காவியை பயங்கரவாதம் என்பவர்களுக்கு தக்க பதிலடி கொடுத்துள்ளார் ரஜினி: அர்ஜுன் சம்பத் காட்டம்

08-11-2019 06:12 PM

சென்னை,

காவி என்றால் பயங்கரவாதம் என்பவர்களுக்கு தக்க பதிலடியை ரஜினிகாந்த் அளித்திருப்பதாக, இந்து மக்கள் கட்சித் தலைவர் அர்ஜுன் சம்பத் தெரிவித்துள்ளார்.

சென்னையில்  நடிகர் கமல்ஹாசன் அலுவலகத்தில் இன்று  காலை நடைபெற்ற மறைந்த திரைப்பட இயக்குநர் பாலசந்தர் சிலை திறப்பு விழாவில் கலந்து கொண்டார் ரஜினி.

பிறகு போயஸ்கார்டனில் செய்தியாளர்களிடம் பேசிய ரஜினி,

"என் மீது காவிச்சாயம் பூச முயற்சிக்கின்றனர். திருவள்ளுவர் மீது காவிச்சாயம் பூசியுள்ளனர். திருவள்ளுவரும் சிக்க மாட்டார். நானும் சிக்க மாட்டேன்" எனத் தெரிவித்தார்.

ரஜினிகாந்த் அளித்த பேட்டி தொடர்பாக, தனியார் தொலைக்காட்சிக்குப் பேட்டியளித்த அர்ஜுன் சம்பத், 

ரஜினிகாந்த் மிகத் தெளிவாக நெற்றிப்பொட்டில் அடித்தாற் போன்று காவிச்சாயம் பூசுவது குறித்து பதிலளித்திருக்கிறார். காவி என்கிற நிறத்திற்கு மதம் கிடையாது. சாதி கிடையாது. காவி என்பது ஆன்மிகத்தின் அடையாளம்.

இந்து சமயம், இந்து தர்மம் என்று தான் சொல்வோம். சைவம், வைணவம் என பல்வேறு விதமான சம்பிரதாயங்கள் இருக்கின்றன. இங்கு மதம் என்பது எப்போதும் இருந்தது கிடையாது. திருக்குறளுக்கு மதம் கிடையாது, பகவத் கீதைக்கு மதம் கிடையாது. தேவாரம், திருவாசகத்துக்கும் மதம் கிடையாது.

எங்களுடையது ஒரு கலாச்சாரம், பண்பாடு. இது, மனதைப் பக்குவப்படுத்தக்கூடிய சமயம். ஆன்மிக அரசியலுக்கு சாதி, மதம் கிடையாது.

பிரிட்டிஷ் ஆட்சிக் காலத்திலிருந்து எங்கள் மீது மதவாத முத்திரையை தொடர்ந்து குத்துகின்றனர். காங்கிரஸ் கட்சி எங்களை காவி மதவாதி, காவி பயங்கரவாதம் என்றனர். காவிக்கு என்ன மதம்? விவேகானந்தருக்கு என்ன மதம்? ரஜினி பாபா முத்திரையைக் காட்டுவதை மதவாதம் என்பார்களா? நாங்கள் மதத்திற்கு அப்பாற்பட்டவர்கள். எங்களை மதவாதி எனக்கூறி தனிமைப்படுத்தும் முயற்சியில் சில சக்திகள் ஈடுபடுகின்றனர்.

குத்து விளக்கு ஏற்றுவதை மதவாதம் என சொல்ல முடியுமா? அரசு விழாக்களில் குத்து விளக்கு ஏற்றினால், மதவாத அரசு என்பார்களா? தமிழக அரசு கோபுர சின்னத்தைக் கொண்டுள்ளது. அதனை மதவாத சின்னமாகப் பார்க்க முடியுமா? வள்ளுவர் கோயிலையே இந்து சமய அறநிலையத்துறைதான் நடத்துகிறது.

காவி என்றால் மதம், பயங்கரவாதம், தீவிரவாதம் என முத்திரை குத்துபவர்களுக்கு தக்க பதிலடியை ரஜினி கொடுத்திருக்கிறார்  என்று அர்ஜுன் சம்பத் தெரிவித்தார்.Trending Now: