பார்த்தது படித்தது ரசித்தது – சுதாங்கன் – 19 –1–2020

16-01-2020 05:24 PM

தமிழகத்தில் அரசியல் காட்சிகளில் திருப்பங்கள் இருப்பதாக சிலர் பார்க்கலாம். அதற்கு காரணம் உண்டு.  ஊரக உள்ளாட்சி தேர்தலில் கூட்டணி தர்மத்துக்கு புறம்பாக திமுக செயல்படுகிறது என தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டித் தலைவர் கே.எஸ். அழகிரியும், சட்டப்பேரவை காங்கிரஸ் தலைவர் கே. ஆர். ராமசாமியும் கூட்டறிக்கை வெளியிட்டுள்ளனர்.

தமிழகத்தில் நடந்து முடிந்த உள்ளாட்சி  தேர்தலில் திமுக தலைமையிலான மதசார்பற்ற முற்போக்கு கூட்டணியில் காங்கிரஸ் கட்சி இணைந்து போட்டியிட்டது. தொடக்கத்திலிருதே  எந்த ஒப்பந்தமின்றி  மாவட்ட அளவில் பேசி முடிவெடுப்பதென தீர்மானிக்கப்பட்டது. ஆனால், அந்த முயற்சிகளுக்கு மாவட்ட அளவில் எந்த ஒத்துழைப்பும் அதற்கு கிடைக்கவில்லை.

திமுக தலைமையிலிருந்து அறிவுறுத்தப்பட்ட இடங்களில் கூட காங்கிரஸ் கட்சிக்கு வாய்ப்புகள் மறுக்கப்பட்டுள்ளன. 303 ஊராட்சிகளில் பெருந்தலைவர் பதவிக்கு இரண்டு இடங்கள் மட்டுமே திமுக ஒதுக்கியது. 27 மாவட்ட ஊராட்சி பதவிகளில் ஒரு மாவட்ட ஊராட்சி தலைவர் பதவியோ, துணைத்தலைவர் பதவியோ வழங்கப்படவில்லை. இது கூட்டணி தர்மத்துக்கு புறம்பானது என்பதை மிகுந்த வருத்தத்துடன் தெரிவித்துக் கொள்கிறோம் என்று காங்கிரஸ் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டது.

ஆனால், கடந்த சட்டசபை தேர்தலில் காங்கிரஸ் கட்சிக்கு 41 இடங்கள் ஒதுக்கப்பட்டன. ஆனால், காங்கிரஸ் கட்சி 8 சட்டசபை இடங்களில் மட்டுமே வெற்றி பெற்றது. இதில் நாங்குநேரி தொகுதியில் வெற்றி பெற்ற காங்கிரஸ் வேட்பாளர் வசந்தகுமார் பார்லிமென்ட் தேர்தலில் போட்டியிட்டதால், அந்த இடம் காலியாகி இடைத்தேர்தல் நடந்தது. ஆனால், அதில் காங்கிரஸ் வெற்றி பெற வில்லை. அதனால் இப்போது காங்கிரஸ் கட்சிக்கு மொத்தம் ஏழு சட்டசபை உறுப்பினர்களே இருக்கிறார்கள்.

காங்கிரஸ் போன்ற பலம் வாய்ந்த, ஒரு தேசிய கட்சி இப்படி பலவீனப்

பட்டு போவது ஆரோக்கிய மானதல்ல. காங்கிரஸ் கட்சி என்பது சுதந்திரம் அடைந்தபின் தமிழகத்தில் 20 ஆண்டுகளும், மத்தி யில் 60 ஆண்டுகளும் ஆண்ட கட்சி. தற்போது 52 வயதை அடைந்த தலைமுறையினருக்கு தமிழகத்தில் காங்கிரஸ் கட்சி என்பது ஆட்சியில் இருந்தது என்பது கூட தெரியாது. அது ஒரு முதியோர் கட்சி என்கிற எண்ணம்தான்  தமிழகத்தில் பொதுவாக பரவி கிடக்கிறது. ஏன் இன்றைய காங்கிரஸ் கட்சியில் இருக்கும் 50 வயதுக்குக் குறைவானவர்களுக்குக் கூட அந்த கட்சி தமிழகத்தில் ஆட்சி செய்தது என்பது தெரியுமா என்பது கூட சந்தேகம்தான். காங்கிரஸ் கட்சியோடு கருத்து வேறுபாடு கொண்டவர்கள் கூட ஒரு விஷயத்தை மறந்துவிடக்கூடாது. தமிழகத்தின்  ஆரம்பகால வளர்ச்சிக்கு வித்திட்டது காங்கிரஸ் கட்சிதான். காங்கிரஸ் ஆட்சி காலத்தில்தான் தமிழகத்திற்கு பல திட்டங்கள் வந்தன. நெய்வேலி அனல்மின் நிலையம், திருச்சியிலுள்ள பாரத் ஹெவி எலக்ட்ரிக்கல்ஸ், சேலம் இரும்பாலை, சென்னையிலுள்ள உயர்தர கல்வி நிறு வனமான ஐ.ஐ.டி, தமிழகத்திலுள்ள பெரும்பாலான முக்கிய அணைகள் எல்லாம் காங்கிரஸ் ஆட்சியில்தான் கட்டப்பட்டன. அதுவும் காமராஜர் முதல்வராக இருந்த போது உண்மையிலேயே அவர் மக்கள் தொண்டராக இருது தமிழக நலன்களுக்காக பாடுபட்டார் என்பதை மறுக்க முடியாது.

 ஆனால், அந்த கட்சியில் தேய்மானம் என்பது 1971லேயே துவங்கிவிட்டது. காங்கிரஸ் ஆட்சியை தமிழகத்தில் தோற்கடித்துவிட்டுத்தான் திமுக 1967ம் ஆண்டு தமிழகத்தில் ஆட்சியைப் பிடித்தது. அதே திமுகவுடன் இந்திரா தலைமையிலான காங்கிரஸ் கட்சி 1971ம் ஆண்டு ஒரே சமயத்தில் நடைபெற்ற பார்லிமென்ட், சட்ட சபை தேர்தலில் திமுகவுடன் கூட்டணி வைத்துக் கொண்டது.  

அப்போது காங்கிரஸ் கட்சி இரண்டாக உடைதிருந்தது, தமிழ்நாட்டைப் பொறுத்த வரையில் காமராஜர் தலைமையிலான ஸ்தாபன காங்கிரஸ் (சிண்டிகேட்) தான், உண்மையான காங்கிரசாக விளங்கியது. இந்திரா காங்கிரசுக்கு தமிழகத்தில் பலம் இல்லை. அதனால்தான், தமிழ்நாட்டில் திமு கழகத்துடன் இ.காங்கிரஸ் கூட்டணி அமைத்து போட்டியிட வேண்டும் என்று இந்திரா காந்தி விரும்பினார். இந்த தேர்தலின் போது பல கட்டங் களில் பேச்சுவார்த்தை நடந்தது. முடிவில் திமுகவும் இ.காங்கிரசும் கூட்டணி அமைத்து போட்டியிடுவது என்று முடிவாயிற்று.

1967. தி.மு. கழகம் 170 இடங்களில் போட்டியிட்டது. இந்த முறை அதிக இடங்களில் போட்டியிடுவது என்று தீர்மானித்தது. அந்த அடிப்படையில் தோழமை கட்சிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தியது. இ. காங்கிரசுக்கு 5 – 7 பார்லிமென்ட் தொகுதிகளையும், 10 முதல் 15 வரை சட்டசபை தொகுதிகளையும் கொடுக்க தி.மு. கழகம் முன்வந்தது.

இது தொடர்பாக அன்றைய முதல்வர் கருணாநிதியை காங்கிரஸ் கட்சியின் சார்பில் சி.சுப்ரமணியம், பக்தவத்சலம், மோகன் குமாரமங்கலம் ஆகியோர் சந்தித்துப் பேசினார்கள். 20க்கும் மேற்பட்ட பார்லிமென்ட் தொகுதிகளையும், 80க்கும் மேற்பட சட்டசபைத் தொகுதிகளையும் ஒதுக்கவேண்டும் என்று வற்புறுத்தினார்கள். இந்த ஒதுக்கீடு நடந்திருந்தால் காங்கிரஸ் கட்சி தமிழகத்தில் வலுப்பெற்றிருக்கும். ஆனால், தமிழகத்தில் காங்கிரஸ் வளர்வதை அன்றைய திமுக தலைமை விரும்பவில்லை.

`தமிழகத்தில் காமராஜர் தலைமையில் உள்ள ஸ்தாபன காங்கிரஸ்தான் பலமானது. இ.காங்கிரஸ் வலுவற்றது. அதனால் 7 அல்லது 8 பார்லிமென்ட் தொகுதிகளையும் , 15க்கும் குறைவான சட்டசபை தொகுதிகளையும்தான் தர இயலும். இதனைப் பிரதமர் இந்திராவிடமே தெரிவித்திருக்கிறேன்’ என்றார் கருணாநிதி.

 இதனால் பேச்சுவார்த்தை முறிந்துவிட்டது என்று சொல்லிவிட்டு, சி.சுப்ரமணியம், பக்தவத்சலம், மோகன் குமாரமங்கலம் ஆகியோர் வெளியேறினார்கள்.

கூட்டணி ஏற்படாததால் மோகன் குமார மங்கலம் வருத்தமடைந்தார். `கூட்டணி இல்லை யேல், நான் தேர்தலில் போட்டியிடும் உத்தேசம் இல்லை’ என்று சொல்லிவிட்டுச் சென்றார்.

மறுநாள் இ.காங்கிரஸ் வேட்பாளர்கள் பட்டியலை சி.சுப்ரமணியம் வெளியிட்டார். அவர்தான் அப்போது தமிழ்நாடு இ.காங்கிரஸ் கமிட்டியின் தலைவர். அதனால் திமுக வேட்பாளர் பட்டியலை கருணாநிதி வெளியிட்டார்.

 தமிழகத்தில் தி.மு. கழகமும், இ. காங்கிரசும் மோதிக்கொள்வதை விரும்பாத இந்திரா காந்தி, கருணாநிதியுடன் தொலைபேசியில் பேசினார். `மறுபரிசீலனை செய்து 20 சட்டசபை தொகுதிகளையும், 10 பார்லிமென்ட் தொகுதிகளையும் மட்டுமாவது ஒதுக்கித் தர முடியுமா?’ என்று கேட்டார்.

`இனிமே சட்டசபை தொகுதிகளை ஒதுக்குகிற முயற்சியில் ஈடுபடுவது இயலாது. பார்லிமென்ட் தொகுதிகள் சிலவற்றை ஒதுக்குவது பற்றி யோசிக்கிறேன்’ என்றார் கருணாநிதி. இதன்பின் நடந்த பேச்சுவார்த்தையில் இ.காங்கிரஸ் 10 பார்லிமென்ட் இடங்களிலும் சட்டசபைத் தொகுதி களிலும் போட்டி யிடுவது  என்றும் முடிவாயிற்று.

கருணாநிதி ஏற்கனவே பெயர் அறிவிக்கப் பட்ட சில வேட்பாளர்களை வாபஸ் பெற்றுக் கொண்டு இ.காங்கிரசுக்கு 10 பார்லிமென்ட் தொகுதிகளை ஒதுக்கித் தந்தார். ஒரு சட்டசபை தொகுதியில் கூட போட்டியிடுவது இல்லை என்று இ.காங்கிரஸ் கட்சி எடுத்த முடிவுதான் அக்கட்சிக்கு தமிழகத்தில் அடியோடு வேரறுக்க வைத்த முயற்சி என்றே சொல்லலாம்.

இந்திரா காந்திக்கு பார்லிமென்ட்டில் அதிக இடங்கள் கிடைத்தால் போதும் என்கிற எண்ணம்தான் இருந்தது. அவருக்கு இ.காங்கிரஸ் கட்சியைவிட தான் பிரதமராக தொடரவேண்டும் என்கிற எண்ணமே மேலோங்கியிருந்தது. இன்றைக்கு பல மாநிலங்களில் வலுவாக இருந்த காங்கிரஸ் கட்சி வீழ்ந்ததற்கு காரணம் இந்திரா காந்தியின் இந்த மனப்போக்குதான்.

பலமும் புகழும் வாய்ந்த பல மாநிலத் தலைவர்கள் மாநிலங்களில் வலுவற்று போனார்கள். இதற்கு உதாரணம் கர்நாடகத்தில் நிஜலிங்கப்பா, மகாராஷ்டிரத்தில் ஒய்.பி. சவான், வீரேந்திர பாட்டில், தமிழகத்தில் கட்சி இரண்டாக உடைந்தது.

மாநிலத்தில் கட்சிக்கு இருக்கும் பலம் மட்டுமே ஒரு தேசிய கட்சியை தொடர்ந்து மத்தியில் ஆட்சியில் வைத்திருக்கும் என்கிற அடிப்படை ஜனநாயக மாண்பை இந்திரா காந்தி புரிந்து கொள்ளவில்லை. ‘இந்தியா என்றால் இந்திரா, இந்திரா என்றால் இந்தியா’ என்கிற கோஷங்கள் அவரை குளிர வைத்தன.

 இந்திராவுக்கு பிறகு ராஜீவ் காந்தியும் அதே பாணியை பின்பற்ற ஆரம்பித்தார். அது இன்றுவரை தொடர்கிறது. அதனால் பல மாநிலங்களில் பலம் வாய்ந்த காங்கிரஸ் கட்சி மாநிலக் கட்சிகளுக்கு டில்லி பதவிக்காக பல்லக்கு தூக்க வேண்டிய நிலை உருவாயிற்று.

தமிழகத்தில் கூட அவ்வப்போது தமிழகத்தில் காம ராஜர் ஆட்சி அமைப்போம் என்பது வெற்று குரலாக மங்கிப் போனது. பலம் வாய்ந்த மாநிலக் கட்சியில் இருந்து கொண்டு நமக்கு நல்ல பதவி கிடைத்தால் போதும், என்கிற மனநிலைக்கு மாநில தலைவர்களும் வந்துவிட்டார்கள். மேலும் உட்கட்சி ஜனநாயகம் என்பதை காங்கிரஸ் கட்சி மறந்து பல வருடங்களாகி விட்டன. தேர்தல் மூலமாக கட்சி பதவிகளுக்கு யாரும் தேர்ந்தெடுக்கப் படுவதில்லை. மேலிடத்தின் தயவினால் மாநிலத்தில் கட்சியில் பதவியில் நியமிக்கப்படுபவர்கள் மட்டுமே இப்போது காங்கிரஸ் கட்சியில் எல்லா மாநிலங்களிலும் உலா வந்து கொண்டிருக்கிறார்கள்.

 ஒரு தேசிய கட்சி இப்படி பலவீனப்பட்டு போவது அரசியல் கலாசாரத்திற்கு, குறிப்பாக தமிழகத்தின் எதிர்காலத்திற்கு நல்லதல்ல.  காங்கிரஸ் கட்சி தன் நிலையை மறுபரிசீலனை செய்ய வேண்டிய நிலையில் இருக்கிறது.

Trending Now: