15-11-2019 03:08 PM
![]() | ![]() |
இமாசல பிரதேசத்தில் ஆப்பிள் தோட்ட விவசாயிகள் பலர் பருவநிலை மாற்றத்தால் மாதுளை பயிரிட தொடங்கியுள்ளனர். இனி ஆப்பிள் மரங்களை வளர்ப்பது லாபகரமானதாக இருக்காது என்றும் கருதுகின்றனர்.
இமாசலபிரதேசத்தில் குல்லு மாவட்டத்தில் உள்ள மங்களூர்–பஞ்சார் பகுதியைச் சேர்ந்த விவசாயி பத்மதேவ் (52). இவர் கடந்த முப்பது வருடங்களாக ஆப்பிள் மரங்களை வளர்த்து வந்தார். ஆனால் சில வருடங்களாக ஆப்பிள் வளர்ப்பதை கைவிட்டுள்ளார். இமயமலையின் அடிவாரத்தின் கடைகோடியில் அமைந்துள்ள இவரது கிராமத்தில் ஆப்பிள் மரங்களை வளர்ப்பது இயலாததாகி விட்டது. காரணம் பருவநிலை மாற்றமே. பருவநிலை மாற்றத்தால் ஆப்பிள் மரங்களை வளர்ப்பதற்கு உரிய குளிர்ச்சி இல்லாமல் போய் விட்டது என்கின்றனர்.
இமாசல பிரதேசத்தில் மாறிவரும் பருவநிலையால் ஆப்பிள் மரங்களை வளர்ப்பது கஷ்டம். எனவே இதற்கு தீர்வு காணும் வரை விவசாயிகள் மாற்றாக மாதுளை, பிளம்ஸ், பீச் ஆகிய பழ மரங்களை வளர்க்குமாறு தோட்டக்கலைத்துறை நிபுணர்கள் ஆலோசனை வழங்கியுள்ளனர்.
இவர்கள் ஆலோசனை வழங்குவதற்கு முன்பே பத்மதேவ் போன்ற விவசாயிகள் ஆப்பிள் மரம் வளர்ப்பதை கைவிட்டு விட்டு, மாதுளை மரங்களை வளர்க்க ஆரம்பித்து விட்டனர். அவரைப் பொருத்தமட்டில் ஆப்பிள் மரங்களை வளர்ப்பதற்கு தகுந்த பருவநிலை இல்லை என்பது மட்டுமல்ல, பொருளாதார ரீதியாக மாதுளை வளர்ப்பதே இலாபகரமானதாக உள்ளது.
காஷ்மீர் ஆப்பிள் போன்றே இமாசலபிரதேச ஆப்பிளும் புகழ் பெற்றது. பருவநிலை மாற்றத்தால் இமயமலை அடிவாரத்தின் தொலைதூர பகுதியில் உள்ள பஞ்சார் போன்ற பகுதி விவசாயிகள் ஆப்பிள் மரம் வளர்ப்பது லாபகரமானதாக இல்லை என்று உணர்ந்து வேறு பழ மரங்களை வளர்க்க ஆரம்பித்து விட்டனர்.
இமயமலை பிராந்திய மாநிலங்களில், குறிப்பாக மலை அடிவாரத்தில் இருந்து தொலைவில் உள்ள பகுதிகளில் பருவநிலை மாற்றத்தால் விவசாயம், பழமர தோட்டங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டிருப்பதாக ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர், ( ‘இமயமலை பிராந்தியம்’ எனப்படுவது ஜம்மு–காஷ்மீர், இமாசலபிரதேசம், உத்தராஞ்சல், சிக்கிம், அருணாசலபிரதேசம், மேகலாயா, நாகாலாந்து, மணிப்பூர், மிசோரம், மற்றும் அஸ்ஸாம் மாநிலத்தின் திமா ஹாசோ, கப்ரிஅன்லாங், மேற்கு வங்கத்தின் டார்ஜிலிங், கலிம்போங் ஆகிய மலைபிரதேச மாவட்டங்கள் அடங்கியவை.)
குல்லு மாவட்டத்தில் பல பகுதிகளில் இந்திய இமயமலை பருவநிலை தழுவல் திட்டத்தின் படி, தோட்ட பயிர்கள் பற்றி ஆராய்ச்சி மேற்கொள்ளப்பட்டது. அதில் பஞ்சார் நகரமே பருவநிலை மாற்றத்தால் அதிக அளவு பாதிக்கப்பட்டு இருப்பது தெரியவந்தது.
![]() | ![]() |
பஞ்சார் பகுதி விவசாயிகள் சுவையான ராயல் ரக ஆப்பிள் மரங்களையே வளர்த்து வந்தனர். இந்த ரக பழம் விளைய 800 முதல் 1,200 மணி நேரம் குளிர்ச்சியாக இருக்க வேண்டும். வசந்த காலத்தில் வெப்பம் அதிகரிப்பதும், கோடை, குளிர் காலங்களில் வெப்பம் அதிகரித்து குளிர் காலம் குறைவாக உள்ளது. இதனால் ஆப்பிள் உற்பத்தி குறைகின்றது.
அத்துடன் பஞ்சார் பகுதியில் நிலப்பரப்பும் கடினமாக உள்ளது. நிலமும் துண்டு துண்டாக உள்ளது. தண்ணீர் பற்றாக்குறை அதிகமாக உள்ளது. குளிர் குறையும் போது ஆப்பிள் மரங்களுக்கு அதிக அளவு தண்ணீர் தேவைப்படுகிறது. தண்ணீர் பற்றாக்குறையால் ஆப்பிள் மரம் வளர்க்க முடியாது என்ற நிலை ஏற்பட்டுள்ளது.
எனவே தோட்ட பயிர்கள் பற்றிய ஆராய்ச்சியின் முடிவில், மாதுளை போன்ற பழ மரங்களை வளர்க்கலாம் இவைகளுக்கு 600 முதல் 800 மணி நேரம் குளிர்நிலை இருந்தாலே போதுமானது என பரிந்துரைக்கப்பட்டது. அத்துடன் அதிக ஆப்பிள் மரங்கள் உள்ள பகுதிகளில் சொட்டு நீர் பாசன முறையில் நீர்பாய்ச்ச வேண்டும் என்றும் கூறப்பட்டது.
பாலாம்பூரில் உள்ள அடிப்படை விஞ்ஞான கல்லூரியைச் சேர்ந்தவர்கள் செய்த ஆய்வில், பஞ்சார் பகுதியில் உள்ள விவசாயிகளில் 63 சதவிகிதம் பேர் ஆப்பிளுக்கு பதிலாக மாதுளை, பீச், கிவி, பேரிக்காய், முட்டைகோஸ் போன்றவைகளை பயிரிடுகின்றனர் என்பது தெரியவந்தது.
ஆப்பிள் மரம் நட்டு ஒன்பது வருடத்திற்கு பிறகே பழங்கள் காய்க்க ஆரம்பிக்கும். மாதுளை மரங்களை நட்டு நான்காம் வருடத்திலேயை பழங்கள் காய்க்க ஆரம்பிக்கும். “ஆப்பிள் வளர்ப்பது லாபகரமாக இல்லாத காரணத்தால், நான் மாதுளை மரங்களை வளர்க்க தொடங்கினேன்” என்று விவசாயி பத்மதேவ் தெரிவித்தார்.
இவருக்கு சொந்தமாக உள்ள ஒன்றரை ஏக்கர் நிலத்தில் மாதுளை பயிரிட்டு பத்து லட்சம் ரூபாய் சம்பாதித்துள்ளார். இந்த மாதுளை மரங்களை பராமரிக்க வருடத்திற்கு ரூ.90 ஆயிரம் செலவாகியுள்ளது. செலவுபோக வருடத்திற்கு ரூ.9 லட்சம் வருமானம் கிடைக்கின்றது. எனவே மாதுளை வளர்ப்பதே லாபகரமானது என்கின்றார் பத்மதேவ்.
பஞ்சார் பகுதியைச் சேர்ந்த யோதிஸ்ரா ரதோரி என்ற மற்றொரு விவசாயி 200க்கும் அதிகமான மாதுளை மரங்களையும், பேரிக்காய் மரங்களையும் வளர்க்கின்றார். இவர் கூறுகையில், “நான் 14 வருடங்களாக மாதுளை, பேரிக்காய் மரங்களை வளர்த்து வருகின்றேன். இந்த மரங்களில் பழங்கள் காய்க்க தொடங்கியது முதல் நல்ல வருமானம் கிடைக்கின்றது. இதில் இருந்து வருடத்திற்கு ரூ. 8 லட்சம் வரை வருமானம் கிடைக்கின்றது” என்கின்றார்.
பஞ்சார் பகுதியைச் சேர்ந்த முற்போக்கான விவசாயியான மோதிலால், இந்த பகுதியில் ஆப்பிள் மரங்களை வளர்ப்பது இயலாது என்று கருதிய உடன் மாதுளை, மஸ்ரூம், மிளகாய் போன்றவைகளுக்கு மாறினார். இவர் சொட்டு நீர் பாசன முறையில் தண்ணீர் பாய்ச்சுகின்றார்.
ஆப்பிளுக்கு பதிலாக மாதுளை மரங்களை வளர்ப்பது லாபகரமானதாக இருந்தாலும், இதற்கு அதிக தடவை பூச்சி கொல்லி மருந்து அடிக்கவேண்டியதுள்ளது. ஆப்பிளுக்கு ஐந்து அல்லது ஆறு முறை பூச்சி கொல்லி மருந்து அடித்தால் போதுமானது. ஆனால் மாதுளைக்கு பத்து முதல் 14 முறை பூச்சி கொல்லி மருந்து அடிக்கவேண்டியதுள்ளது.
மக்கள் அதிக அளவு பூச்சி கொல்லி மருந்து அடித்த பழங்களை விரும்புவதில்லை. மாதுளைக்கு அதிக அளவு பூச்சி கொல்லி மருந்து அடிக்கின்றனர் என்ற தகவல் பரவிய பிறகு, மாதுளை பழங்களை விற்பனை செய்து மிக கஷ்டமாக உள்ளதாக யோதிஸ்ரா ரதோரி கூறுகின்றார்.
இமாசலபிரதேச தோட்டக்கலைத்துறை அதிகாரியான மோதிலால் நிகி கூறும் போது, “மாதுளை பழங்களில் பூச்சிகள் முட்டையிட்டு குஞ்சு உற்பத்தியாகின்றது. இதனால் பழங்கள் கெட்டுப் போகின்றன. இதை தடுக்கவே பூச்சி கொல்லி மருந்து அடிக்கின்றனர். இதனால் மாதுளை பழங்களை வாங்க பலர் விரும்புவதில்லை” என்று தெரிவித்தார்.
பருவநிலை மாற்றத்தால் விவசாயிகள் ஆப்பிளுக்கு பதிலாக மாதுளை, பேரிக்காய், பிளம்ஸ் போன்ற மரங்களை வளர்க்க தொடங்கினார்கள். இவற்றில் ஆப்பிளை விட வருவாய் இருமடங்காக கிடைக்கின்றது. அதே நேரத்தில் மீண்டும் ஆப்பிள் மரங்களை வளர்க்க சிலர் விரும்புகின்றனர். குறைந்த அளவு குளிரிலும் வளரும், மலை அடிவாரங்களில் வளரக்கூடிய புதிய ஆப்பிள் ரகங்களை உருவாக்க வேண்டும் என்று விவசாயிகள் எதிர்பார்க்கின்றனர். தோட்டக்கலைத்துறை அதிகாரியான மோதிலால் நிகி, “குறைந்த குளிர்நிலை உள்ள பஞ்சார் போன்ற மலை அடிவாரங்களில்,அதிக ஆப்பிள் பழங்கள் வளரக்கூடிய ஆப்பிள் மரங்களை தோட்டக்கலைத்துறை அறிமுகப்படுத்தி வருகிறது” என்று தெரிவித்தார்.
பொதுவாக ஒரு பிகா நிலத்தில் (இரண்டரை பிகா=1 ஏக்கர்) 100 ஆப்பிள் மரங்களை நட்டு வளர்க்கின்றனர். புதிய ரக ஆப்பிள் மரங்களை ஒரு பிகாவுக்கு 200 முதல் 250 மரங்களை நட்டு வளர்க்கலாம். அதிக பூச்சி கொல்லி மருந்து தேவைப்படும் மாதுளைக்கு பதிலாக, புதிய ரக ஆப்பிள் மரங்களை நடலாம். சில விவசாயிகள் ஏற்கனவே இந்த புதிய ரக ஆப்பிள் மரங்களை நட்டு வளர்க்க தொடங்கியுள்ளனர். ஆனால் மிக சிறிய பரப்பளவில் மட்டுமே மரங்களை வளர்க்கின்றனர். இந்த புதிய ரக ஆப்பிள் மரங்களை அதிக பரப்பளவில் வளர்க்க வேண்டும். இதனுடன் மாதுளை மரங்களையும் வளர்க்கலாம். ஆப்பிள் பழங்கள் ஆகஸ்ட் மாத வாக்கில் விற்பனைக்கு வரும். ஆனால் இந்த புதிய ரகம் ஜூன், ஜூலை மாதங்களில் பறித்து விற்பனைக்கு அனுப்பலாம். இதனால் விற்பனை வாய்ப்பும் பிரகாசமாக இருக்கும்” என்று மோதிலால் நிகி தெரிவித்தார்.
நன்றி: வில்லேஜ் ஸ்கொயர்
இணையதளத்தில் அதர் பர்வாஸ்.