்ராவை நியமித்துள்ளது

டில்லி சட்டபை தேர்தலில் எப்போதும் வீட்டு வசதி, குடிதண்ணீர் பிரச்னை, மருத்துவ வசதி, தட்டுபாடில்லாமல் மின்சாரம் ஆகியவையே முக்கியமாக இடம் பெறும். அத்துடன் டில்லியில் உரிய அனுமதி இன்றி கட்டப்பட்டுள்ள வீடுகளை வரன்முறைப்படுத்தல் முக்கிய இடம் பெறும். இந்த வீடுகள் அடங்கியுள்ள பகுதிகளை காலனி என்று கூறுகின்றனர். இவ்வாறு டில்லியில் 1,731 காலனிகள் உள்ளன. இவற்றில் 20 காலனிகள் மட்டுமே இதுவரை வரன்முறை படுத்தப்பட்டுள்ளது. இந்த காலனிகளில் 40 லட்சம்  பேர் வசிக்கின்றனர். இந்த வீடுகள் வீட்டு மனை பிரிவாக அறிவிக்கப்படாத பகுதிகளில் கட்டப்பட்டவை. இங்கு வசிப்பவர்கள் 2008 முதல் இந்த காலனிகளை வரன்முறைப்படுத்த வேண்டும் என்று வலியுறுத்தி வருகின்றனர். வரன்முறை படுத்தாமல் இருப்பதால் அரசின் மேம்பாட்டு திட்டங்கள் அமல்படுத்தப்படாமல் உள்ளது.

சென்ற வருடம் டிசம்பர் மாதம் மத்திய அரசு, தேசிய தலைநகர் டில்லி (அங்கீகரிக்கப்படாத காலனிகளில் வசிக்கும் மக்களின் சொத்துகளை அங்கீகரித்தல்) சட்டம்–2019 ஐ பார்லிமென்டில் நிறைவேற்றியுள்ளது. இதன் மூலம் காலனிகளில் அமைந்துள்ள வீட்டு உரிமையாளர்கள் இணையதளம் வாயிலாக வரன் முறைப்படுத்த, உரிய ஆவணங்களுடன்  விண்ணப்பிக்கலாம்.இது தங்களுக்கு சாதகமாக இருக்கும் என்று டில்லி பா.ஜ.,கருதுகிறது. இந்த காலனிகளில் சட்டத்தை பற்றி விளக்கும் கூட்டங்களையும் நடத்துகிறது. ஆனால் அரவிந்த் கெஜ்ரிவால், இது முழுக்க முழுக்க மோசடி என்கின்றார்.  

சென்ற லோக்சபா தேர்தலுக்கு முன்னர் அரவிந்த் கெஜ்ரிவால் தேசிய அரசியலில் ஈடுபட நினைத்தார். மத்திய அரசையும், பிரதமர் நரேந்திர மோடியையும் கடுமையாக விமர்சனம் செய்தார். லோக்சபா தேர்தலில் டில்லியில் உள்ள ஏழு லோக்சபா தொகுதிகளிலும் ஆம் ஆத்மி போட்டியிட்டு படு தோல்வி அடைந்தது. அதன் பிறகு அரவிந்த் கெஜ்ரிவாலின் தொனி மாறிவிட்டது. நரேந்திர மோடியை விமர்சிப்பதை கைவிட்டு. மென்மையான போக்கை கடைபிடிக்க ஆரம்பித்து விட்டார்.

கெஜ்ரிவால் மக்கள் நல திட்டங்களை நிறைவேற்றுவதிலும், மக்களை சந்திப்பதிலும் கவனம் செலுத்த தொடங்கிவிட்டார். ஒவ்வொரு பகுதிகளிலும் ‘மொகிலா க்ளினிக்’ என அழைக்கப்படும் ஆரம்ப சுகாதார நிலையங்களை அமைப்பது, பெண்களுக்கு இலவச பஸ் பயணம், பஸ் பயணத்தின் போது பெண்கள் பாதுகாப்பிற்கு ஆட்கள் நியமிப்பு, மின் கட்டணம் குறைப்பு, டில்லி அரசு பள்ளிக்கூடங்கள் சீரமைப்பு, ஆங்காங்கே சிசிடிவி கேமிரா பொருத்துதல் போன்ற திட்டங்களை முழு மூச்சில் அமல்படுத்துகின்றார். கெஜ்ரிவால் அரசு நிறைவேற்றியுள்ள நல திட்டங்கள் குறித்து மக்கள் மத்தியில் பிரசாரம் செய்யப்படுகிறது.

சமீபத்தில் இந்திய தர நிர்ணய அமைப்பு, டில்லியில் விநியோகிக்கப்படும் குடி தண்ணீர் நாட்டிலேயே மிக மோசமாக இருப்பதாக கூறியிருந்தது. இதன் பிறகு ஆம் ஆத்மி அரசு சுத்தமான குடிதண்ணீர் வழங்கத் தவறிவிட்டது என்ற குற்றச்சாட்டு எழுந்தது. மக்களின் பயத்தை போக்க முதல்வர் கெஜ்ரிவால், குழாயில் இருந்து டம்ளரில் தண்ணீர் பிடித்து குடித்து காண்பித்தார். அத்துடன் இது அரசியல் நோக்கத்தில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கை. சுகாதாரமான தண்ணீர் விநியோகிக்கவில்லை என பா.ஜ., குற்றம் சாட்டுவதற்கு எவ்வித முகாந்திரமும் இல்லை என்று ஆம் ஆத்மி பதிலளித்தது.

டில்லி சட்டசபையில் மொத்தம் 70 இடங்கள் உள்ளன. 36 இடங்களை கைப்பற்றும் கட்சி, அல்லது அணி ஆட்சி அமைக்கும். 1993ல் நடைபெற்ற முதல் சட்டசபை தேர்தலில் பாரதிய ஜனதா 49 இடங்களை கைப்பற்றி ஆட்சி அமைத்தது. அந்த தேர்தலில் காங்கிரஸ் 14 இடங்களில் மட்டுமே வெற்றி பெற்று இருந்தது. அதன் பிறகு 1998ல் நடைபெற்ற சட்டசபை தேர்தலில் காங்கிரஸ் 52 இடங்களை கைப்பற்றி ஆட்சி அமைத்தது. பா.ஜ.,17 இடங்களில் மட்டுமே வெற்றி பெற்றது. அதன் பிறகு 2003ஸ 2008ம் வருடங்களில் நடைபெற்ற தேர்தல்களிலும் காங்கிரஸ் கட்சியே வெற்றி பெற்று ஆட்சி அமைத்தது.

டில்லியை பொருத்த மட்டில் பா.ஜ., வர்த்தகர்கள், உயர் ஜாதி இந்துக்களின் ஆதரவை பெற்ற கட்சியாக கருதப்பட்டது. காங்கிரஸ் கட்சி புர்வான்சால் பிரதேச மக்கள் ( கிழக்கு உத்தரபிரதேசம், பீகாரில் இருந்து டில்லிக்கு குடிபெயர்ந்தவர்கள்) தலித், முஸ்லீம்களின் ஆதரவை பெற்ற கட்சியாக கருதப்பட்டது. இந்த நிலை 2013ல் ஆம் ஆத்மி அரசியலில் நுழைந்தவுடன் மாறிவிட்டது. புர்வான்சால் பிரதேச மக்களின் ஆதரவை காங்கிரசிடம் இருந்து ஆம் ஆத்மி பறித்துக் கொண்டு விட்டது. டில்லி சட்டசபை தேர்தலில் புர்வான்சால் பிரதேசத்தை சேர்ந்தவர்கள் 25 தொகுதிகளிலும், டில்லியல் வாழும் பஞ்சாபிகள் 25 முதல் 30 தொகுதிகள் வரை வெற்றி தோல்வியை நிர்ணயிக்கும் சக்தியாக இருப்பதாக கூறப்படுகிறது. புர்வான்சால் பிரதேசத்தை சேர்ந்தவர்கள் மத்தியில் 25 முதல் 30 சதவிகித வாக்குகளும், பஞ்சாபைச் சேர்ந்தவர்கள் மத்தியில் 35 சதவிகித வாக்குகளும், முஸ்லீம்கள் மத்தியில் 12 முதல் 13 சதவிகித வாக்குகள் இருப்பதாகவும் கருதப்படுகிறது.

வரும் தேர்தலில் புர்வான்சால் பிரதேசத்தை சேர்ந்தவர்கள் ஆம் ஆத்மிக்கு வாக்களிப்பார்களா அல்லது காங்கிரஸ், பா.ஜ.வுக்கு வாக்களிப்பார்களா?  பஞ்சாபிகள் பா.ஜ.,வுக்கு வாக்களிப்பார்களா அல்லது ஆம் ஆத்மி, காங்கிரசுக்கு மாறுவார்களா? என்பதை பொருத்தே வெற்றி தோல்வி அமையும்.

 முஸ்லீம்கள் சென்ற சட்டசபை தேர்தலின் போது பெருவாரியாக ஆம் ஆத்மி கட்சிக்கு வாக்களித்தனர். ஆனால் லோக்சபா தேர்தலின் போது காங்கிரசுக்கு திரும்பினர். தேசிய குடியுரிமை மசோதா, குடியுரிமை பதிவேடு போன்ற பிரச்னைகளில் கெஜ்ரிவால் வெளிப்படையாக ஆதரவு, அல்லது எதிர்ப்பு தெரிவிக்காமல் நழுவல் நிலையிலேயே உள்ளார். இந்த பிரச்னையை தேர்தல் பிரச்னையாக மாற்றினால் பாரதிய ஜனதா, ஆம் ஆத்மி அரசு அமல்படுத்தியுள்ள பல மக்கள் நல வாழ்வு திட்டங்களை பின்னுக்கு தள்ளிவிட்டு, தேசிய குடியுரிமை மசோதா, பதிவேடு பற்றி திசை திருப்பிவிடும். தேர்தலில் டில்லி மாநில பிரச்னை பின்னுக்கு தள்ளப்பட்டு, தேசிய பிரச்னையை முன்னெடுக்கும் தந்திரத்தை கையாளும். இந்த திட்டத்தை முறியடிக்கவே கெஜ்ரிவால் அமைதியாக உள்ளார் என்றும் கூறப்படுகிறது. ஆனால் காங்கிரஸ் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகிறது. எனவே முஸ்லீம்கள் பெருவாரியாக காங்கிரஸ் கட்சி வேட்பாளர்களுக்கு வாக்களிப்பார்களா அல்லது பா.ஜ,,வுக்கு பாடம் புகட்ட ஆம் ஆத்மிக்கு வாக்களிப்பார்களா என்பதிலும் வெற்றி தோல்வி அமைந்துள்ளது.

தேசிய குடியுரிமை மசோதா, தேசிய குடியுரிமை பதிவேடு, டில்லி ஜவஹர்லால் நேரு பல்கலைகழக மாணவர்கள், பேராசிரியர்கள் மீது குண்டர்களின் தாக்குதல் போன்ற பிரச்னைகளே டில்லி அரசியலை ஆக்கிரமித்துள்ளது. இந்த சுழ்நிலையில் எந்த கட்சியும் சட்டசபை தேர்தலில் தீவிரமாக இறங்கவில்லை. வரும் வாரங்களில் கட்சிகள் வேட்பாளர்களை அறிவித்து முழு மூச்சில் தேர்தல் பணியில் ஈடுபட வாய்ப்பு உள்ளது.

தலைநகர் டில்லி சட்டசபையில் ஆட்சி அமைக்கப்போவது யார்?. ஆம் ஆத்மியா, பாரதிய ஜனதாவா அல்லது காங்கிரஸ் கட்சியா என்பதுடன், ஒரு கட்சி ஆட்சியா அல்லது கூட்டணி ஆட்சியா என்பதும் அடுத்த மாதம் தெரிந்துவிடும்.

நன்றி: தி க்யூன்ட் இணையதளத்தில் அந்தோணி ரோஜாரியோ எழுதிய கட்டுரையின் உதவியுடன்.

Trending Now: