பிரபலமில்லா விளையாட்டில் பிரபலமான வீரர்!!

14-11-2019 08:02 PM

விளையாட்டுக்கள் என்றால் தனி விளையாட்டு மற்றும் குழு விளையாட்டு என்று இரண்டு வகையாக பிரிக்கலாம். இதில், தனி விளையாட்டை எடுத்துக்கொண்டால், தடகளம், நீச்சல், பளு தூக்குதல், வட்டு எறிதல் என பல விளையாட்டுகள் உள்ளன. ஆனால், அவற்றில் வெளியே தெரியாத பல விளையாட்டுகள் உள்ளன. அப்படிபட்ட ஒரு விளையாட்டைதான் நாம் பார்க்க இருக்கின்றோம்.

தனி விளையாட்டான பளு தூக்குதலை நாம் பார்த்திருப்போம். இதேபோல், மற்றொரு விளையாட்டு உள்ளது. அதன்பெயர் ”கெட்டில் பெல் (Kettlebell)” விளையாட்டு. அது என்ன கெட்டில் பெல் என்று பலரும் நினைப்பீர்கள். அதுகுறித்து நாம் இப்போது காண்போம்.

கெட்டில் பெல் வரலாறு

கெட்டில் பெல் விளையாட்டு என்பது கெட்டில் பெல்கள், (எடை குண்டுகள்) மூலம் விளையாடப்படுகின்றது. இந்த கெட்டில் பெல்கள் முதலில் 18ம் நூற்றாண்டில், பயிர்களை எடைபோட பயன்படுத்தப்பட்டன. பின்னர், 19ம் நூற்றாண்டில் சர்கஸில் ஸ்டிராங்மேன் (பயில்வான்கள்) பயன்படுத்தினர். 

பின்னர், இந்த கெட்டில்பெல்கள் 19ம் நூற்றாண்டில் ரஷ்யாவில் விளையாட்டுகளுக்காக பயன்படுத்தப்பட்டன. இந்த உபகரணத்திற்கு 20ம் நூற்றாண்டில்தான் கெட்டில்பெல் என்ற பெயர் வந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

விளையாட்டு உபரணங்கள்

பளு தூக்குதலைப் போன்று, இந்த விளையாட்டில் கெட்டில் பெல்கள் என்ற உபகரணங்கள் பயன்படுத்தப்படுகின்றன. கெட்டில் பெல்கள் என்பது இரும்பு அல்லது ஸ்டீல் குண்டுகள். இந்த குண்டுகள், ”பூட்” என்று அளவிடப்படும். ஒரு பூட் என்பது 16.38 கிலோ கிராம் ஆகும். 

இந்த கெட்டில் பெல்களில் பிடிப்பதற்கு வாட்டமாக கைப்பிடிகள் உள்ளன. இந்த கெட்டில்பெல்கள் 4, 8, 10, 12, 16, 20, 24, 28, 32 கிலோ ஆகிய எடைகளில் கைப்பிடியுடன் உள்ளன.

போட்டி விதிகள்

இந்த விளையாட்டு மூன்று முக்கிய லிஃப்டுகளைக் கொண்டது. அவை, ஸ்னாட்ச், ஜெர்க் மற்றும் லாங் சர்கிள் ஆகியவை ஆகும். இதில் ஜெர்க் மற்றும் லாங் சைக்கிள் பிரிவுகளில் ஒன்று அல்லது ஒரே எடைகொண்ட இரண்டு கெட்டில் பெல்கள் மூலம் விளையாடப்படும்.

இதில் குண்டுகளை கீழிருந்து கைகளால் தலைக்குமேல் தூக்கி பின்னர் இறக்கவேண்டும். இவ்வாறு எத்தனை முறை, எவ்வளவு நேரம் தூக்குகிறோம் என்பதுதான் போட்டியின் முக்கிய விதிகள் ஆகும். குறைந்தபட்சம் 10 நிமிடம் முதல் 30 நிமிடம் வரை அவகாசம் உண்டு, அந்த நேரத்தில் அந்த குண்டுகளை தூக்கி இறக்கவேண்டும்.

சீரான உடல் நலம்

கெட்டில் பெல் விளையாட்டை விளையாடுவதால், உடலின் மார்புத் தசைகளும் முதுகுப் பகுதியில் உள்ள தசைகளும் வலுவடையும். சுவாசக்கோளாறுகள் சீராகும். இதனால், மனதளவில் இருக்கும் பிரச்சனைகளும் தீரும் என்று கூறப்படுகிறது. 40 வயதுக்கு மேற்பட்டோரும் இந்த கெட்டில் பெல் விளையாட்டை பயிற்சியாளர்களின் உதவியுடன் பயின்றால், உடல்நிலை சீரடையும். இந்த அடிப்படையில் இதனை யோகாசனம் மாதிரி என்று கூடச்சொல்லலாம்

பிரபல வீரர் விக்னேஷ் ஹரிஹரன்

இப்படி மிகவும் சவாலான இந்த விளையாட்டை இந்தியாவில் யாரேனும் விளையாடுகிறார்களா? யாரேனும் சர்வதேச போட்டிகளில் கலந்துகொண்டுள்ளனரா? பதக்கங்களை யாரேனும் வென்றுள்ளார்களா என்று பலரும் யோசிக்கத் தொடங்கிவிடுவீர்கள்.

கெட்டில் பெல் விளையாட்டுப் போட்டியில் தலைச் சிறந்து விளங்கும் வீரர் இந்தியாவில் உள்ளார். அதுவும் நம் தமிழகத்தில் உள்ளார் என்று கூறினால் யாராவது நம்புவீர்களா? ஆம், தமிழகத்தின் தலைநகர் சென்னையில் வசித்துவரும் விக்னேஷ் ஹரிஹரன் என்பவர்தான் கெட்டில் பெல் விளையாட்டுப் போட்டியில் சர்வதேச அரங்கை திரும்பிப் பார்க்கவைத்து வருகிறார்.

தஞ்சாவூரைப் பூர்வீகமாக கொண்டுள்ள விக்னேஷ் ஹரிஹரினின் தந்தை வாலிபால் வீரர், தாத்தா சிலம்பாட்ட வீரர் என அவரின் குடும்பமே விளையாட்டுத் துறையில் சிறந்து விளங்கும் குடும்பம். சென்னையில் குடிபெயர்ந்த விக்னேஷ் ஹரிஹரன், ஒரு பி.இ பட்டதாரி ஆவார்.

கிரிக்கெட் விளையாட்டில் ஆர்வம்கொண்டிருந்த அவர், ஏழாண்டுகளுக்கு பயிற்சி மேற்கொண்டார். அதில் அடுத்த கட்டத்திற்கு முன்னேறி அணியில் சேரவேண்டும் என்ற தன் விருப்பம், உள்ளூர் அரசியல், குடும்ப பின்னணி உள்ளிட்ட காரணிகளால் நடக்காமல் போனது. இதனால் வருத்தமடைந்த விக்னேஷ் ஹரிஹரன், மனம் தளராமல், நாட்டிற்காக ஏதேனும் சாதனை புரிய வேண்டும் என்ற ஒரே பாதையில் பயணித்தார்.

இவர், சென்னையில் 6 ஆண்டுகளுக்கு முன் ஒரு விளையாட்டுக் கண்காட்சிக்கு சென்றுள்ளார். அதில்தான், கெட்டில் பெல் விளையாட்டு குறித்து அறிந்துள்ளார். அதன்மீது ஆர்வம் தொற்றிக்கொள்ள, அந்த விளையாட்டை கற்றுக்கொள்ளவேண்டும் என்று முடிவு செய்தார்.

இதையடுத்து, அதற்கான கெட்டில் பெல் உருண்டைகளை வாங்கி தீவிர பயிற்சிகளில் இறங்கினார். இந்த விளையாட்டின் அடிப்படைகளைக் தெரிந்துகொள்ள, கொல்கத்தா, மும்பை, டில்லி என நாட்டின் முக்கிய நகரங்களுக்குச் சென்று அலைந்து அதனைக் கற்றுக்கொண்டார்.

ஐடி துறையில் வேலைப் பார்த்துக்கொண்டிருந்த அவர், தன் கனவுக்காக அந்த பணியையும் விட்டு தன் லட்சியத்தை நோக்கி ஓடினார். பொருளாதாரத்தில் சற்று பின் தங்கி இருந்த அவருக்கு அவரின் குடும்பத்தினர் ஆதரவாக இருந்தனர்.

பின்னர், மாநில போட்டிகளில் 3 முறையும், தேசிய அளவிலான போட்டிகளில் 4 முறையும் பதக்கங்களை அவர் வென்று அசத்தினார்.

இதன் அடுத்தகட்டமாக சர்வதேச போட்டிகளிலும் தன் தடத்தை பதிக்கவேண்டும் என்று எண்ணினார். அதற்கு, தன்னை மேலும் மெருகேற்றிக்கொள்ள, மேற்குவங்க மாநிலம் கொல்கத்தாவை சேர்ந்த அர்னாவ் சர்க்காரிடம் (Arnav Sarkar) பயிற்சி மேற்கொண்டார்.

இதையடுத்து, இந்தோனேசியாவில் கடந்த ஆண்டு நடைபெற்ற சர்வதேச போட்டியில் தங்கப் பதக்கத்தை தட்டிப் பறித்து வந்தார்.

இந்நிலையில், கடந்த 2019 நவம்பர் 1ம் தேதிமுதல் 6ம் தேதிவரை ஆஸ்திரேலிய தலைநகர் மெல்போர்னில் சர்வதேச கெட்டில் பெல் விளையாட்டுப் போட்டி நடைபெற்றது. இதில் ஆடவர் பிரிவில், நம் வீரர் விக்னேஷ் ஹரிஹரன் தங்கப் பதக்கத்தை வென்று அசத்தியுள்ளார்.

அதில், இரண்டு கைகளிலும், தலா 24 கிலோ எடைகொண்ட குண்டுகளைத் தூக்கும், ஜெர்க் போட்டியில், 10 நிமிடத்தில், 61 முறை தூக்கி இறக்கியுள்ளார். மேலும், 24 கிலோ குண்டை ஒரு கையில் மாற்றித் தூக்கும், ஸ்னாட்ச் வகை போட்டியில், 93 முறை தூக்கி இறக்கி வெற்றி இலக்கை எட்டியுள்ளார்.

இது மட்டுமல்லாமல், அதைத்தொடர்ந்து நடைபெற்ற ஹாப் மாரத்தான்( half marathon) என்னும், 30 நிமிடங்களில், 24 கிலோ எடைகொண்ட குண்டை, 232 முறை தூக்கி இறக்கி, வெள்ளிப் பதக்கத்தை கைப்பற்றினார்.

இப்படி பல பதக்கங்களை வென்று, தமிழகம் மட்டுமல்லாமல் இந்தியாவுக்கே பெருமை சேர்த்துள்ளா விக்னேஷ் ஹரிஹரன் பல சவால்களையும், தடைகளையும் கடந்துதான் இந்த உச்சத்தை அடைந்துள்ளார் என்பதில் ஐயமில்லை.

பொருளாதாரத்தில் பின் தங்கியிருக்கும் அவர், ஆஸ்திரேலியாவில் நடைபெற்ற போட்டியில் பங்கேற்க, வெளியே கடன் வாங்கி சென்று போட்டியில் கலந்துகொண்டார்.

இந்த விளையாட்டில் தமிழகத்தில் இருந்து பல வீரர்கள் சிறந்துவிளங்கவேண்டும் என்று விரும்பிய விக்னேஷ் ஹரிஹரன், ஒரு ஜிம்மை தொடங்கி, அதில் 30க்கும் மேற்பட்டோருக்கு கெட்டில் பெல் விளையாட்டை பயிற்றுவித்து வருகிறார். பெண்கள் நடுத்தர வயதினர் என பலரும் ஆர்வமுடன் பயில்கின்றனர். இதில், சிலர், மாநில மற்றும் தேசிய போட்டிகளில் பதக்கங்களை வென்று வருகின்றனர்.

இப்படி, பல சவால்களை சந்தித்தும், கெட்டில் பெல் விளையாட்டில் பல வீரர்களை உருவாக்கவேண்டும் என்று அவர்கள் பயிற்சி அளித்துவரும் விக்னேஷ் ஹரிஹரன் பாராட்டிற்குரியவர். நிதி நிலையில் பின் தங்கி இருந்தும், அதை பெரிதும் பொருட்படுத்தாமல், தன் இலக்கை நோக்கி பயணித்து வரும் விக்னேஷ் ஹரிஹரன் போன்றவர்கள் இந்த கால இளைஞர்களுக்கு பெரும் முன் மாதிரியாக திகழ்வார் என்பதில் எந்தவித சந்தேகமும் இல்லை. 

விளையாட்டுத் துறையில் சிறந்து விளங்கும் வீரருக்கு வழங்கும் விருதான, அர்ஜுனா விருதுக்கு இந்த மாதிரியான உறுதியான கள வீர்ர்கள்தான் தகுதியானவர்கள் என்பதில் சந்தேகமில்லை. இதுபோன்ற வீரர்களை, மத்திய மாநில அரசுகள் கண்டறிந்து ஊக்குவிக்கவேண்டும். அப்போதுதான், அடையாளம் தெரியாத வீரர்களும், விளையாட்டுகளும் நாடு முழுவதும் பிரபலமடையும்.

கிரிக்கெட், பேட்மிண்டன் என பிரபல விளையாட்டுகளை மட்டும் பயில்வதை விட, இதுபோன்ற பரீட்சயமில்லா விளையாட்டுகளை தேர்வு செய்து கற்பதன்மூலம், அந்த விளையாட்டை நாடு முழுவதும் கொண்டுசெல்லாம்.

கெட்டில் பெல் பயிற்சி பெற விரும்புவர்கள் தொடர்புக்கு: 95000 55470Trending Now:
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
வாசகர் கருத்துக்கள் :

selvan 2019-12-13 18:43:12
super

Hari krishnan 2019-11-15 10:05:09
Super pa nice article Keep growing up

D.Guna sekhar 2019-11-14 21:45:02
Super தம்பி அருமையான article கெட்டில் பெல் விளையாட்டு பற்றி மற்றும் விக்னேஷ் ஹரிஹரன் அவர்கள் பற்றி தெரிவித்ததற்கு மிக்க நன்றி தம்பி.... இதுபோன்ற articles ஐ மேலும் மேலும் எதிர்பார்க்கிறேன்