மூத்த பத்திரிகையாளர் சுதாங்கனின் ‘திருமால் பெருமை’ –17

13-01-2020 05:53 PM

அது முதற்கொண்டு உயிரினங்களின் இனப்பெருக்கம் ஸ்திரி புருஷர்களின் உடல் சேர்க்கையினால் தோன்றலாயிற்று. அதற்கு முன் மகா தபஸ்வியான முனிவர்கள் உடல் சேர்க்கை இன்றியே தங்கள் தவ வலிமையினாலும், பார்வையினாலும்  வம்ச விருத்தி செய்யும் சக்தி படைத்தவர்களாக இருந்தார்கள்.

 இந்த சந்தர்ப்பத்தில் மைத்ரேயர் பராசரரிடம் ஒரு சந்தேகத்தைக் கேட்கிறார். ‘முனிசிரேஷ்டரே! தட்சன் பிரம்மாவின் கட்டை விரலிலிருந்து தோன்றினான் என்று நான் கேட்டிருக்கிறேன். அப்படியிருக்க, அவன் ப்ரதேஸர்களுக்கு மகனாகப் பிறந்தான் என்று தாங்கள் கூறுவது எப்படி ? மேலும் தாங்கள் கூறும் வரலாறுகளிலிருந்து சந்திரன் ஒரு விதத்தில் தட்சனுக்கு பாட்டனாகவும், வேறு விதத்தில் அவனுக்கு மாப்பிள்ளை முறையிலும் இருக்கிறானே, அது எவ்விதம் சாத்தியம்? என் மனத்தில் இந்த பெரிய சந்தேகம் இருந்து வருகிறது.

பராசரர் கூறினார் – ‘‘ஜீவர்களுக்கு ஜனனமும் மரணமும் காலப்ரவாகத்தில் மாறி மாறி, தொடர்ந்து கொண்டே இருக்கின்றன. ஞானதிருஷ்டி படைத்த முனிவர்களுக்கு இதில் எந்த குழப்பமும் ஏற்படாது. முனிவரே! யுகங்கள் தோறும் தட்சாதியர்கள் தோன்றி வருகிறார்கள். அவ்விதமே மறைந்து போகிறார்கள். இதன் காரணமாகவே முன் யுகங்களில் மூத்தவன், இளையவன் என்று பாகுபாடு வயதை ஒட்டி இல்லாமல் தவம், ப்ரபாவம் இவற்றை ஒட்டியே இருந்து வந்தது.

 இப்போது தட்சனின் திருஷ்டி பற்றி சொல்கிறேன். அவன் வீரணப்ரஜாபதியின் மகள் அஸிக்னியை மணம் புரிந்தான். அந்த அஸிக்னிக்கு முதலில் ஐயாயிரம் பிள்ளைகள் பிறந்தனர். அவர்களுக்கு ‘ஹர்யச்வர்கள்’ அதாவது ‘கணங்கள்’ என்று பெயர். தட்சன் அவர்களை ப்ரஜாஸ்ருஷ்டியில் ஈடுபடுத்தினான். அப்போது நாரத முனிவர் அவர்களிடம் கூறினார் ‘ஹர்யச்வ கணங்களே! நீங்கள் வாரிசுகளை உருவாக்கும் முயற்சியில் ஈடுபட்டிருக்கிறீர்களே! அதை எப்படி செய்யப் போகிறீர்கள்? முதலில் பூமியின் மேற்புறம், கீழ்புறம், உட்புறம் ஆகியவற்றில் என்ன இருக்கின்றன? அவற்றின் பரிமாணம் என்ன முதலிய விவரங்களைத் தெரிந்து கொண்டீர்களா? மூடர்களே! இதை முதலில் தெரிந்து கொள்ள முயற்சி செய்யுங்கள். இதைக் கேட்ட ஹர்யச்வ கணங்கள் எல்லா திக்குகளிலும் பூமியைச் சுற்றி வரப் புறப்பட்டார்கள். ஆனால் இன்று வரை எவரும் திரும்பவில்லை.

 ஹர்யச்வர்கள் வெகு காலம் ஆகியும் திரும்பாததைக் கண்ட தட்சன் மறுபடியும் அஸிக்னியை ஆயிரம் பிள்ளைகளை தோற்றுவிக்கச் செய்தான். அவர்கள் ‘சபலாச்வ கணங்கள்’ என்று பெயர் பெற்றனர்.  அவர்களும் வாரிசுகளை உருவாக்க முயற்சி செய்ய, நாரதர் அவர்களிடமும் தன் புத்திமதியைச் சொன்னார். சபலாச்வர்களும் நாரதர் கூறிய அறிவுரை சரியே என்று தங்களுக்குள் தீர்மானித்து, முதலில் தங்கள் சகோதரர்கள், ஹர்யச்வர்களைக் கண்டுபிடித்தால் உதவியாக இருக்கும் என்று எண்னி, பூமியில் எல்லா திக்குகளுக்கும் தேடச் சென்றார்கள். ஆனால், அண்ணன்மார்களைத் தேடிச் சென்ற தம்பிமார்கள் எவரும் இன்று வரை திரும்பவேயில்லை. அதனால்தான் யாருக்காவது சகோதரன் ஒருவன் காணாமல் போனால், அவனைத் தேடிச் செல்லும் சகோதரனும் காணாமல் போவான் என்ற கருத்து உலகத்தில் நிலவி வருகிறது.

 மீண்டும் யுத்த கணங்கள் திரும்பாததைக் கண்டு தட்சன் நாரதரின் மேல் கோபம் ஏற்பட்டு, அவரைச் சபித்தான். அவர் எங்கும் தங்க முடியாது, ஒரு நாடோடியாகத் திரிந்து கொண்டி ருக்க வேண்டும் என்பது சாபம். பிறகு தட்சன் வைருணியிடத்தில்  அதாவது அவன் மனைவி அஸிக்னியிடத்தில் அறுபது பெண்கள் பிறக்கச் செய்தான். அவர்களுள் பதின்மூன்று பேரை தர்மருக்கும் பதின்மூன்று பேரை கச்யபருக்கும், இருபத்தி ஏழு பேரை சந்திரனுக்கும், நால்வரை அரிஷ்ட நேமிக்கும், இருவரை பகு புத்தி ரருக்கும், இருவரை அங்கிரஸருக்கும் மற்றும் இருவரை க்ருசார்வருக்கும் மணம் செய்து கொடுத்தான். மொத்தம் 60  பேர். இதில் கச்யபரிடமிருந்து பிறந்த பிள்ளைகளை ஹிரண்யகசிபு, இவனுக்கு நான்கு பிள்ளைகள் பிறந்தார்கள். அவர்களின் பெயர்கள் அனுஹ்லாதான், ஹ்லாதான், பிரகலாதன், ஸம்ஹ்லாதன். அதில் பிரகலாதன்தான் ஒரு கீர்த்திமான்.

 பிரகலாதனுக்கு நாராயணன் மேல்  இணையில்லாத பக்தி. எவ்விடத்திலும் சமநோக்குக் கொண்டவன். ஜிதேந்திரியன். அவன் இதயத்தில் நாராயணனை நிலைநிறுத்தியிருந்ததால் உடல் முழுவதும் தீயிட்ட போதிலும் அவனை தீ ஒன்றும் செய்யவில்லை. சமுத்திரத்தில் அவனை கட்டித்தூக்கி எறிந்த போது பூதேவியே நடுக்கம் கொண்டு பூகம்பத்தை ஏற்படுத்தினாள். எங்கும் நாராயணனையே தியானித்துக் கொண்டிருந்த பிரகலாதனின் சரீரம் மலையைப் போன்று அதிகடினமாக இருந்து அவன் மீது வீசப்பட்ட அத்தனை அஸ்திரங்களையும் விழுங்கச் செய்தது. விஷத்தை தீயைப்போல் கக்கிக்கொண்டு அவனை நோக்கி சீறி வந்த கொடிய பாம்புகள் எதுவும்  அவனை செய்து விட முடியவில்லை.

 நாராயணனையே பூஜித்துக்கொண்டிருந்த அவனை பாறைகளின் மீது அறைந்தபோது அவனுக்கு எந்த ஆபத்தும் ஏற்படவில்லை. வெகு உயரமான இடத்திலிருந்து அசுரர்கள் ஆகாயத்திலிருந்து அவனைக் கீழே எறிந்தபோது பூமாதேவியே தன் கைகளில் அவனை ஏந்திக் கொண்டாள். நாராயணனை சித்தத்தில் கொண்டிருந்த பிரகலாதன் மீது பேய்க் காற்றுக்களை வீசச் செய்தும் அவனை ஒன்றும் செய்ய முடியவில்லை. அவன் மார்பின் மீதும் மதம் பிடித்த யானைகளை மிதிக்கச் செய்தும், கூரான தந்தகளினால் அவன் மார்பைப் பிளக்க செய்யவும், அந்த முயற்சிகள் எதுவும் பலிக்கவில்லை. அவன் மீது ஏவப்பட்ட ஏவல் பூதங்கள் கூட பயனற்றுத் திரும்பின.Trending Now: