உலகக்கோப்பை துப்பாக்கிச் சுடுதல் போட்டி: 3 தங்கப் பதக்கங்களை வென்று இந்தியா அசத்தல்

21-11-2019 12:01 PM

பெய்ஜிங்,           

உலகக்கோப்பை துப்பாக்கிச் சுடுதல் போட்டியின் பெண்களுக்கான 10மீ ஏர் பிஸ்டல் பிரிவில், இந்திய வீராங்கனை மனு பாக்கரும், 10மீ  ஏர் ரைபிள் பிரிவில் மற்றொரு வீராங்கனை இளவேனில் வாலறிவனும் தங்கப் பதக்கங்களை வென்று சாதனை படைத்துள்ளனர். இதேபோல், ஆடவருக்கான 10 மீ ஏர் ரைபிள் பிரிவில் இந்திய வீரர் திவ்யான்ஷ் தங்கப் பதக்கத்தை வென்று அசத்தினார்.

10மீ ஏர் பிஸ்டல்

சீனாவின் புடியான் நகரில் உலகக்கோப்பை துப்பாக்கிச் சுடுதல் போட்டிகள் நடைபெற்று வருகின்றன. இதில், இந்தியாவின் இளம் வீராங்கனை மனு பாக்கர் (வயது 17), இன்று நடைபெற்ற பெண்களுக்கான 10 மீட்டர் ஏர் பிஸ்டல் பிரிவில், 244.7 புள்ளிகளுடன் தங்கம் வென்று அசத்தியுள்ளார். இதன்மூலம், ஜூனியர் பிரிவில் புதிய உலக சாதனையையும் படைத்துள்ளார்.

செர்பிய வீராங்கனை அருணோவிக் சோரனா, 241.9 புள்ளிகளுடன் வெள்ளிப் பதக்கமும், சீனாவின் வாங் கியான், 221.8 புள்ளிகளுடன் வெண்கலப் பதக்கத்தையும் வென்றனர். இறுதிச் சுற்றுக்கு தகுதிபெற்ற மற்றொரு இந்திய வீராங்கனை யாஷாஸ்வினி தேஸ்வால் 6ம் இடத்தைப் பிடித்தார்.

இந்த ஆண்டு நடந்து முடிந்த ஜூனியர் ஒலிம்பிக் மற்றும் ஆசிய சாம்பியன்ஷிப் போட்டிகளிலும் மனு பாக்கர் தங்கம் வென்றது மூலம், டோக்கியோவில் அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள ஒலிம்பிக் போட்டியில் பங்கேற்பதையும் மனு பக்கர் உறுதி செய்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

10மீ ஏர் ரைபிள்

இதேபோல், 10மீட்டர் ஏர் ரைபிள் பிரிவில் இந்திய வீராங்கனை இளவேனில் வாலறிவன் 250.8 புள்ளிகளுடன் தங்கப் பதக்கத்தைக் கைப்பற்றினார். 

சைனீஸ் தைபே வீராங்கனை லின் யிங் ஷின் 250.7 புள்ளிகளுடன் வெள்ளிப் பதக்கத்தையும், ரோமேனியா வீராங்கனை லாரா ஜார்கேடா கோமன் 229 புள்ளிகளுடன் வெண்கலப் பதக்கத்தையும் கைப்பற்றினர்.

இதைத்தொடர்ந்து, நடைபெற்ற ஆண்களுக்கான 10 மீட்டர் ஏர் ரைபிள் பிரிவில், இந்திய வீரர் திவ்யன்ஷ் (வயது 17) 250.1 புள்ளிகளுடன் தங்கப் பதக்கத்தைக் கைப்பற்றினார். ஹங்கேரியை வீரர் இஸ்த்வான் பேனி 250 புள்ளிகளுடன் வெள்ளிப் பதக்கத்தையும், ஸ்லோவாகியா வீரர் பாட்ரிக் ஜானி 228.4 புள்ளிகளுடன் வெண்கலப் பதக்கத்தையும் கைப்பற்றினர்.Trending Now: