காஷ்மீரில் வளர்ந்து வரும் இளம் தலைவர்கள்!

17-01-2020 01:26 PM

ஜம்மு–காஷ்மீர் மாநிலத்திற்கு சிறப்பு அந்தஸ்து வழங்கும் அரசியல் சட்டப்பிரிவு 370, சென்ற வருடம் ஆகஸ்ட் 5ம் தேதி நீக்கப்பட்டது. ஜம்மு–காஷ்மீர், லடாக் ஆகியவை தனித்தனி யூனியன் பிரதேசங்களாக அறிவிக்கப்பட்டன. சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்டதில் இருந்து தேசிய மாநாட்டு கட்சித் தலைவர்களான பரூக் அப்துல்லா, உமர் அப்துல்லா, மக்கள் ஜனநாயக கட்சித் தலைவர் மெகபூபா முப்தி உட்பட பல்வேறு தலைவர்கள் வீட்டு காவலில் வைக்கப்பட்டுள்ளனர். இவர்கள் இல்லாத வெற்றிடத்தை, நிரப்பும் முயற்சியில் புதுமுகங்கள் ஈடுபட்டுள்ளனர்.

இல்திஜா முப்தி

மக்கள் ஜனநாயக கட்சித் தலைவர் மெகபூபா முப்தி காவலில் இருக்கும் சமயம், அவருக்கு பதிலாக அவரது மகள் இல்திஜா முப்தி (33) செயலாற்றி வருகின்றார். இல்திஜா முப்தி  டில்லி பல்கலைக்கழத்தில் அரசியல் விஞ்ஞானம் பட்டப்படிப்பு படித்தவர். அதன் பிறகு பிரிட்டனில் உள்ள வார்விக் பல்கலைக்கழத்தில் சர்வதேச உறவு பாடத்தில் மேற்பட்டப்படிப்பு படித்தவர். அவரிடம் அரசியலில் ஈடுபடுவது பற்றி கேட்டபோது, “நான் எப்போதும் மக்களை பாதிக்கும் பிரச்னைகள் பற்றி பேசி வருகின்றேன். அரசியலில் ஈடுபடுவது பற்றி முடிவு செய்யவில்லை” என்று பதிலளித்தார். அவரது தாயார் மெகபூபா முப்தி வீட்டு காவலில் வைக்கப்பட்டதில் இருந்து, அவரது டுவிட்டரில் கருத்துக்களை பதிவிட்டு வருகின்றார். மத்திய அரசின் கொள்கைகளை கடுமையாக விமர்சித்து வருகிறார். தேசிய மாநாட்டு கட்சித் தலைவர் ப்ரூக் அப்துல்லாவை, பொது பாதுகாப்பு சட்டப்படி கைது செய்து காவலில் வைத்துள்ளதற்கு கண்டனத்தை தெரிவித்துள்ளார். சமீபத்தில் தெற்கு காஷ்மீரில் அவரது தாத்தா முப்தி முகமது சையத் அடக்கம் செய்துள்ள இடத்திற்கு போக அனுமதிக்காமல், தன்னை போலீசார் தடுத்து நிறுத்தியதாகவும் குற்றம் சாட்டியுள்ளார்.

ஷேக் காலித் ஜஹாங்கீர்

ஜம்மு–காஷ்மீர் மாநில அரசியலில் ஈடுபட்டுள்ள மற்றொரு புதுமுகம் ஷேக் காலித் ஜஹாங்கீர். இவர் பத்திரிகையாளராக இருந்து, 2014ல் அரசியலில் குதித்தார். பாரதிய ஜனதாவில் இணைந்து, அதன் செய்தி தொடர் பாளராகவும் உள்ளார். சென்ற வருடம் நடைபெற்ற லோக்சபா தேர்தலில் ஸ்ரீநகர் தொகுதியில் பரூக் அப்துல்லாவை எதிர்த்து போட்டியிட்டு தோல்வி அடைந்தார். இவர் செய்தியாளர்களிடம் பேசும் போது, “காஷ்மீரில் பரம்பரை ஆட்சியை முடிவுக்கு கொண்டுவர இளைஞர்கள் தலைவர்களாக வரவேண்டும். 1947ல் இருந்து உயர்மட்ட குடும்பங்கள், அவர்களின் பிள்ளைகளை அரசியலில் ஈடுபடுத்துகின்றனர். இவர்கள் மத்திய அரசுக்கு நெருக்கமாகவும் இருக்கின்றனர். மத்திய அரசு காஷ்மீரிகளுக்கு அனுசரணையாக இல்லை என்று இளைஞர்களிடம் கூறுகின்றனர். இப்போது காஷ்மீர் இளைஞர்கள் நன்கு படித்துள்ளனர். மக்களுக்கு சேவை செய்ய அரசியலில் ஈடுபடுவதே சிறந்தது என்பதை புரிந்து கொண்டுள்ளனர் என்று கூறினார்.

