இலங்கையின் புதிய அதிபர் கோத்தபய ராஜபக்சவுக்கு அமெரிக்கா அட்வைஸ்

19-11-2019 04:35 PM

வாஷிங்டன்

இலங்கை அதிபராக தேர்வு செய்யப்பட்டுள்ள கோத்தபய ராஜபக்சவுக்கு வாழ்த்து தெரிவித்துள்ள அமெரிக்கா, மனித உரிமைகள் மீறப்படாமல் இருப்பதை உறுதிபடுத்துமாறு கோத்தபய ராஜபக்சவுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளது.

இலங்கையில் அதிபர் தேர்தலில், 13 லட்சத்துக்கும் மேற்பட்ட வாக்குகள் வித்தியாசத்தில் கோத்தபய ராஜபக்ச அமோக வெற்றிபெற்றார். பின்னர், நேற்றைய தினம், இலங்கையின் 8வது அதிபராக கோத்தபய ராஜபக்ச பதவியேற்றுக்கொண்டார்.

இந்நிலையில், இலங்கையின் புதிய அதிபர் கோத்தபய ராஜபக்சவுக்கு அமெரிக்கா வாழ்த்து தெரிவித்துள்ளது. அமெரிக்க வெளியுறவுத்துறை செயலாளர் மைக் பாம்பியோ செய்தியாளர்களிடம் பேட்டியளித்தார்.

அப்போது பேசிய அவர்,”ஜனநாயக முறையில் தேர்தல் நடத்திய இலங்கை மக்களுக்கும், புதிய அதிபராக தேர்வு செய்யப்பட்டுள்ள கோத்தபய ராஜபக்சவுக்கும் அமெரிக்க அரசு வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறது. அவருடன் இணைந்து பணியாற்றவும் தயாராக உள்ளோம்.

இலங்கையில் பாதுகாப்பு துறையில் சீர்திருத்தம், நம்பகத்தன்மை, மனித உரிமைகளுக்கு மரியாதை மற்றும் மீண்டும் வன்முறை நிகழ்வுகள் நிகழாமல் இருப்பதையும் கருத்தில்கொண்டு அதிபர் கோத்தபய ராஜபக்சே செயலாற்றுவார் என நாங்கள் நம்புகிறோம்.

மேலும் நேர்மையாகவும், வெளிப்படைத்தன்மையுடனும் நடைபெற்று முடிந்துள்ள தேர்தல் மூலமாக இலங்கையில் ஜனநாயகத்தின் வலிமை மீண்டும் நிரூபிக்கப்பட்டுள்ளது” என்று மைக் பாம்பியோ கூறினார்.Trending Now: