07-01-2020 05:59 PM
நடிகர்கள் : பரத், சாந்தினி ஸ்ரீதரன், சுதேஷ் பெர்ரி, எரிகா பெர்னாண்டஸ், சந்தானம், லட்சுமி, டி.வி. ரத்னவேலு மற்றும் பலர். இசை : சிமோன் கே கிங், ஒளிப்பதிவு : சரவணன் அபிமன்யு, எடிட்டிங் : சுபாரக், தயாரிப்பு : சித்திரன், சாஷி தியாகேசன், திரைக்கதை, இயக்கம் : சசி.
ஏழு மாதங்களுக்கு முன்பாக நேர்ந்த ஒரு விபத்தினால் உடலளவிலும், மனதளவிலும் பாதிக்கப்படும் அரவிந்தை (பரத்) அவனது அண்ணன் கோபால் (சந்தானம்) கவனித்துக் கொள்கிறான். மனநல மருத்துவரிடம் சிகிச்சை பெறும் அரவிந்த், நடந்த விபத்தின் போது தன்னுடன் இருந்த தனது காதலி லியானா (சாந்தினி ஸ்ரீதரன்) இறந்து விட்டாள் என்று கூறுவதை யாரும் நம்ப மறுக்கிறார்கள். அரவிந்த் கூறும் லியானா என்ற பெண் இருந்ததற்கான எந்த ஆதாரமும் எங்கும் இல்லை. அரவிந்தின் ஞாபகத்தில் உள்ளபடி விசாரித்தும், கல்லுாரி, வாக்காளர் பட்டியல் என எதிலும் அவள் பெயர் இல்லை. நாளிதழில் வெளியான விபத்து செய்திகளிலும் அவளது விவரம் இல்லை. அவள் வாழ்ந்த வீட்டிலும் வேறு நபர்கள் இருக்கிறார்கள்.
மருத்துவர் லியானா என்றொரு பெண்ணே இல்லை, அது அரவிந்தின் கற்பனையில் உருவான ஒரு பிம்பம் என்று கூறுகிறார்கள். அவர் கூறுவதை நம்ப மறுத்தாலும், அண்ணன் கோபாலுக்காக தனது பழைய வாழ்க்கைக்கு திரும்புகிறான் அரவிந்த். பாயல் இன்போடெக் எனும் அலுவலகத்தில் உடன் பணிபுரியும் மஞ்சரி (எரிகா பெர்னாண்டஸ்) அரவிந்திற்கு உதவ முன்வருகிறாள். இருவரும் தேடியும் எந்த ஒரு துப்பும் கிடைக்காத நிலையில் லியானாவின் ஞாபகங்களால் நிம்மதியின்றி வாழ்கிறான் அரவிந்த். தன்னைச்சுற்றி சதிவலை பின்னப்படுவதை உணரும் நேரத்தில் கோபாலும் கொல்லப்படுகிறான்.
அதிர்ஷ்டவசமாக லியானாவின் அத்தையை (லட்சுமி) சந்திக்கும் அரவிந்த், அவரை மிரட்டி உண்மைகளை தெரிந்து கொள்கிறான். ஆனால் மேற்கொண்டு விவரங்கள் தெரிய வருமுன் அவர் கொல்லப்பட, கொலையாளியையும், கூட்டாளி மஞ்சரியையும் அரவிந்த் கொல்கிறான். லியானா இறக்கவில்லை எனும் உண்மையை உணரும்போது கடத்தப்படுகிறான். சதிகளின் பின்னணியில் பாயல் இன்போடெக்கின் சிஇஓ சித்ரஞ்சன் (சுதேஷ் பெர்ரி) இருப்பதை அரவிந்த் தெரிந்து கொள்கிறான்.
இளம்வயதில் காதலித்து சேரமுடியாமல் இறந்து போன தனது காதலி பாயல் போலவே இருப்பதால் பள்ளி மாணவியான லியானாவை அனாதையாக்கி, லட்சுமி மூலமாக கல்லுாரி காலம் வரை பாதுகாக்கிறான் சித்ரஞ்சன். விபத்தில் சிக்கும் இருவரையும் பிழைக்க வைத்து நடந்த உண்மைகளை கூறி லியானாவிடம் திருமணத்திற்கு வற்புறுத்துகிறான். அரவிந்த் உயிரை காப்பாற்றுவதற்காக சம்மதிக்கும் லியானா, தங்கள் உண்மையான காதலை மறக்காமல் அரவிந்த் தன்னை தேடி வருவான் என்று உறுதியாக இருக்கிறாள்.
அரவிந்திற்கு லியானாவை மறப்பதற்காக ஷாக் ட்ரீட்மெண்ட் தரப்படுகிறது. ஆனால் தப்பித்து டாக்டரையும் சித்ரஞ்ச னின் அடியாட்களையும் கொல்லும் அரவிந்த், இறுதியில் லியானாவை கண்டுபிடிக்கிறான். இருவருமாக சேர்ந்து சித்ரஞ்சனை அழிக்கிறார்கள். பாயல் நினைவுடன் சித்ரஞ்சன் இறக்க, காதலர்கள் ஒன்றுசேர்கிறார்கள்.