ராமஜன்மபூமி ராமருக்கு சொந்தம்: உச்சநீதிமன்றம் அதிரடி தீர்ப்பு

09-11-2019 11:38 AM

புதுடில்லி,           

அயோத்தியில் சர்ச்சைக்குரிய 2.77 ஏக்கர் நிலத்தில் ராமர் கோவிலைக் கட்ட அனுமதி வழங்கி அதிரடி தீர்ப்பை வழங்கிய உச்சநீதிமன்றம், மசூதி கட்டுவதற்கு வேறு இடத்தில் 5 ஏக்கர் நிலம் வழங்கும்படி உத்தரவு பிறப்பித்துள்ளது.

உத்தரபிரதேச மாநிலம், அயோத்தியில் உள்ள சர்ச்சைக்குரிய 2.7 ஏக்கர் நிலம் யாருக்குச் சொந்தம் என்பது தொடர்பான வழக்கில், சன்னி வக்ஃபு வாரியம், நிர்மோஹி அஹாரா, ராம் லல்லா ஆகிய 3 தரப்பினரும் சரிசமமாகப் பகிர்ந்துகொள்ளவேண்டும் என்று அலகாபாத் உயர்நீதிமன்றம் கடந்த 2010ம் ஆண்டு தீர்ப்பளித்தது.

இந்த தீர்ப்பை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் 14 மேல்முறையீட்டு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. இந்நிலையில், சர்ச்சைக்குரிய நிலம் யாருக்கு சொந்தம் என்பது தொடர்பான வழக்கில் தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய், நீதிபதிகள் டி.ஒய் சந்திரசூட், அப்துல் நசீர், அசோக் பூஷன், போப்டி ஆகிய 5 நீதிபதிகள் கொண்ட அரசியல் சாசன அமர்வு விசாரணை நடத்தியது. மொத்தம் 40 நாள்கள் இடைவெளி இல்லாமல் விசாரணை நடந்தது

வழக்கு தொடர்பான அனைத்து தரப்பு வாதங்களும் முடிவடைந்த நிலையில், அந்த வழக்கின் தீர்ப்பு நவம்பர் 9ந்தேதி இன்று காலை 10.30 மணியளவில் உச்சநீதிமன்றம் வழங்கியது.

ஒருமித்த தீர்ப்பு

உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் அயோத்தி வழக்கில் தீர்ப்பை வாசிக்கும் முன்,”இந்த வழக்கில், 5 நீதிபதிகளும் ஒருமித்த தீர்ப்பை வழங்குகிறோம். தீர்ப்பை வாசிக்க அரைமணி நேரம் ஆகும்” என தெரிவித்தார்.

பின்னர் தீர்ப்பை வாசிக்கத் தொடங்கிய தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய்,”சர்ச்சைக்குரிய இடம், இரு மதத்தினராலும் தங்கள் நம்பிக்கையை வெளிப்படுத்தக்கூடிய இடமாக இருந்துள்ளது. அயோத்தி ராமர் பிறந்த இடம் என இந்து மக்கள் நம்புகின்றனர். இதை மறுக்க இயலாதது. ஆனால், நிலத்தின் உரிமையை வெறும் நம்பிக்கையின் அடிப்படையில்வழங்க இயலாது.

மைதானத்தில் மசூதி கட்டப்படவில்லை

பாபர் மசூதி காலியான இடத்தில் கட்டப்படவில்லை. பாபர் மசூதி இருந்த இடத்தில் முன்னர் இருந்த கட்டுமானங்கள் மீது தான் பாபர் மசூதி கட்டப்பட்டுள்ளது. அந்த புராதன அமைப்புகள் இஸ்லாமியர்களின் கட்டுமானங்கள் அல்ல.

பாபர் மசூதி இருந்த இடத்தில் 12வது நூற்றாண்டில் கோவில் இருந்ததை இந்திய தொல்லியல் துறை கண்டுபிடித்துள்ளது. 12 மற்றும் 16ம் நூற்றாண்டுக்கு இடையே அயோத்தியில் சர்ச்சைக்குரிய இடத்தில் என்ன இருந்தது என்பதற்கு தெளிவான ஆதாரம் இல்லை. 12வது நூற்றாண்டில் இருந்ததாக கூறும் கோவிலின் அமைப்பு குறித்து தொல்லியல் துறை சரியான விளக்கங்கள் அளிக்கவில்லை. சர்ச்சைக்குரிய நிலத்தின் மையப் பகுதியில் ராமர் பிறந்தார் என்பது இந்துக்களின் நம்பிக்கையாக உள்ளது.

அந்த இடத்தை பாபர் மசூதி என முஸ்லிம்கள் அழைக்கின்றனர். பாபர் மசூதி மிர்பாக்கி என்பவரால் கட்டப்பட்டுள்ளது. பாபர் மசூதி இடம் தங்களது என இஸ்லாமிய அமைப்புகள் நிரூபிக்கவில்லை” என்று உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி தெரிவித்தார்.

ஆதாரங்கள் இல்லை

மேலும்,”நிலத்தின் உள்பகுதியில் இஸ்லாமியர்கள் தொழுகை நடத்தியுள்ளனர். ஆனால், அந்த மையப்பகுதி நிலத்துக்கான  உடமை ஆதாரங்கள் இஸ்லாமியர்களிடம் இல்லை.

நிலத்தின் வெளிப்பகுதியில் இந்துக்கள் வழிபாடு நடத்தியுள்ளனர். அந்த நிலம் இந்துக்களுக்கு உரிமையானது என்பதற்கு ஆதாரம் உள்ளது. எந்த மதமாக இருந்தாலும் அவர்களின் வழிபாட்டு உரிமை சமமாகவே மதிக்கப்படவேண்டும்” என்றும் தலைமை நீதிபதி தெரிவித்தார்.

மனுக்கள் தள்ளுபடி

பின்னர், ஷியா வக்பு வாரியத்தின் மேல்முறையீட்டு மனு மிகவும் தாமதமாக தாக்கல் செய்யப்பட்டுள்ளது. அதற்கான் ஏற்கத் தகுந்த காரணங்களும் தெரிவிக்கப்படவில்லை. அதனால் அவர்களின் மேல்முறையீட்டு மனுவைத் தள்ளுபடி செய்து உச்சநீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது.

மேலும், தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய், நிர்மோகி அகாரா மேல்முறையீட்டு மனுவிலும், ராமஜன்ம பூமி நிலத்தில் தங்களுக்கான உரிமையை உறுதி செய்யும் தகுந்த காரணங்கள் கூறப்படவில்லை  அதனால் நிர்மோகி அகாராவின் மனுவும் விசாரணைக்கு உகந்தது அல்ல என அதனையும் தள்ளுபடி செய்தார்.

பாப்ரி மசூதியை இடித்தது சட்டத்தை மீறிய செயல் என்று உச்சநீதிமன்றம் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.

ராமர் கோவில் கட்டலாம்!

அலகாபாத் உயர்நீதிமன்றம் தனது தீர்ப்பில் அயோத்தி நிலத்தை 3ஆக பிரித்தது தவறு என உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் சுட்டுக்காட்டினார்.

இதையடுத்து, ராம் லல்லா அமைப்பின் மனுவை ஏற்று சர்ச்சைக்குரிய 2.77 ஏக்கர் இடத்தில் ராமர் கோவில் கட்ட அனுமதி வழங்குவதாக உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி அதிரடித் தீர்ப்பு வழங்கினார்.

மேலும், அயோத்தியில் ராமர் கோவில் கட்டுவதற்காக 3 மாத காலத்திற்குள் மத்திய அரசு அறக்கட்டளை ஒன்றை உருவாக்க வேண்டும் என்றும் உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி கூறினார்.

இதே போல் ராமர் கோவில் கட்ட மத்திய அரசு அமைக்கும் அறக்கட்டளையில் நிர்மோஹி அகாராவுக்கு பிரதிநிதித்துவம் வழங்கலாம் என்றும் நீதிபதிகள் தங்களது தீர்ப்பில் குறிப்பிட்டனர்

சன்னி வக்ஃபு வாரியத்திற்கு ஏக்கர் நிலம்

பாபர் மசூதி இருந்த இடத்திற்கு உரிமை கோரிய சன்னி வக்ஃபு வாரியத்திற்கு அவர்கள் ஏற்றுக்கொள்ளும் வகையில் அயோத்தியில் 5 ஏக்கர் பரப்பளவில் மாற்று இடம் வழங்கவும் உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி உத்தரவிட்டார்.

இந்த தீர்ப்பு வெளியானதும், உச்சநீதிமன்றத்திற்கு வெளியே சில வழக்கறிஞர்கள் ஜெய் ஸ்ரீராம் என்று கோஷமிட்டனர். இந்த வழக்கில் தீர்ப்பு வழங்கப்பட்டதையொட்டி நாடு முழுவதும் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

இந்திய நீதித்துறை வரலாற்றில் நீண்ட காலம் தேங்கிக்கிடந்த இரண்டாவது வழக்கான ராமஜன்மபூமி வழக்கில் இன்று தீர்ப்பு வழங்கப்பட்டது.Trending Now: