மூத்த பத்திரிகையாளர் சுதாங்கன் எழுதும் வாலிப கவிஞர் வாலி – 26

16-01-2020 05:09 PM

சுப்பையா நாயுடுவுடன்  வாலி பல படங்களில் பணிபுரிந்திருக்கிறார். அவர் மெட்டுக்கு வாலி பாட்டு எழுதி யதும் உண்டு; வாலி பாட்டுக்கு அவர் மெட்டு போட்டதும் உண்டு. வாலி யின் நண்பர் மோகன்ராம் தயாரித்த அனேக படங்களுக்கு வாலியும், சுப்பையா நாயுடுவும் தொடர்ந்து பணியாற்றி யிருக்கிறார்கள்.

` நீ எங்கே? என் நினைவுகள் அங்கே? என்று ‘மன்னிப்பு’ படத்தில் சுப்பையா நாயுடு வர்ண மெட்டமைத்திருந்த இந்த பாடல், இன்றளவும் பலரின் செவிகளை நிறைத்துக் கொண்டிருக்கிறது. இன்றைய இசையமைப்பாளர்களில் அனேகமாக எல்லோருமே இந்தப் பாடலைப் பற்றி பிரஸ்திபிக்காமல் இருந்தது இல்லை. இந்த  பெருமை வாலியின் எழுத்தைக் காட்டிலும் சுப்பையா நாயுடு இசையையே முழுக்க முழுக்க சாரும்.

சுப்பையா நாயுடு இசையில் அமைந்த இன்னொரு பாடலும், அது பற்றிய ஒரு வேடிக்கையான விமர்சனமும்  வாலி நினைவில் பசுமையாக உள்ளது.

`தலைவன்’ என்றொரு படத்தை எம்.ஜி.ஆர். நடிக்க, தாமஸ் பிக்சர்சார் தயாரித்து வந்தார்கள்.  அந்தப் படத்தின் பாடலாசிரியர் வாலி; இசை – சுப்பையா நாயுடு.

அந்தப் படத்தின் படப் பிடிப்பின் இடைவேளையில் எம்.ஜி.ஆரோடு அவரது மேக்கப் அறையில் அமர்ந்து வாலி பேசிக் கொண்டிருந்தார்.

`தலைவன்’ பட விளம்பர டிசைன் எம்.ஜி. ஆரின் ஒப்புதலுக்காக, அப்போது அங்கு கொண்டு வரப்பட்டது.

`விரைவில் வெளி வருகிறது’ என்ற தலைப் பைத் தாங்கி, அந்த விளம்பர டிசைன் எம்.ஜி.ஆர்-. வாணிஸ்ரீ இருவரின் படங்களோடு வரையப்பட்டிருந்தது.

அப்போது எம்.ஜி.ஆர். வாலியிடம் சொன்னார்.

`மத்த எந்த படத்துக்கும் தராத அளவுக்கு கால்ஷீட்டை நான் இந்த படத்துக்குக் கொடுத்துட்டேன். ஒண்ணரை வருஷமாகியும் இந்த படம் முடியலே. பணத்தட்டுப்பாடு, கால்ஷீட் தட்டுப்பாடு இரண்டுமே இல்லாத போதும் இந்தப் படம் வெளிவர்றதுக்கு சங்கடப்படு துன்னா, நீங்கள் எழுதின பாட்டுதான் காரணம்.

இப்படி எம்.ஜி.ஆர். சொன்ன வுடன் வாலி அதிர்ந்து போய் ` எந்தப் பாட்டுண்ணே ?’ என்று கேட்டார்.

 `தலைவன்’ படத்தின் பூஜையன்று ஒலிப்பதிவு செய்யப்பட்ட வாலியின் பாடலின் பல்லவியை எம்.ஜி.ஆர். வாலியிடம் பாடிக் காண்பித்தார்.

 அந்த பாட்டின் வரிகள் இதுதான்.

 `நீராழி மண்டபத்தில் – தென்றல்

 நீந்தி வரும் நள்ளிரவில் – தலைவன்

 வாராமல் காத்திருக்க’

 எம்.ஜி.ஆர் மேலும் விளக்கினார் –

`வாலி, படத்தின் பேரு ‘தலைவன்’. நீங்க என்னடான்னா பூஜை பாட்டிலேயே  ‘தலைவன் வாராமல் காத்திருக்க’ அப்படின்னு எழுதிட்டீங்க.. இந்த வாக்கியம் அறம் விழுந்த மாதிரி ஆகிப்போய்த்தான் படம் தாமதமாகிக் கொண்டே போகுது.

எம்.ஜி.ஆர். இப்படி சொன்னவுடன், அந்த விளம்பர டிசைனை உற்று நோக்கிய வாலி , ` அண்ணே! படத்தினு டைய கம்பெனி பேரு தாமஸ் பிக்சர்ஸ். விளம்பர டிசைனைப் பாருங்க தாமஸ் பிக்சர்ஸ்ங்கறதுக்கு பதிலா `தாமஸ பிக்சர்ஸ்’ன்னு ஆர்டிஸ்ட் எழுதியிருக்காரு. அதனாலதான் படம் தாமதமாகுது’  என்றார்.

 வாலியின் சமயோதிமான இந்த பாடலை எம்.ஜி.ஆர் மிகவும் ரசித்தார்.

`வாலி! எந்த காலத்திலய் நீங்க பொழைச்சுப்பீங்க. யார் என்ன உங்கள மடக் கினாலும், சாமர்த்தியமா சமாளிச்சு பதில் சொல்றீங்க..’’

 எம்.ஜி.ஆர். வாக்கு வாலி விஷயத்தில் பலித்தது. நான்கு தலைமுறைகளுக்கு பாட்டு தன் இறுதி காலம் வரை எழுதியவர் வாலிதான்.

சுப்பையா நாயுடு காலத்திலேயே வாலி அதிகமாக பணியாற்றிய இன்னொரு இசையமைப்பாளர் வி.குமார்.  எந்த துறையாயினும் சரி, இருவர் இணைந்து பணியாற்ற நேருமாயின் பரஸ்பரம் ஒரு ஈர்ப்பு இல்லையேல் உழைப்

பின் பலன் உருப்படியாக இருக்காது.

` நீயும் நானுமடி, எதிரும் புதிருமடி’ என்று கிராம வட்டாரத்தில் ஒரு பழஞ்சொல் உண்டு. அந்த மாதிரி மனோபாவம் வாய்த்த இரு கலைஞர்கள் இணைந்து தொழில் புரிந்தால் அல்லது தொழில் புரிய நேர்ந்தால் அது ஓர் இயந்திரத்தனமாக இருக்குமே தவிர இயல்பாக இருக்காது.

 சினிமாவிற்கு இந்த சித்தாந்தம் மிகவும் பொருந்தும். சரியான கூட்டு  மற்றும் சமபங்கு, புரிதல் இல்லாவிட்டால், சேர்ந்து உருவாக்கும் எத்தனையோ படங்கள் உயிரோட்டமில்லாமல் ` செத்தவன் கையிலே வெத்தலெ பாக்கு கொடுத்தது போல’ சலனமற்றிருக்கும். தயாரிப் பாளர்களும், விநியோகஸ்தர்களும் இயக்குநர்களும், `வெற்றி ஜோடிகளா?’ என்பதை கணித்தே காரிய மாற்றுவார்கள்.

`நான் பெரியவனா?  நீ பெரியவனா? என்று முண்டா தட்டுவோரை வேலைக்கு வைத்துக்கொண்டு முழுப்படத்தை முடிப்பதற்குள் மூச்சு முட்டிப் போகும் என்கிற சேதியெல்லாம் கோடம்பாக்கம் ஜாம்பவான்கள் செவ்வனே அறிந்தவர்கள். `குட்டையும்  நெட்டையுமாக ரெட்டை மாட்டு வண்டியில் மாடுகளை பூட்டினால் அது ஊர் போய் சேராது ‘ என்பது ஐன்ஸ்டீன் கண்டுபிடித்துச் சொல்ல வேண்டிய சூத்திரமில்லை. பட்டிக்காட்டானுக்குக் கூடப் புரிந்த பாரம்பரியமான விஷயம் இது.

 வாலி தன் ஆரம்ப நாட்களில் எத்தனையோ இசையமைப்பாளர்களோடு பணிபுரிந்திருக்கிறார். அவர்களெல்லாம் வாலியிடத்தில் அன்பு பாராட்டி அவரை உடனே அங்கீகரித்துவிட்டார்கள் என்று சொல்ல முடியாது. சந்தர்ப்ப சூழ்நிலையினால் சொல்லவும் முடியாமல் மெல்லவும் முடியாமல் அவர்கள் முன்பு அமர்ந்து பாட்டு புனைந்தார் வாலி என்பதுதான் சரியான உண்மை.

  மெல்லிசை மன்னர் விஸ்வநாதன் அடிக்கடி சொல்லுவார் –

` பாட்டு எழுதற கவிஞரும், மியூசிக் டைரக்டரும்  புருஷன் பொஞ்சாதி மாதிரி. அடிச்சுண்டாலும், புடிச்சுண்டாலும் அடிமனசுல ஒரு பந்தம் இருக்கணும். அப்பதான் பாட்டுங்கிற பிள்ளைய ஒழுங்காகப் பெத்தெடுக்க முடியும். இந்த குழந்தையை பெத்தெடுக்கறதுல, ரெண்டு பேருக்குமே  fifty fifty  என்கிற விகிதாசாரத்துல பங்கு உண்டு.

மேற்சொன்ன பரந்த மனப்பான்மை யோடு அன்றைய இசையமைப்பாளர்கள் எல்லோரும் இருந்தனர் என்று சொல்ல முடியாது.

புதியவர்களை ஊக்குவித்த புண்ணிய வான்களும் உண்டு; புறந்தள்ளிய பிரபலங் களும் உண்டு.

`மாமா ‘ என்று படத்துறையைச் சார்ந்தோரால், மரியாதையுடன் அழைக்கப் பெறும் கே.வி. மகாதேவன், வாலியை ஆரம்ப காலத்தில் எட்டிக் காயாய் நினைத்தவர்தான். வாலி, தகுதியுள்ளவனா இல்லையா என்றெலாம் சோதித்துப் பார்க்க அவருக்கு அவகாசமில்லாது போனதோ என்னவோ?

அவரோடு வாலி பணிபுரிந்த ஆரம்ப நாட்கள், வாலிக்கு அத்தனை உற்சாகத்தை அளிக்கவில்லை. என்ன காரணம் கருதி, அவர் வாலியை எட்ட நிறுத்துகிறார் என்பதும் வாலிக்குப் புரியவில்லை.  வாலி வர்ண மெட்டுக்களுக்கு வார்த்தைகளை வழங்கத் தெரியாமல் ஆர்மோனியப் பெட்டிக்கு முன்னால் சிபாரிசுகளை கொண்டு அமர்ந்தவரல்ல.  வாலியின் பாணியே வேறு.

(தொடரும்)

Trending Now: