இந்தியா - மே.இ. தீவு அணிகளிடையே ஒருநாள் கிரிக்கெட் போட்டி: ரோஹித் சர்மா, ராகுல் அசத்தல் சதம்

18-12-2019 05:51 PM

விசாகப்பட்டினம்,

மேற்கு இந்திய தீவு அணிக்கு எதிரான இரண்டாவது ஒரு நாள் போட்டியில் இந்தியா 387 ரன் எடுத்து வலுவான நிலையில் உள்ளது. 388 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் மே.இ. தீவுகள் அணி விளையாடி வருகிறது.

டி20, ஒருநாள் தொடா்களில் பங்கேற்பதற்காக மே.இ.தீவுகள் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து வருகிறது.
3 ஆட்டங்கள் கொண்ட டி20 தொடரில் 2-1 என கைப்பற்றியது இந்தியா.
3 ஆட்டங்கள் கொண்ட ஒருநாள் கிரிக்கெட் போட்டி தொடா் நடைபெற்று வருகிறது. சென்னையில் நடைபெற்ற முதல் ஒருநாள் ஆட்டத்தில் மேற்கிந்தியத் தீவுகள் அணி அபார வெற்றி பெற்றது.
2-வது ஒருநாள் ஆட்டம் விசாகப்பட்டினத்தில் இன்று நடைபெற்று வருகிறது.
டாஸ் வென்ற மேற்கிந்தியத் தீவுகள் அணி, பந்துவீச்சைத் தேர்வு செய்தது.
முதல் ஒருநாள் ஆட்டத்தில் இந்திய அணி தோற்றதால்  இரண்டாவது ஆட்டத்தில் வெற்றி பெற வேண்டும் என்கிற முனைப்புடன் இந்திய அணியின் தொடக்க வீரர்கள் விளையாடினார்கள்.
முதல் 10 ஓவர்களில் ராகுல் 2 சிக்ஸர்கள் அடித்தார்.
இதனால் இந்திய அணி 10 ஓவர்களில் விக்கெட் இழப்பின்றி 55 ரன்கள் எடுத்தது. ராகுல், 46 பந்துகளில் அரை சதத்தை எட்டினார்.
மறுமுனையில் ரன்கள் சேர்த்தார் ரோஹித் சர்மா.67 பந்துகளில் அரை சதத்தை எட்டினார் ரோஹித்.
26-வது ஓவரில் இந்திய அணி விக்கெட் இழப்பின்றி 150 ரன்கள் எடுத்தது.

ரோஹித் சர்மா  106 பந்துகளில் சதமடித்தார். இது அவருடைய 28-வது ஒருநாள் சதம். இந்த வருடத்தில் ரோஹித் எடுக்கும் 7-வது சதம். 

102 பந்துகளில் சதமடித்த ராகுல், அதே ஓவரில் 102 ரன்களில் அல்ஸாரி ஜோஸப்பின் பந்துவீச்சில் ஆட்டமிழந்தார். ரோஹித் சர்மாவும் ராகுலும் முதல் விக்கெட்டுக்கு 227 ரன்கள் எடுத்து இந்திய அணிக்குப் பலமான அடித்தளம் அமைத்துக் கொடுத்துள்ளார்கள்.

இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி யாரும் எதிர்பாராத விதத்தில் முதல் பந்திலேயே டக் அவுட் ஆனார். பொலார்ட் அவருடைய விக்கெட்டை வீழ்த்தினார்.

இந்திய அணி 50 ஓவர்களின் முடிவில் 5 விக்கெட் இழப்புக்கு 387 ரன்கள் எடுத்துள்ளது.

388 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் மே.இ. தீவுகள் அணி விளையாடி வருகிறது.Trending Now: