நாட்டின் முதல் பிரதமர் ஜவகர்லால் நேருவின் 130வது பிறந்தநாள்: அரசியல் தலைவர்கள் மரியாதை

14-11-2019 10:19 AM

புதுடில்லி,        

நாட்டின் முதல் பிரதமர் ஜவகர்லால் நேருவின் 130வது பிறந்தநாளை முன்னிட்டு, அவரது நினைவிடத்தில் காங்கிரஸ் இடைக்காலத் தலைவர் சோனியா காந்தி, முன்னாள் குடியரசு தலைவர் பிரணாப் முகர்ஜி, பிரதமர் மன்மோகன் சிங் ஆகியோர் மலர்தூவி மரியாதை செலுத்தினர்.

இந்திய நாட்டின் முதல் பிரதமர் ஜவகர்லால் நேருவின் 130வது பிறந்தநாள் இன்று நாடு முழுவதும் கொண்டாடப்பட்டு வருகிறது. இதையொட்டி நாடு முழுவதும் அவரது திருவுருவச் சிலைகள் மற்றும் திருவுருவப்படங்கள் அலங்கரிக்கப்பட்டு மக்கள் மரியாதை செலுத்தி வருகின்றனர்.

நினைவிடத்தில் மரியாதை

டில்லியில் உள்ள ஜவகர்லால் நேரு நினைவிடத்தில் காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் சோனியா காந்தி, முன்னாள் குடியரசு தலைவர் பிரணாப் முகர்ஜி, முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் உள்ளிட்ட பல்வேறு தலைவர்கள் மலர்தூவி மரியாதை செலுத்தினர்.

மேலும், பாராளுமன்ற உறுப்பினர்கள், காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்கள், ஆயிரக்கணக்கான கட்சித் தொண்டர்கள் என பலரும், நேரு நினைவிடத்தில் மரியாதை செலுத்தி வருகின்றனர்.

இதேபோல் காங்கிரஸ் கட்சியின் அனைத்து மாநில அலுவலகங்கள், கிளை கமிட்டி அலுவலகங்கள் என அனைத்து பகுதிகளிலும் நேருவிற்கு மரியாதை செலுத்தப்பட்டு வருகிறது. அவர் பிறந்தநாளான இன்று நாடு முழுவதும் குழந்தைகள் தினமாக கொண்டாடப்பட்டு வருகிறது.

குடியரசு தலைவர் மரியாதை

குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த் டுவிட்டரில்,”நமது நாட்டின் முதல் பிரதமர் ஜவகர்லால் நேருவை, அவரது 130வது பிறந்தநாளான இன்று நினைவுகூர்கிறேன். ராஷ்டிரபதி பவனில், குழந்தைகள் மற்றும் இளைய கண்டுபிடிப்பாளர்கள் ஆகியோரை காண ஆவலாக உள்ளேன்” என்று பதிவிட்டுள்ளார்.

குடியரசு துணை தலைவர் மரியாதை

குடியரசு துணை தலைவர் வெங்கையா நாயுடு டுவிட்டரில், ”இந்தியாவின் முதல் பிரதமர் ஜவகர்லால் நேருவின் பிறந்தநாளான இன்று என் மரியாதையை அவருக்கு செலுத்துகிறேன்” என்று குறிப்பிட்டுள்ளார்.

பிரதமர் மரியாதை

பிரதமர் நரேந்திர மோடி டுவிட்டரில்,”முன்னாள் பிரதமர் ஜவகர்லால் நேருவுக்கு அவரது பிறந்தநாளான இன்று மரியாதை செலுத்துகிறேன்” என்று பதிவிட்டுள்ளார்.

ராகுல் காந்தி மரியாதை

காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவரும், ஜவகர்லால் நேருவின் கொள்ளுப்பேரனுமான ராகுல் காந்தி டுவிட்டரில்,”சிறந்த அரசியல்வாதி, தொலைநோக்கு பார்வையாளர், அறிஞர், அமைப்பு கட்டமைப்பாளர், நவீன இந்தியாவை கட்டமைத்த கலைஞர் என சிறந்து விளங்கிய நாட்டின் முதல் பிரதமர் ஜவகர்லால் நேருவுக்கு என் மரியாதையை செலுத்துகிறேன்” என்று பதிவிட்டுள்ளார்.