மாநில தலைவர்கள் வீட்டு காவலில் வைக்கப்பட்டுள்ளது பற்றி கேட்டதற்கு, “அவர்களை ஊழலும், தானே பெரியவர் என்ற ஈகோவும் மக்களிடம் இருந்து பிரித்துவிட்டது” என்று பதிலளித்தார். அரசியல் சட்டம் 370 பிரிவு நீக்கப்பட்டது பற்றி கூறுகையில், “மத்திய அரசு, காஷ்மீரை இந்தியாவுடன் இணைக்க வேண்டும் என்று கருதியது. அதன் படி செய்துள்ளனர். இதனால் காஷ்மீரில் பரம்பரை ஆட்சி முடிவுக்கு வந்துள்ளது. நான் பா.ஜ,வில் சேர்ந்ததற்கு காரணம், அது பொய் பிரசாரம் செய்வதில்லை. ஒருமைப்பாட்டை நம்புவதாலேயே என்று கூறினார். மாநில அரசுக்கு சொந்தமான  ஜம்மு–காஷ்மீர் கட்டுமான நிறுவனத்தின் துணைத் தலைவராகவும் உள்ளார். இந்த பதவிக்கு மக்கள் ஜனநாயக கட்சி, பா.ஜ., கூட்டணி ஆட்சியில்   நியமிக்கப்பட்டார்.

ரிக்வான சனம்

தெற்கு காஷ்மீரில் உள்ள அனந்தநாக் மாவட்டத்தை சேர்ந்தவர் ரிக்வான சனம். அரசியலில் ஈடுபட்டுள்ள இளம் புதுமுகமான ரிக்வான சனம், சென்ற லோக்சபா தேர்தலில் அனந்த நாக் தொகுதியில் சுயேச்சையாக போட்டியிட்டு தோல்வி அடைந்தார். மறைந்த குடியரசுத் தலைவர் அப்துல்கலாமை வழிகாட்டியாக கருதும் ரிச்வான சனம், கல்லெறிதல், தாக்குதலில் ஈடுபடுவதை தவிர்த்து, இளைஞர்கள் ஆக்கரீதியான தலைவர்களாக உருவெடுக்க வேண்டும். நான் தேர்தலில் போட்டியிட்டதற்கு காரணம், இளைஞர்கள் எப்படி அரசியில் ஈடுபடுவது, அவர்களது உரிமைக்காக போராடுவது என்பதை உணர்த்தவே. நான் அரசியலில் ஈடுபட விரும்பும் இளைஞர்களுக்கு வழிகாட்ட தயாராக உள்ளேன். இளைஞர்கள், குறிப்பாக இளம் பெண்கள் அரசியலில் ஈடுபட்டு சமூகத்திற்கு சேவை செய்ய வேண்டும் என்று கூறியுள்ளார்.

பிசியோதெரபிஸ்ட்டான ரிக்வான சனம், காஷ்மீர், புதுடெல்லியை சேர்ந்த கட்சிகளில் சேர அழைப்பு வந்ததாகவும் கூறுகின்றார். “நான் எந்த கட்சியிலும் சேரவில்லை. ஏனெனில் அரசியலில் பெண்கள் வஞ்சிக்கப்படலாம் என்ற அச்சம் உள்ளது” என்று தெரிவித்துள்ளார்.

அஜாஜ் ஹுசைன்

தெற்கு காஷ் மீரில் உள்ள பாம் போரி பகுதியைச் சேர்ந்தவர் அஜாஜ் ஹுசைன். கீழ் மட்டத்தில் இருந்து படிப்படியாக முன்னேறி பா.ஜ,,இளைஞர் பிரிவு தேசிய துணைத் தலைவராக உயர்ந்துள்ளார். இவர் காஷ்மீரில் பெரிய தலைவராக வளரும் வாய்ப்பு உள்ளவர். “தன்னை கட்சி காஷ்மீரில் இளைஞர்களின் பிரதிநிதியாக அடையாளப்படுத்து கிறது என்று கூறும் அஜாஜ் ஹுசைன், பல்வேறு மாநிலங்களில் முஸ்லீம்கள் அதிகம் வாழும் பகுதிகளில் தேர்தல் பிரசாரம் செய்துள்ளார்.  

சென்னையில் உள்ள கல்லூரியில் பொறியியல் பிரிவில் படிக்கும் போதே, பா.ஜ,வின் மாணவர் பிரிவால் கவரப்பட்டவர். காஷ்மீருக்கு திரும்பிய பிறகு வர்த்தகத்தில் ஈடுபட்டுள்ளார். பா.ஜ,விலும் இணைந்தார்.காஷ்மீரில் இளைஞர்களை கட்சியில் சேர்க்கும் முக்கிய பணியில் ஈடுபட்டுள்ளார். 2016ல் பா.ஜ.,வின் இளைஞர் பிரிவில் தேசிய மட்டத்தில் சேர்க்கப்பட்டார். இவரே முதன் முதலாக தேசிய மட்டத்தில் இளைஞர்கள் பிரிவில் இணைக்கப்பட்ட காஷ்மீரைச் சேர்ந்தவர்.

டயுஷிப் ரெய்னா  

காஷ்மீரில் புதிய கருத்துக்களை கூறுபவராக டயுஷிப் ரெய்னா உருவெடுத் துள்ளார். வடக்கு காஷ்மீரைச் சேர்ந்த ரெய்னா, உள்ளாட்சித் தேர்த லில் போட்டியிட்டு தோல்வி அடைந்தார். ஐரோப்பிய தூதுக்

குழுவினர் வந்த போது, அவர்களை சந்தித்த சிலரில் ரெய்னா வும் ஒருவர்.

“காஷ்மீர் பண்டிட்டுகளின் வெளியேற்றம், காஷ்மீருக்கு நீங்காத கறை. என்னைப் போன்ற இளைஞர்கள் இரத்தம் சிந்துவதை மட்டுமே பார்த்துள்ளோம். என்னைப் போன்றவர்கள் பிரதான அரசியல் கட்சிகளிடமும், ஹூரியத் மாநாட்டு கட்சியிடமும் நம்பிக்கை வைத் திருந்தோம். ஆனால் அவர்கள் எங்களை ஏமாற்றிவிட்டனர். ஹூரியத் மாநாட்டு கட்சி சடலங்களை வைத்து அரசியல் நடத்துகிறது. நாங்கள் வன்முறைக்கு எதிரானவர்கள். விவேகம் உள்ள இளைஞர்கள் முன்வந்து அரசியலில் ஈடுபட வேண்டும். மக்களை வழிநடத்த நேர்மையானவர்கள் தேர்ந்தெடுக்கப்பட வேண்டும். தலைவர்கள் அவர்கள் சார்ந்துள்ள கட்சிகளிடம் இல்லாமல், மக்களிடம் இருந்து உத்தரவுகளை பெற வேண்டும். மக்கள் வதைபடுவதை பார்த்த பிறகு, நான் அரசியலில் ஈடுபட்டுள்ளேன். நமது அரசியல் வளர்ச்சி, அமைதி, பேச்சுவார்த்தை, பொறுப்பு ஆகியவற்றை மையமாக வைத்து இருக்க வேண்டும்” என்று டயுஷிப் ரெய்னா கூறினார்.

ஜுபைர் நிசாத் பட்

ஜம்மு–காஷ்மீரில் பஞ்சாயத்து தேர்தல்கள் முடிந்ததில் இருந்து மத்திய அரசு, கீழ்மட்டத்தில் அரசியலை பலப்படுத்த வேண்டும் என்று கருதுகிறது. இந்த தேர்தலில் தேர்ந்தெடுக்கப்பட்ட இளம் பஞ்சாயத்து உறுப்பினராக ஜுபைர் நிசார் பட் உள்ளார். இவர் ஸ்ரீநகரில் உள்ள ஹார்வானில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்டார். ஆகஸ்ட் 5ம் தேதிக்கு பிறகு, மத்திய அமைச்சர்களை சந்தித்த பஞ்சாயத்து உறுப்பினர்கள் குழுவிலும் இடம் பெற்றார்.

“நான் தேசிய மாநாட்டு கட்சியைச் சேர்ந்தவன். மக்கள் மாநாட்டு கட்சியைச் சேர்ந்தவர்கள், அவர்களது கட்சியில் சேரும்படி கூறுகின்றனர். இது வரை நான் எந்த கட்சியில் சேருவது என்று முடிவு எடுக்கவில்லை. நான் மாவட்ட வளர்ச்சி வாரிய தலைவர் பதவிக்கு போட்டியிட உள்ளேன்” என்று தெரிவித்தார். அரசியலில் ஈடுபடுவதற்கு முன் இவர் கால் சென்டரில் வேலை செய்துள்ளார்.

இவர் தனது செல்வாக்கை ஹார்வான், அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் பலப்படுத்தி யுள்ளார். “இளைஞர்கள் முன்வந்து அரசியில் ஈடுபட வேண்டும். நமக்கு பிரதான அரசியல் கட்சிகளும், பிரிவினைவாதிகளும் எத்தகைய அரசியலை முன்னெடுத்தார்கள் என்பது தெரியும்” என்று கூறுகின்றார் ஜுபைர் நிசார் பட்.

மௌவி தாரிக்  

பாரதிய ஜனதாவில் இருந்து விலகி, சஜ்ஜாட் லோன் தலைமையிலுள்ள மக்கள் மாநாட்டு கட்சியில் இணைந்துள்ள மௌவி தாரிக் தலைவராக உருவெடுக்க கூடியவார உள்ளார். இவர் ஜம்மு–காஷ்மீர் பஞ்சாயத்து உறுப்பினர்கள், பஞ்சாயத்து தலைவர்கள் சங்க தலைவராகவும் உள்ளார். இந்த சங்கம் பஞ்சாயத்து உறுப்பினர்கள் எதிர்கொள்ளும் பிரச்னைகளை அரசின் கவனத்திற்கு கொண்டு வருகிறது. “என்னால் தான் நகர்புற உள்ளாட்சி அமைப்பு தேர்தல்களில் 109 இடங்களில் பாரதிய ஜனதா வெற்றி பெற முடிந்தது” என்று இவர் கூறுகின்றார்.  

இன்ஜினியர் மெக்ராஜ்

சென்ற லோக்சபா தேர்தலில் ஸ்ரீநகர் லோக்சபா தொகுதியில் போட்டியிட்டு தோல்வி அடைந்த இன்ஜினியர் மெக்ராஜ் வளர்ந்து வரும் தலைவராக உள்ளார். “நான் எதிர்காலத்தில் என்ன செய்ய போகின்றேன் என்பதை பிப்ரவரியில் அறிவிப்பேன். சமூக சேவகரான எனது தந்தை குர்ஷித் அகமது மாலிக்கிற்கு 110 பஞ்சாயத்து உறுப்பினர்கள், தலைவர்களின் ஆதரவு உள்ளது. நல்ல மனிதர்களின் ஆதரவு கிடைத்தால், அவர் தனியாக கட்சியையே தொடங்கலாம்.

அதே நேரத்தில் கடந்த சில மாதங்களாக அரசியலில் வளர்ந்து வரும் சில இளைஞர்கள் மத்திய அமைச்சர்களை பல முறை சந்தித்துள்ளனர். இவர்கள் பா.ஜ.,வின் ‘பி’ அணி என்று அடையாளப் படுத்தப்படுகின்றனர். இவர்களில் ஒருவர் ஜம்மு–காஷ்மீருக்கு மீண்டும் மாநில அந்தஸ்து பெற போராடுவதாக கூறுகின்றார். சமீபத்தில் ஜம்மு–காஷ்மீர் மாநில பா.ஜ..வின் தலைமை செய்தி தொடர்பாளர் சுனில் சேத்தி, சிலர் (பரூக் அப்துல்லா, உமர் அப்துல்லா, மெக்பூபா முப்தி ஆகியோரை குறிப்பிட்டு) பிளாக் மெயில் செய்து தலைவர்களாக உயர்ந்துள்ளதாக கூறியுள்ளார்.  இவர்களுக்கு பதிலாக இளம் தலைவர்களை கொண்டுவர வேண்டும் என்று பா.ஜ.,கருதுகிறது. இந்த இளம் தலைவர்கள் மக்களை பற்றி கவலைப்படுபவர்களாக இருக்க வேண்டும் என்று இன்ஜினியர் மெக்ராஜ் தெரிவித்தார்.

அதே நேரத்தில் அரசியல் ஆய்வாளர் ரேகா சவுத்ரி, “பிரதான அரசியல் கட்சிகளுக்கு பதிலாக மாற்று ஏற்பாடு செய்யும் நோக்கம் இல்லை. பஞ்சாயத்துக்கள் தொடர்பான அரசியல் பற்றி மட்டுமே பேசப் படுகிறது. பஞ்சாயத்து தலைவர்கள் மக்களின் உண்மையான பிரதிநிதிகள் என்பதையும் கவனத்தில் கொள்ள வேண்டும்” என்று கூறினார்.

தனது பெயரை குறிப்பிட விரும்பாத மக்கள் ஜனநாயக கட்சித் தலைவர், “அரசியல் சட்டம் 370 பிரிவை நீக்கியதற்கு பிறகு பிரதான அரசியல் என்பதே இல்லாமல் போய்விட்டது. பிரதான அரசியல் கட்சி தலைவர்கள் காஷ்மீருக்கு பணியாற்ற எதுவும் இல்லை” என்று கூறினார். ஆனால் காங்கிரஸ் கட்சி, காஷ்மீருக்கு பிரதான அரசியல் இல்லாமல் போய்விட்டது என்று கருதவில்லை என்கிறது. ஜம்மு–காஷ்மீர் காங்கிரஸ் தலைவர் ஜி.ஏ.மீர் கூறுகையில், “பா.ஜ.,வின் பொய் பிரசாரத்தை மக்கள் புரிந்து கொண்டுள்ளனர். குடியுரிமை சட்ட திருத்தம் முக்கிய விஷயமாக மாறியுள்ளது. பா.ஜ,,வின் அரசியல் தந்திரம் தோல்வி அடைந்து வருகிறது. இதன் செல்வாக்கு சரிந்து வருகிறது. காஷ்மீரை பா.ஜ., சோதனை மையமாக நீண்ட நாட்களுக்கு நீடிக்க முடியாது. இவர்கள் மக்களை நீண்ட நாட்களுக்கு அடக்கி வைத்திருக்க முடியாது” என்று தெரிவித்தார்.

தேசிய மாநாட்டு கட்சியின் மூத்த தலைவர் முஸ்தபா கமால் கூறுகையில், “மத்திய அரசு காஷ்மீர் மக்களை ஏமாற்றிவிட்டது. தேசிய மாநாட்டு கட்சி எப்போதும் காஷ்மீர் மக்களின் உரிமைகளுக்காக போராடும். புதிய தலைவர்கள் உருவானால் தவறு ஏதும் இல்லை. ஆனால் அவர்கள் தங்களது முயற்சியில் நேர்மையாக இருக்க வேண்டும்” என்று தெரிவித்தார்.

ஜம்மு–காஷ்மீர் பஞ்சாயத்து சங்க தலைவர் சபீக் மீர் கூறுகையில், “மத்திய அரசும், ஜம்மு–காஷ்மீர் நிர்வாகமும் புதிய யூனியன் பிரதேசத்தில் பஞ்சாயத்துக்களுக்கு அதிகாரம் வழங்குவதில் இருந்து தவறிவிட்டன. பஞ்சாயத்து தேர்தல்கள் நடத்தியதே கண்துடைப்புக்காக தான். பஞ்சாயத்து உறுப்பினர்களுக்கு அதிகாரம் வழங்கி இருப்பதாக அரசு பொய் சொல்கிறது” என்று கூறினார்.

நன்றி: பர்ஸ்ட் போஸ்ட் இணைய தளத்தில் முடசிர் குலூ.

Trending Now: